பக்கம் எண் :


84 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

     பயிலல் - படிதல் இவற்றால் முயற்சியினது சிறப்பும், பாய்தல் -
சாய்தல் இவற்றால் சினத்தின் இழிபும் குறித்தவாறு. சோலையும் வாவியும்
அடுத்துள்ளன என்பதும் குறிப்பு. இது முன்னரே விளக்கப்பெற்றது.

     இனி, களி வண்டு - உயர்ந்த இடத்தில் (சோலையில்) வாழ்ந்து,
உயர்ந்த உணவை (தேனை) உண்ணுதலால் உயர்ந்தகுணமும் செயலும்
மகிழ்ச்சியுடையது என்பார் களிவண்டு என்றார். (களி - மயங்கிய - என்று
உரைப்பாருமுளர்.) இதற்கு மாறாய்த் தாழ்ந்த இடத்திலே (வாவி) வாழ்ந்து,
தாழ்ந்த உணவை (அழுக்கு, பாசி முதலியன) உண்ணுதலால் தாழ்ந்த குணமும்
தாழ்ந்த செயலுமுடையது கயல் மீன் என்பதும் குறிப்பார் பாய் கயல் என்றார்.
இவ்வுண்மையை மனிதர் உலக வாழ்க்கையிலும் பொருத்திக்காண்பது
பயன்தரும் என்பதும் குறிப்பு. இந்நாட் புதிய சீர்திருத்தங்கள் பேசுவோர்
இதனை உய்த்துணர்வாராக.

                                               வேறு

71. சாலிநீள் வயலி னோங்கித் தந்நிகரின்றி மிக்கு  
  வாலிதாம் வெண்மை யுண்மை கருவினாம் வளத்த
                                  வாகிச்
சூன்முதிர் பயலை கொண்டு சுருள்விரித் தரனுக்
                                  கன்பர்
ஆலின சிந்தை போல அலர்ந்தன கதிர்க
                               ளெல்லாம்.
21

     (இ-ள்.) சாலி - நெல்; நீள் வயலின்...விரித்து - நீண்ட வயலிலே
ஓங்கி வளர்ந்து, தமக்கு ஒப்பில்லாமல் மிகுந்து, தூயவெள்ளிய உண்மைக்
கருவின் வளத்தை உடையனவாகி, சூல் முதிர்வதனால் பசலை அடைந்து,
பின்னர்ச் சுருளை விரித்துக்கொண்டு; அரனுக்கு அன்பர் ஆலின சிந்தை
போல - இறைவனுக்கு அன்பர்களுடைய மனம் போலவே; அலர்ந்தன
கதிர்கள் எல்லாம் - கதிர்கள் எல்லாம் அலர்ந்தன.

     (வி-ரை.) நீள்வயலின் சாலி - ஓங்கி - மிக்கு - கரு - வளத்தவாகிப்
பயலைகொண்டு - சுருள் விரித்துக் - கதிர்கள் அலர்ந்தன என்று கூட்டி
முடிக்க.

     கதிர் அலர்தல் என்பது - ஒரு சொல் நீர்மைத்தாகிக் கதிர்களை
அலரச் செய்தன - எனப் பொருள் தரும்; மரம் பூப்பூத்தன என்பதுபோல.
இவ்வாறன்றிப் பயலைகொண்டு என்பதனைப் பயலை கொள்ள எனக்
கொண்டு, சாலி சூல்முதிரவே அதன்பின் சுருள்விரித்துக்கதிர்கள் அலர்ந்தன
என்று உரைத்தலுமாம். பயலை - பசலை எனவும் வரும். வெண்மையும்
பொன்மையும் கலந்ததொரு நிறம்.

     முன் 63-வது பாட்டிலே களை களையப் பெற்ற நெற்பயிர்
காலமுறையாலே வளர்ந்து கதிர் விரியும் செயல்களை ஓங்கி முதலிய அவ்வவ்
வினையெச்சங்களாலே தொடர்ந்து கூறி இப்பாட்டினாற் குறித்தவாறாம்.

     இப்பாட்டு, நெற்பயிர் விளைவிற்கும், அரன் அன்பர் சிந்தைக்கும்
சிலேடையுவமையாக அமைந்தது-

     மேல்வரும் திருப்பாட்டும் இவ்வாறே அமைந்தமையும், இவை இரண்டும்
தொடர் நிலையுவமமாய்த் தொடர்ந்து வருதலும் காணத்தக்கது. இதனைப் பின்
பற்றிய ஆசிரியர் காஞ்சிப்புராண முடையாராகிய எமது மாதவச்
சிவஞானமுனிவர் தம் புராணத்து நாட்டுப் படலத்திற் பல பாடல்கள்
தொடர்ந்து தொடர் நிலை உவமம் கூறியவாறு காண்க.

     இனி, ஓங்குதல் - மிகுதல் - கருவளம் ஆதல் - பயலை கொள்ளுதல்
- சுருள் விரிதல் - கதிர் அலர்தல் என்ற செயல்கள் ஒவ்வொன்றும்
சாலியிலும், அன்பர் சிந்தையிலும் பொருந்துமாறு காண்க.

     ஓங்குதல் சாலி - செழித்து வளர்தல். அன்பர் சிந்தை - மேல்
ஓங்கிநிற்றல் - உயர்ந்த நோக்கமுடையதாதல். “பெரியோர் உள்ளம் போல,
ஓங்குநிலைத் தன்மைய வாய்” (திருக்குறிப்பு - புரா - 88) என்று பின்னர்க்
கூறுதல் காண்க.