படியே திண்ணனாரும் வந்து நாகனை வணங்கினர். அவரைத்
தழுவிக்கொண்டு, புலித்தோலாசனத்தில் தன்னோடு ஒரு சேர முன்னிருக்க
வைத்து, அவரை நோக்கி "எனக்கு மூப்பு மேலிட்டதனால் இனி என்
முயற்சியினால் வேட்டையாட எனக்குக் கருத்தில்லை. எனக்கு மேலாகச்
சிலைமலையர் குலக்காவல் பூண்டு உன்னுடைய மரபுரிமையாகிய
மலையாட்சியைத் தாங்குவாயாக!" என்று சொல்லித்தன் அரச
அடையாளமாகிய உடைதோலையும் சுரிகையையும் கையிற் கொடுத்துப்
பட்டம் சூட்டினான். திண்ணனார் தந்தை நிலையினுக்கிரங்கினார்; ஆனால்
தமது குலத்தலைமைக்குக் குறைவின்றிக் காக்கவேண்டுமென்னும் குறிப்பினால்
அதனை மறுக்காது சிந்தை பரங்கொள நின்றார். நாகன் மகிழ்ந்து ஆசிகூறி
வேட்டைமேற் செல்ல அவருக்கு விடை கொடுத்தான்.
திண்ணனாரது
கன்னி வேட்டைத் திறம்
விடைபெற்ற
திண்ணனார் மங்கல நீர்ச்சுனை படிந்து, அன்றிரவு
மனையில் வைகி, விடியற்காலம் விற்சாலையிற்புக்கு வேட்டைக் கோலங்
கொண்டனர். தலையிற் குஞ்சியை நிமிரக் கட்டிடத் தளிர்களாற் கட்டப்பட்ட
கொண்டைமாலையும் அதில் மயிலிறகும் அதன் மேல் முல்லைமாலையும்
குறிஞ்சி வெட்சிப் பூக்களும் சூடினர்; முன்னெற்றியில் குன்றிமணிகளை
இடையிடை வைத்துப் புரித்த மயிர்க்கயிறு சாத்தினர்;
காதுகளில்
வெண்சங்கத் தோடுகளும், கழுத்தில் பலகரை மாலையும் சன்ன வீரமும்,
மார்பில் யானைத் தந்தத்தை அளவு பட அரிந்து
கோத்தமாலையும்
அணிந்தனர்; தோள்களில் வாகுவலயங்களும் முன்கைகளிற் கங்கணங்களும்
விரலுக்குக் கைக்கோதையும் பூட்டினர்; இடுப்பில்
புலித்தோலாடை சாத்தி,
உடைதோல் வீக்கி, அதிற் சுரிகையும் பூண்டனர்;
காலில் வீரக்கழலும்,
திருப்பாதங்களில் நீடு செருப்பும் அணிந்தனர்; பாரப் பெருவில்லினைப்
பணிந்து தாள்மடுத்து ஏந்திச் சிறுநாணொலி கொண்டு தக்க அம்புகளையும்
தெரிந்துகொண்டார். அப்போது காடு பலியூட்டிய சருப்பொரி
முதலியவற்றுடன் வந்து தேவராட்டி அவரது திருநெற்றியிற் சேடைசாத்தி,
"உன்தந்தை தந்தைக்கும் இந்நன்மைகள் உள்ளவல்ல; உன்வலிமை
நம்மளவில் நில்லாது பெரிதாகும்" என்று வாழ்த்தினள். திண்ணனார்
அவளுக்கு எதிர் சிறப்புச் செய்து போக்கி வேட்டைக்குப் புறப்பட்டனர்.
அவர் முன்பு வில்லேந்திய வேடர் கூட்டம் சென்றது. வேட்டை நாய்கள்
பக்கங்களிற் பலபுறமும் வந்தன. எண்ணில்லாத பார்வை மிருகங்களைக்
கொண்டு எம்மருங்கும் வேடர் சென்றனர். கொம்பு, சிறுபறை, பம்பை
முதலியவற்றை முழக்கிக்கொண்டும் கையா லோசைசெய்தும்
வேடர்கள்வேட்டைக் காடு வளைத்தனர். காடாயும் ஒற்றர்கள் பன்றிகளும்
மான் கூட்டங்களும் துன்றிய இடங்களை அடிச்சுவடு கண்டு அறிந்து
சொல்லவே, வலிய வேடர்கள் பலபுறமும் ஓடினர். இவ்வாறு சென்றவர்கள்
ஒடி எறிந்தும், வார் போக்கியும்யோசனைப் பரப்புள்ள காட்டைக்
காவல்செய்தபின் திண்ணனாரும் ஏனைவேடர்களும் அக்காட்டினுள் வேட்டை
நாய்களைப் பலபுறமும் அட்டமாக விட்டுச் சென்றனர். துடி, பம்பை முதலிய
வாத்திய ஒசைகளினால் மிருகங்களைப் பதிவிடங்களிலிருந்தும் எழுப்பினர்.
பன்றிகளும், மான்வகைகளும், யானை காட்டுப்பசு முதலியனவும் ஆகிய பல
மிருகங்களும் வெருண்டு எழுந்து மேற்பாய. அவற்றினை வேடர்கள் சீறி
அம்புகளினாற் கொன்றனர். காலறுவனவும், தலைதுமிவனவும், குடல்
சொரிவனவும், அம்பு தைக்கத் துள்ளி விழுவனவுமாக மான் வகைகள் பல
பட்டன. பல சிங்கங்களும் யானைகளும் புலிகளும் பட்டன. பலபுறமும்
வெருவி ஒடிய விலங்குகளை நாய்கள் பற்றிக் கவர்ந்தன. இவை, இருவினை
வலையிடைப்பட்டுச் சுழன்று வழிச் சேர முயலும் மத்தைஅவ்வாறுசெல்லாது
தடைசெய்து தம் வசப்படுத்திய ஐம்பொறிகளைப் போன்றிருந்தன. இவ்வாறு
படுகொலை செய்யும் வேட்டை வினையிலும் வேடர்கள் சிறுயானைக்
கன்றுகளையும், ஏனைவிலங்குகளின் சிறுகுட்டிகளையும், கருவுடைய
பெட்டைவிலங்குகளையும் எய்யாது விடுத்தனர்.
|