பக்கம் எண் :


கண்ணப்பநாயனார்புராணம்1027

 

     தேறுவார்க்கு அமுதமான செல்வனார் - தேறுவார் -
சிவபெருமானே முழுமுதலாகிய பசுபதியாவர் எனத் தெள்ளத் தேறித்
தெளிந்த அறிவுடையவர், கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டைகூடுதல்
என்ற நான்கனுள் தெளிந்து நிட்டை கூடுதலைக் கைவந்தவர்களே தேறுவார்
எனப்படுவர். அவர்களுக்கு இறைவர் அமுதமாகுவர் என்பது. அமுதம் -
நிலைபேறுடையதாய் உள்ளத்தே ஊறும் இன்பவூற்று; மரணத்தை நீக்கும்
இனிய மருந்து. செல்வனார் - அதனாற் குறைவில்லாதவர். "செல்வன்
திருக்காளத்தியு ளப்பன்" என்று திருமறத்தில் நக்கீரர் இப்பகுதியிற் கூறியதும்,
"அடிசார்ந் தவர்க்கு முடியா இன்பம், நிறையக் கொடுப்பினும் குறையாச்
செல்வ" (திருவிடை - மும் - 22) என்று பட்டினத்தடிகள் அருளியதும் இங்கு
நினைவுகூர்க.

     தேறுவார் - "தெள்ளத் தேறித் தெளிந்து தித்திப்பதோர், உள்ளத்
தேறலமுத வொளிவெளி" (தனித் திருக்குறுந்தொகை), " தேறிய தொண்டரைச்
செந்நெறிக்கே, யேற்றுந் தகையன" (திருவித்தம் - திருஇன்னம்பர் - 7)
என்றற்றொடக்கத்து அப்பர் சுவாமிகள் திருவாக்குக்களும் காண்க. "இவரே
முதற்றேவரெல்லார்க்கு மிக்கார், இவரல்ல ரென்றிருக்க வேண்டாம் -
கவராதே, காதலித்தின் றேத்துதிரேற் காளத்தி யாள்வார்நீ, ராதரித்த
தெய்வமே யாம்," (கைலைபாதி - அந்தாதி - 72), "அவர்க்கே யெழுபிறப்பு
மாளாவோ மென்று, மவர்க்கேநாமன்பாவ தல்லாற் - பவர்ச்சடைமேற்,
பாகாப்போழ் சூடு மவர்க்கல்லான் மற்றொருவர்க், காகாப்போ மெஞ்ஞான்று
மாள்" (அற்புதத் திருவந்தாதி - 3) என்றபடி பசுபதியார்க்கு ஆளாய்த்
தொண்டுசெய்வதனையன்றி வேறறியாத் தன்மை யிலே சிறந்தோர்கள்
தேறுவார்
எனப்பெறுவர். "உன்னடியார் தாள் பணிவோ மாங்கவர்க்கே
பாங்காவோம், அன்னவரே யெங்கணவ ராவா ரவருகந்து, சொன்னபரிசே
தொழும்பாய்ப் பணிசெய்வோம், இன்ன வகையே யெமக்கெங்கோ
னல்குதியேல், என்ன குறையுமிலோம்", "எங்கொங்கை நின்னன்பரல்லார்தோள்
சேரற்க, எங்கை யுனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்கக் கங்குல் பகலெங்கண்
மற்றொன்றுங் காணற்க, இங்கிப் பரிசே யெமக்கெங்கோ னல் குதியே,
லெங்கெழிலென் ஞாயி றெமக்கு" (திருவெம்பாவை - 9 - 19) எனவரும்
திருவாசகங்களிற் கூறுவதும் இவர்களது பண்பாம்.

     ஆறுசேர்சடையார் - ஆறு அருட்பெருக்கையும், சடை அன்பின்
நெறியினது விரிவையும் குறிப்பாலுணர்த்துதலின் இங்கு இவ்வாறு கூறினார்.

     அணுகவந்து - சேரும்பொருட்டு வந்து. அணுகுதல் - வேட்டைக்
காட்டிற் சென்று தூரத்தே நின்றவர் இடத்தால் அணிமையில் வருதலும்,
பின்னர்க் காளத்தியாரைப் பிரியாது வலத்தே நிற்கும் நிலைபெற வருதலும்
குறித்தது. திருவடிசார அணைதல் குறிப்பு. "சிவத்தைச் சார அணைபவர்
போல" (752) என்று இதனை முன்னர்க் குறித்ததும் காண்க. முன்னை
நாள்களிற் போலன்றி, இன்று வருதல் மீளாது அணுகி நிற்றலுக்கேயாம்
என்றுணர்த்தினார் என்பதுமாம். இறைவன் அன்பர்க்கு அணுக்கன் என்ற
இயல்பும் காணத்தக்கது.

     அணையா நின்றார் - அணைகின்றனராய். நிகழ்காலத்துவந்த
முற்றெச்சம். வில்லியார் - காலை - போகி - ஆடி (810) - கொண்டு -
அணுகவந்து அணையா நின்றார் (811) - விரைந்தேகுவார் முன் - தீங்கு
செய்ய, - என்று அணையும் போதில் (812) - கண்டு ஒடிவந்தார் (813) என
இந்நான்கு பாட்டுக்களையும் தொடர்ந்து முடிக்க. இவ்வாறன்றி
அணைகின்றாராயினர் என நிகழ்கால வினைமுற்றாகக் கொண்டு
முடித்துரைப்பாருமுண்டு. அணையாநின்றார் - பெயராகக் கொண்டு, (சேரும்
அத்திண்ணனார் என) வினைமுற்றுப் பெயராய் நிற்றலால் முதலில்
அகரச்சுட்டுத்தொக்கி நின்றது என்பர் சுப்பராயச் செட்டியார். 162