பக்கம் எண் :


கண்ணப்பநாயனார்புராணம்1055

 

      வேட்டையிற் பன்றி தப்பி ஒடுதலும் திருக்காளத்திச் சாரல்
                        சேர்தலும்

     இவ்வாறு மூண்ட கொலை புரியும் வேட்டை நிகழும்போது கருமேகம்
போன்றதொரு காட்டுப்பன்றி மேகம்போலக் கர்ச்சித்து வலைகளையறுத்து
வேடர்களையும் தப்பி மிக்க வேகத்தில் ஒடிற்று. அதனை வேடர்களுன்
ஒருவரும் அறிந்திலராகவும் சிங்கம்போன்ற திண்ணனார் அதனைப்
பின்றொடர்ந்து ஒடினார்; அவரடி பிரியாதமெய்காவலாளாகளாகிய நாணன்,
காடன்
என்ற இருவரும் அவரைத் தொடர்ந்து ஒடினர். அப்பன்றி வேட்டை
நாய்களையும்தப்பிக், காட்டில் நெடுந்தூரம் ஒடி, மேற்செல்ல
வன்மையின்றியிளைத்து, ஒரு மரச்சூழலில் நின்றது, அதனைத் தூரத்தில்
நின்று அம்பினாலெய்து கொல்ல நினையாமல், வீரராகிய திண்ணனார்
அணுகச்சென்று உடைவாளினை உருவிக் குத்தி இருதுண்டுபடுத்திக்
கொன்றனர். அது கண்டு அவ்விரு வேடர்களும் அவரைப் புகழ்ந்து, அவரடி
வீழ்ந்து "நெடுந்தூரம் ஒடி வந்ததனால் எமக்கு மிக்க பசிவந்தது; கிடைத்த
இப்பன்றியைத் தீயில் வதக்கித்தின்று தண்ணீர் குடித்துப் பின் வேட்டைக்
காட்டுக்கு மெல்லப் போவோம்" என்றார்கள். திண்ணனார் "நல்ல தண்ணீர்
இவ்வனத்தினுள் எங்குள்ள" தென்று கேட்க, அவர்கள் "முன்னிருக்கும்
இப்பெரிய தேக்குமரச் சோலையைத் தாண்டிப்போனால் ஒரு மலை
தோன்றும்; அதன் அயலிற் குளிர்ந்த பொன் முகலியாறு ஓடும்" என்று
சொன்னார்கள்.

           திருக்காளத்தி கண்டு சேர்தல் காளத்தியப்பர்
              அருணோக்கத்தால் அன்புருவமாகுதல்

     "அங்குப் போவோம்; இப்பன்றியை எடுத்து வாருங்கள்" என்று
கட்டளையிட்டு மூவருமாகச் சென்றனர். சிவபெருமான் எழுந்தருளி யிருக்கும்
திருக்காளத்தி மலையின் சாரற்சோலையை அரைக்காத தூரத்திற்
கண்ணுற்றார்கள். "நாணனே! இங்குத் தோன்றும் குன்றிற் போவோம்" எனத்
திண்ணனார்கூற, நாணன், "அங்குப் போனால் நல்ல காட்சியே காணும்;
இம்மலையில் செவ்வே எழுந்து கோணமில் குடுமித் தேவர் இருப்பர்;
கும்பிடலாம்" என்று சொன்னான். "இஃது ஆவதென்ன ஆச்சரியம்! இதனைக்
கண்டு சேருந்தோறும் என்மேல் உள்ளதொரு பாரம் குறைந்து வருவது
போல ஒர் அனுபவம் உண்டாகின்றது. ஆசை பொங்கிய மனத்தில்
வேறுமோர் விருப்பம் விளைகின்றது. அங்குத் தேவர் இருக்கும் இடம்
எங்கே? போதுவாயாக" என்றார் திண்ணனார். இவ்வாறு சொல்லிக்கொண்டு
மூவரும் திருமுகலியை யடைந்தனர். அதன் கரையில் ஒரு சோலை நிழலிலே
பன்றியை இட்டுக் காடனை நோக்கி "நீ இங்கு மரக்கடைகோல் பண்ணி
நெருப்பை உண்டாக்கு. இம்மலையேறிக் கண்டு நாங்கள் வந்தணைவோம்"
என்று சொல்லி நாணனுடன் திண்ணனார் போயினர். திருக்காளத்தியைக்
கண்ட வண்ணமாகவே ஆற்றில் இறங்கிக் கடந்து சென்று திருமலைச்சாரல்
சேர்ந்தனர். அப்போது சூரியன் உச்சியிற் சேர்ந்தனன். அத்திருமலையின்
உச்சியில் பஞ்சதுந்துபி ஒசைகள் கடல்போல முழங்கின. அது கேட்ட
திண்ணனார் "இது என் கொல்? நாணா!" என்று கேட்க, அவன் இம்மலைப்
பெருந்தேனைச் சூழ்ந்து கொண்டு மதுமலர் ஈக்கள் மொய்த்தெழும்
ஓசைபோலும்" என்றான். முன்னே செய்த தவத்தின் பெருக்கமானது
முடிவில்லாத அன்பை எடுத்துக்காட்ட, அதனால் அளவில்லாத
ஆசைபொங்க, எலும்பும் உருகுமாறு உள்ளே எழுந்த பெரு வேட்கையோடும்
திருமலையை நோக்கித் திண்ணனார் சென்றனர். நாணனும் அன்பும் முன்பு
வழிகாட்ட, ஏறிச்சென்று பேணுதத் துவங்களென்னும் படிகளையேறி,
ஆணையாகிய சிவத்தை யடைபவர்போலத் திண்ணனார் நீண்ட மலையைஏறி
நேர்படச் சென்றனர். அவ்வாறு சென்றவர் காளத்திநாதரைக் காணாதமுன்னே
அவரது கருணை கூர்ந்த அருட்டிரு நோக்கம் இவர்மேற் பதிந்தது. பிறப்பிற்
றங்கிய முன்னைச் சார்புகள் எல்லாம் விட்டகன்றன. திண்ணனார் ஒப்பற்ற
அன்பே உருவமாக ஆயினர். அந்நிலையில் திருக்காளத்தி நாயகரைக்
கண்டார். பெருமகிழ்ச்சியாகிய அன்பின் வேகத்தினால் மிக விரைந்து
ஓடிச்சென்று தழுவினார்;