பக்கம் எண் :


கண்ணப்பநாயனார்புராணம்1033

 

இறைவனிற் கலந்து தொழும்பாய் அனுபவித்து நிற்பர். சீவன் முத்தர்
நிலையாவது உடல் முதலிய கருவிகரணங்களுடனிருக்கும் போதே
முத்தியைத் தலைக்கூடி நிற்றல். அவர்களது அறிவு, இச்சை, செயல்கள்
இறைவனது திருப்பணிமாத்திரையாய் வியாபரிக்கும் திருப்பணிக்கு
முட்டுப்பாடு வரும்போது அவைகட்கு வாசனையினால் உலகிய லுணர்ச்சி
புலப்பட்டு அவ்விடையூற்றைப் போக்கும் அளவில் தொழிற்படும். இதனையே
753, 803, 806 - ம் திருப்பாட்டுக்களில் விரித்தருளினர். இஃது
அணைந்தோர் தன்மை எனச் சிவஞானபோதம் 12 - ம் சூத்திரத்திற்
கூறப்படுதல் காண்க.

     திண்ணனார் காளத்தியப்பரைக் கண்டபோதே, அவரது அருணோக்கத்
துணையாற் சீவன்முத்த நிலையடைந்தனர். அதன்பின் ஆறு நாளும்
அந்நிலையில் உலகிற் சரித்தனர். சீவன் முத்தர்க்கும் ஒரோவழிப், புறத்தே
அறி விச்சை செயல்கள் வியாபரிக்கு மெனவும், அஃது அவர்க்காகாமையின்
ஆணவ மாயை கான்மிய மென்னு மலங்களைக் களைவர் எனவும், அதற்கு
அவர்தம் செயல் வியாபரிக்குங்காற் சிவாலயத்தைப் பரமேசுவரனெனவே
கண்டு வழிபடுவர் எனவும், அவ்வாறு வழிபட்டுத் தானதுவாய்க் காணுந்
தவர்க்குக் கடைந்த விறகிற் றீக் காணுதல் போல இறைவன் வெளிப்பட்டுத்
தானதுவாய்த் தோன்றியருளுவன் எனவும் சிவஞான போத மாபாடியத்
துரைத்தவை காண்க.

     மீளி வெம்மறவர் - விலங்கின்சாதி - இத்தகைய கொடுமை
செய்வார் மறவரேயாவர்; ஆனால் இத் தேவர்பால் எவர்க்கும் மாறுபாடு
உண்டாதற்கியைபில்லை; இவர் "மேவினார் பிரியாமாட்டா விமலனார் -
ஆவியினினியர்" (818); ஆதலின் இதற்குக் காரணம் அவ்வேடர் என்பாற்
பூண்ட மாறுபாடுதானோ?; என்று எண்ணி எனக்கு மாறா என்றார்.
அவ்வாறு அவர்கள் செய்ததன்றாயின் காரணமின்றியும் ஊறு செய்யும்
குணமுடைய விலங்கின் சாதி விளைத்திருத்தல் வேண்டும்; வெவ்விலங்
குளவென்றஞ்சி இரவு முழுதும் காவல் புரிந்தேனன்றோ? என்று நினைத்தார்.
உளர் கொலோ? - கொல் ஐயப்பாடு உணர்த்துவதாதலின் தமக்குமாறாக
வேடர் உளர் என்பதில் திண்ணனார் துணிவுபெறவில்லை. ஆதலின்
அவர்களை ஒழித்து விலங்கின் சாதியை எண்ணினார். இருகாரணமுங் கருதி
வில்லும் அம்பும் எடுத்துத் தேடிப் போந்தனர் என்பதாம்.

     ஆளி - சிங்கம். யாளி என்றுரைப்பாருமுண்டு. இது முன் காலத்தில்
இருந்து இக்காலத்து மரபு ஒழிந்ததொரு பெரிய கொடிய விலங்குச்சாதி.
நீண்ட மூக்குடைய புலி போன்ற தென்றும், சிங்கத்தினையும் வெல்லக்கூடிய
தென்றும் கூறுவர். ஆளி - முன்னாகி - என விலங்கினத்தில் முதன்மை
பெற்றதனைக் கூறி ஏனையவெல்லாம் அதனுள் அடக்கினார். ஆகி என்பது
செயவெனெச்சத் திரிபு.

     அறியேன் - இதனிலுந் துணிவுபெறவில்லை யென்பதாம்.

நீள் இருங் குன்றச் சாரல் - தொடர்ந்து நீண்ட பெருமலைகள்.
விலங்கினந் தேடிச் சென்றாராதலின் அவை தங்குமிடமாகிய மலைச்
சாரல்களிற் சென்றனர்.

     நெடிது இடை நேடி - நெடுந்தூரம்வரை பல வழியாலும் தேடி. 167

817.



வேடரைக் காணார்; தீய விலங்குகள் மருங்கு மெங்கு
நாடியுங் காணார்; மீண்டு நாயனார் தம்பால் வந்து
நீடிய சோகத் தோடு நிறைமலர்ப் பாதம் பற்றி
மாடுறக் கட்டிக் கொண்டு கதறினார் கண்ணீர் வார;



168