திருவவதாரமும்
பேரிடுதலும்
ஒப்பற்ற
சிறப்புடைய அவர்களுக்கு நீண்டகாலம் புதல்வர்ப்பேறு
இல்லாமலிருந்தது. அவர்களுக்கு அது அரிதாம் என்று எவரும்
சொல்லலாயினர். அதனைப் பெறுதலில் அவர்களுக்குக் காதல்
மிக்கது.அதன்பொருட்டு முருகப் பெருமானது திருமுன்றிலிற்
சென்று
பராவுக்கடன் பலவும் செய்து வழிபட்டனர்; சேவலும் மயிலும் விட்டனர்;
தோரணமணிகள் தூக்கினர்; மலர்மாலைகள் தொங்க விட்டனர்; குரவைக்
கூத்துடன் அணங்காடல் நிகழ்த்திப் பெரு விழாச் செய்தனர். வெற்றிவேற்
பெருமானது திருவருளினாலே வேடர் குலம் விளங்கும்படி தத்தையினிடம்
கருப்பம் தரித்தது. மாதந்தோறும் பலிகள் போக்கி வெறியாட்டியற்றினர்.
உரியமாதங்கள் நிரம்பக், கருங்கடலானது சந்திரனைப் பெற்றது போலத்
தத்தை மகவை ஈன்றனள். மகிழ்ச்சி மீக்கூர
வேடர்கள் மணி மழை சிந்தித்
துடி முதலிய மங்கல இயங்கள் முழக்கினர். எங்கும் மலர்மழை பொழிந்தது,
தேவ துந்துபிகள் முழங்கின. மலைச்சீறூர்க் குடிகள் பெருவிழாக்
கொண்டாடினர். கரிய மலை காளமேகத்தை ஏந்தியதுபோல
நாகன்
புதல்வரை எடுத்துக்கொண்டான். அப்போது அழகிய அக்குழவி
புலிக்குட்டிபோலப் பொலிந்து, அவ்வேடர்களது அளவிலேயன்றி உலக
முழுதும் போற்றும் நற்குறிகளுடன் விளங்கியது. அம்மகவு, கையில் ஏந்துதற்
கருமையா யிருந்தமையால் நாகன் அதற்குத் திண்ணன் என்ற
பேர் வைத்து
யாவரையும் அவ்வாறே அழைக்கும்படி சொன்னான்.
வளர்ப்பும்
விற்பயிற்சியும்
புண்ணியப்
பொருளான திருவுருவுடைய அக்குழவிக்கு வேடர்களது
மரபின்படி அணிகலன்களைஅணிந்தனர். தெய்வங்களுக்குப் பருவந்தோறும்
பெருமடையிட்டு வழிபட்டனர். திண்ணனார் ஒராண்டு நிறைவெய்திச்
செல்லத் தளர்நடை யிட்டு நடந்தனர்; பின் நாட்செல்லக் குதலைமொழி
பேசிப் பெற்றோர்க்கும் மற்றோர்க்கும் இன்பமூட்டினர்; பின் குறுநடை
கொண்டு சிறுதுடிக் குறடு உருட்டி விளையாடினர்; ஐந்தாண்டு செல்லச்
சீறூர்ப்புறத்து உழலை வேலியின் புறச்சிறு கானிற் போகி முயல்,
காட்டுப்பன்றி, புலி, செந்நாய் முதலிய கொடுவிலங்குக் குட்டிகள்
பலவற்றையும் விசையில் ஒடிப் பிடித்து வந்து முன்றிலில் மரத்தாளிற் கட்டி
வளர்த்தனர்; இவ்வாறு விளையாடி வளர்ந்து வில் வித்தை பயிலும் பருவம்
சேர்ந்தனர். இவர்க்கு வில்வித்தை தொடங்குவிக்கும் பொருட்டு நல்லநாட்
குறித்து நாகன் பக்கத்து மலைகளின் ஆட்சியுடைய வேடர்
தலைவர்களுக்கும் தனது குடிகளுக்கும் சொல்லி யனுப்பினான். வேடர்களும்
தலைவர்கள்பலருமாக மலைபடுபலன்கள் பலவற்றையும் கொண்டுவந்து
சேர்ந்தனர்; வில்லினுக்கும் திண்ணனாருக்கும் புலி நரம்பினாற் காப்புச்
சேர்த்து வாழ்த்தினர்; ஏழுநாள் வில்விழாக் கொண்டாடினர். ஏழாநாளாகிய
நல்ல உச்சிவேளையில் நல்லாசிரியனைக் கொண்டு திண்ணனாரை வில்
பிடிப்பித்தார்கள். அதுமுதற்கொண்டு அவர் வில் வித்தையினை நாளும்
திறம்பட முற்றக்கற்றவராய்ப் பதினாறு வயது நிரம்பிய இளஞ்சிங்கம் போன்ற
காளைப்பருவமடைந்தனர்.
மலையாளும் உரிமை சூட்டப் பெறுதல்
இவ்வாறு
திண்ணனர் பருவ நிரம்பிய காலத்தில் நாகன் மிக
மூப்படைந்து வில் முயற்சியில் மெலிவடைந்தான். காட்டிற் பன்றி, புலி, கரடி,
முதலிய மிருகங்கள் மிக நெருங்கிப் பயிர்களுக்கும் உயிர்களுக்கும் கேடு
விளைத்தன. அதனை வேடர்கள் தமது தலைவனாகிய நாகனுக்கு அறிவித்து
முறையிட்டார்கள். அவன், "மூப்பினாலே முன் போல வேட்டை
முயற்சியில்லேன்; என் மகனை உங்கள் தலைவனாகக் கொள்ளுங்கள்" என்று
சொல்ல, அவர்களும் இசைந்தனர். நாகன் மகனாருக்குச் சொல்லிவிட்டான்.
தேவராட்டியை வரவழைத்துத் தன் மகன் கன்னி வேட்டைக்குப் போவதால்
(கன்னிவேட்டை - முதல் முறையாகச் செய்யும் வேட்டை) வனதெய்வங்கள்
மகிழும்படி காடுபலி யூட்டுக என்றான். அவளும் ஆசிகூறி,
வேண்டுவனவற்றைக் குறைவின்றிக் கொண்டுபோனாள். அழைத்த
|