இயல்பாகவே பாசங்களினின்று
நீங்கியவர் தம்மை மேவினாரது பாசங்களைப்
போக்கித் தம்மைப் பிரியாதிருக்கும் நிலையருள்பவர் என்று பதியிலக்கணங்
காட்டிய குறிப்பும் காணத்தக்கது. மாட்டா என்ற
சொற்குறிப்பும் அது.
ஆவியினினியராதலின் மேவினார் பிரியமாட்டாதவர் என்ற உண்மை,
"என்னுயிருக் கின்னமுதா மெழிலாரூர்ப் பெருமானை, வன்னெஞ்சக்
கள்வனேன் மறந்திரேன்" (கழறிற்றறிவார் புராணம், 160) என்றவிடத்து
நம்பிகளது தேவாரத்திலும் காண்க.
ஆவது
- அடாததாய் அடுத்த இத்தீங்குக்கு மாற்றாவது. தீர்க்கும்
உபாயம். ஒன்று - ஒன்றும். முற்றும்மை தொக்கது. ஒன்று - சிறிது என்னும்
பொருளில் வந்தது. "கணபதி யொன்றறியான்" - நம்பிகள் தேவாரம்.
என்செய்கேன்
- இதனைத் தீர்க்க என்ன செய்குவேன்?
"செய்வதொன்று மறியேனே" என்ற திருவாசகக் கருத்தினை இங்கு வைத்துக்
காண்க. செய்கேன் - செய்யக் கடவேன்.
க - எதிர்கால இடைநிலை. என்று
- என இவ்வாறு கதறி. பின்னும்
- பின்னரும் வரும்பாட்டிற் கூறியவாறு
எண்ணிப்போயினார் என முடித்துக் கொள்க. 169
819.
(வி-ரை.) என் செய்தால் தீருமோ? -
"ஆவதொன்றறியேன்"
"என் செய்வேன்" என்று மனமழிந்த திண்ணனார் இதனை எவ்வகையாலும்
தீர்த்தல் வேண்டுமன்றே? என்ன செய்கை செய்தால் இது தீருமோ என
மேலும் எண்ணிச் சூழ்வேன் என் றெண்ண மிடுவாராயினர். குருதி கண்டதும்
முதலில் மயங்கி வீழ்ந்தார்; பின் தேறி இது செய்தாரை ஒறுப்பேன் என்று
வீராவேசத்தாற் றோடினார்; பகை ஒன்றும் காணாமையால் மனக் கொதிப்பும்
தடுமாற்றமும் நீங்கச், சோகத்தோடு கதறினார்; அதன் பின்னர் இத்தீங்கினை
எவ்வகையானுந் தீர்த்தல் வேண்டும், அதனை எண்ணிச் செய்வேன் என்று
நிதானித்து ஆராயத் தொடங்கினார். இஃது இப்போது அவரது மனநிலை,
இவ்வாறே மேல் வருவனவும் காண்க.
என்
செய்தால் தீரும் - என் செய்கே னென்றதைத் தொடர்ந்த
மனநிகழ்ச்சி.
தீங்கு
முன்செய்தார் தம்மைக்காணேன் - தீங்கு செய்தாரைத்
தண்டித்தல் அத்தீங்கினால் விளைந்த துன்பத்தைப் போக்காவிடினும்
துன்பப்படுவார்க்கு ஒருவாற்றால் மன அமைதி உண்டாக்கும் வகையால்
ஒருவகைத் தீர்வாகமேற்கொள்வது உயிரியற்கையாம். இதுபற்றியே முன்னர்த்
திண்ணனார் "யார் இதுசெய்தார்?" என்று கிளம்பி வேடரையும்
விலங்கினத்தையும் தேடிச் சென்றனர். அக்கருத்தினைத் தொடர்ந்தே இங்குக்
காணேன் என்றார். செய்தாரைக் கண்டு ஒறுத்திருந்தேனாகில்
அது
அம்மட்டில் ஒருவகைத் தீர்வாகி, மேலும் இங்ஙனம் விளையா வண்ணம்
தடுப்பதுடன், அவரால் நேர்ந்த புண்ணின் மூலத்தை அறிந்து அதற்குத்
தக்கபடி மாற்றுச் செய்து தீர்க்கலாகும் என்பதும் கருதியதாம்.
மின்செய்வார்
பகழிப்புண் - விளக்கமுடைய கூரிய அம்புகளாலாகிய
புண், இப்புண் எதனாலுண்டாகியது என்று அறிந்திலரேனும், நோய்மூலம்
நாடாது நோயை மட்டும் நாடி மருந்து செய்யும் நவீன மருத்துவர்போலப்,
புண்ணின் விளைவாகிய உதிரம் பாய்தலும் பிறவும் கண்டு, பகழிப்புண்ணிலும்
இவை காணப்படுதலால் அதன் தீர்வாகிய மருந்தே இதற்கும் ஆம் என்று
அனுமான அளவையாற் றுணிந்து, பகழிப் புண்தீர்க்கும் மெய்ம்மருந்து
தேடினார் என்க.
மெய்ம்மருந்து
- பிழையாத - நிச்சயமாகிய - மூலிகைகள். மெய்
-
உடல் எனக் கொண்டு உடற்புற மருந்து என்றலுமாம். உயிரைச் சார்ந்த
பவநோய் தீர்க்கு மருந்து வேறுண்மையுமறிக.
பொன்
செய்வரைத் தாழ்வில் - என மாற்றுக. தாழ்வரை
-
இல்முன் - முன்றில் என வருவனபோல வரைத்தாழ்(வு) எனற்பாலது
தாழ்வரைஎனவந்தது. தாழ்வு -
பள்ளம் - தாழ்ந்த இடத்தை யுணர்த்துதலின்
ஆகுபெயர். "பள்ளந்தா முறுபுனலிற் கீழ்மேலாக" (திருவாசகம்), "அன்ன
தன்றிருத் தாழ்வரை" (23) என்றவை காண்க.
|