பக்கம் எண் :


82 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
     மருதத்திணையின் தொழிலும், மள்ளர் முதல் மறையோர் வரை
அங்குள்ள மக்களின் வகையும் கூறப்பெற்றன. மேலே கமுகல்ல கரும்பு -
கழைக்கரும்பு - என்று குறித்த கரும்பினது செய்வினைகளையே தொடர்ந்து
தொடங்கி இப்பாட்டிலே கரும்பு முற்றியபின் - அலை பாய்பவர் - என
எடுக்கப்பெற்றமை காண்க. காவெல்லாம் குழைக் கரும்பு என்றதை
அனுவதித்து அவ்வரும்புகள் மலர்ந்தபின் மொய்த்த வண்டுகளின் ஒசையினை
வண்டிரைத்தெழு சும்மை என்றார்.

     காவிரிப் புதுநீர் வருதல் முதல், முறையே, நாற்று நடுதல் - களை
பறித்தல் - பயிர் வளர்தல் முதலிய செயல்களைக் கூறிவந்தமை காண்க.
பெரும்பான்மை பற்றி நெல்லுக்குக் கூறியவை அவ்வவற்றிற்கேற்றபடி
கரும்புக்கும் சோலைக்கும் கொள்க. சோலை பூக்களுக்காகவும்
பழங்களுக்காகவும் வைக்கப்பெறுவன. முன்னே, சோலையும், அடுத்துக்
கரும்பு, அவற்றை அடுத்து நெல்லும் உள்ளன. இவற்றை அடுத்து, ஊருக்கு
வெளியே தடமும், வேள்விச் சாலையும், வேதம் பயிலும் இடங்களும், கல்வி
பயிலிடமும் அமையும். இஃது அந்நாள் மருதத் திணையின் நாடு நகரங்களின்
அமைப்பு. இவற்றைக் கடந்த பின்னரே ஊரைச் சேரலாம். சண்டேசுர
நாயனார் புராணம் - 3,4,5, பாட்டுக்களும், பிறவும் அங்கங்கே
கண்டுகொள்க.

     இக்காரணம் பற்றியே “கரும்பல்ல நெல்லென்ன கமுகல்ல
கரும்பென்ன” எனவும், “காடெல்லாம் கழைக்கரும்பு கா எல்லாம்
குழைக்கரும்பு” எனவும், மேலே கா - கரும்பு - நெல் - இவற்றைச்
சேர்த்துக் கூறியதென்க. இதுபற்றியே இப்பாட்டிலும் ஆலையும் சோலையும்,
மறையோதையும் சேர்த்துக் கூறியவாறாம். பின்னரும் களமராலையும் -
பெரும் பெயர்ச்சாலையும் (77) - (நாளிகேரம்) செருந்தி முதலியவை
பொருந்திய சோலையும் (78) (79)- சேர்த்துக் கூறுவதையும் காண்க.
அவ்வப்பயிர்கள் வளர்ந்து பயன்றரும் கால அளவுகளைப் பின்பற்றியே
கூறிக்கொண்டு போகும் முறைமையும் காண்க. மரங்கள் நாட்சென்று பலன்
றருதலால் பின்னர்க் கூறப்பெற்றமையும் உணர்க. பிறவும் இவ்வாறேயாம். 18

69. அன்ன மாடு மகன்றுறைப் பொய்கையிற்  
  றுன்னு மேதி படியத் துதைந்தெழுங்
கன்னி வாளை கமுகின்மேற் பாய்வன
மன்னு வான்மிசை வானவிற் போலுமால்.
19

     (இ-ள்.) அன்னம்...படிய - அன்னங்கள் விளையாடுகின்ற பெரிய
துறைகளையுடைய வாவிகளிலே கூட்டமாகிய எருமைகள் வீழ்ந்து
முழுகுதலால்; துதைந்து...பாய்வன - வாளையின் இளமீன்கள் நிரம்ப எழுந்து
அருகிலிருக்கும் சோலையின் கமுக மரங்களின் மேற் பாய்கின்ற தோற்றம்;
மன்னும்...போலுமால் - எங்கும் பொருந்திய வானத்திலே தோன்றி மறையும்
வானவில்லைப் போன்றிருக்கும்.

     (வி-ரை.) அன்னம் ஆடும் அகன்றுறை - முன் 67-வது பாட்டில்
“கோடெல்லாம் மடவன்னம்” என்றதைத் தொடர்ந்து கொண்டு, அந்த
அன்னங்கள் ஆடுகின்ற துறையுடைய பொய்கை என்றார். அன்னம்போன்ற
பெண்கள் குளிக்கும் துறை என்றும் கூறுவர்.

     துன்னும் மேதி படிய - எருமைகள் கூட்டமாகச் செல்லும்
இயல்புடையன அன்றியும் வாவிகளில் புகுந்து கடிதின் உழக்கி நீண்டநேரம்
கிடக்கும் தன்மையுமுடையன. உருவிற் பெரியனவும் அறிவிற் சிறியனவும்
ஆகிய இவை அப்பொய்கையில் வாழ்ந்து விளையாடும் அன்னம்
வாளைகளுக்குத் தமது செயலால் இன்னல் விளைப்பன என்பதும் குறிப்பு.
இவ்வாறு எருமைபோல உலகிலே பல துறையிலும் உழக்கி ஒழுகிப் பிறர்க்கும்
இன்னல் தரும் மாக்கள் பலர். அவர்க்கு அறிவுறுத்திய குறிப்புமாம்.