பக்கம் எண் :


1052 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     குறிப்பு :- இப்பாட்டிற் கண்ட பொருள் 796-ல் மிக அழகாக
ஆசிரியராற் கூறப்பட்டமை காண்க. "அவனுகந் திட்ட விறைச்சி யெனக்குநன்,
மாதவரிட்ட நெய்பா லவியே" என்ற திருமறத்தின் பொருளும் காணத்தக்கது.
"சுவைமுன் காண்பான் வாயினி லதுக்கிப் பார்த்து" (767), "சுவைகாண
லுறுகின்றார்" (795), "நாவின்க ணிடுமிறைச்சி" (797) என்ற புராணத்
திருவாக்குக்களோடு "நையமிக மென்றிடல்" என்றது பொருத்தமாகக்
காணப்படவில்லை. செய்யமறை - என்பதும் பாடம்.

5.


மன்பெருமா மறைமொழிகண் மாமுனிவர் மகிழ்ந்துரைக்கு
மின்பமொழித் தோத்திரங்கண் மந்திரங்க ளியாவையினு
முன்பிருந்து மற்றவன்றன் முகமலர வகநெகிழ
வன்பினினைந் தெனையல்லா லறிவுறா மொழிநல்ல.

     குறிப்பு :- மன்பெரு மாமறை - "மன்பெ ருந்திரு மாமறை" (337)
பார்க்க. எனையல்லால் அறிவுறா - என்ற கருத்து "அவனுடைய
வறிவெல்லா நமையறியு மறிவு" (806) என்றதனாற் போந்தவாறுகாண்க.
அகநெகிழ்ந்த - என்பதும் பாடம்.

     இவ்வைந்து பாட்டுக்களினும் ஒன்றுபோலவே "சிறப்புடைத்தால்" -
முதலியனவாக ஈற்றடி யீற்றுச்சீரிற் பயனிலைவைத்து முடிபுகாட்டிய முறை
ஆசிரியரது வாக்கு நலத்துடன் பொருந்துவதாகக் காணப்படவில்லை.


                  நாடும்; நகரம்; மக்கள்

     சரிதச்சுருக்கம் :- திருக்காளத்திக் கண்ணப்பருடைய திருநாடு
பொத்தப்பி நாடு என்பதாகும்.அதில் உடுப்பூர் என்பது அவர் அவதரித்த
பதியாகும். அந்நாட்டில் வாழ்பவர்கள் குன்றவராகிய வேடர்கள். இவர்களது
வீடுகளின் முன்றில்களில் உள்ள விளா மரங்களில் வார்வலை தொங்கும்;
பன்றி, புலி, கரடி, கடமை முதலிய இனங்களின் பார்வை மிருகங்கள் அங்கே
கட்டப்பட்டு உணங்கிக்கிடக்கும்; பாறை முன்றிலில் மலைநெல் காயும்.
அங்குப் புலிக்குட்டி யானைக்கன்று என்றிவற்றோடு வேடர்களது புன்றலைச்
சிறுமகார்கள விளையாடுவார்கள். அன்புடன் அணையும் பெட்டை
மான்களோடு வேடர் சிறுமிகள் விளையாடுவார்கள். அவ்வேடர்கள்
கொலைப் படைகளை ஏந்துவர்; வன்கண்மையுடையவர்; கொடுஞ்சொல்
வழங்குவர். அவர்களது துடி கொம்பு, சிறுபறை முதலியவற்றின் ஓசையுடன்,
சத்தித்து ஓடும் மலையருவிகளின் ஓசையும் எங்கும் உள்ளன.
ஆறலைத்துண்பது இவ்வேடர்களின் வாழ்க்கை. அவர்கள்
அயற்புலங்களினின்று கவர்ந்து கொண்டுவந்த ஆனிரைகளும் மேகம்போல
முழங்கும் யானைகளும் அங்கு உள்ளன. இம்மறவர் கரிய உடம்பும்
வன்றொழிலும் உடையார்; அச்சம் அருள் என்பன என்றும் அடை
வில்லாதார். மலைத்தேனும் ஊனும் கலந்த சோறு இவர்களது உணவாம்.

                       தந்தை, தாயார்

     அவ்வேடர்க்கரசன் நாகன் என்பவன். இந்நாயனாரை மகனாகப்
பெறுதற்கு அவன் முன்னைத்தவமுடையானாயினும் பிறப்பின் சார்பினாலே
குற்றமே குணமாகக்கொண்டு வாழ்பவன்; கொடியவன்; விற்றொழிலிற் சிறந்த
வீரசிங்கம் போன்றவன். அவனது மனைவியாகிய தத்தை வேடர்களது
பழங்குடியில் வந்தவள். சங்கு மணிகளுடன் கோத்த புலிப்பற்றாலி பூண்ட
அச்சந்தரும் பெண் சிங்கம் போன்றவள்.