உச்சி மோந்தார்;
நெடுந்தூரம் பெருமூச்சுவிட்டு நின்றார். மயிர்க்க
தோறும் புளகம் பொங்கிற்று. கண்களினின்றும் நீர் அருவிபோலப் பாய்ந்தது.
"அடியேனுக்கு இவர்தாம் இங்கே அகப்பட்டார்! அச்சோ!" என்று ஒப்பற்ற
அன்புநிலை தோன்ற "ஐயோ! யானை புலி முதலிய கொடிய விலங்குகள்
திரியும் இக்காட்டில் மறவேடுவர் போல நீர் தனியே இருப்பதோ?" என்று
மனம் நைந்தார். கையிற்றாங்கிய வில் அவரை யறியாமலே,நழுவி வீழ்ந்தது.
தேவர்மேல் இருந்த அடையாளங்களைக் கண்டு "இவர்க்கு இந்தப்
பச்சிலையோடு பூவுமிட்டு நீரும் வார்த்து இச்செயல் செய்தார் யாவரோ?"
என்றனர். கூடநின்ற நாணன் "இது நான் அறிந்துள்ளேன். உன் தந்தையோடு
முன்காலத்தில் ஒரு நாள் வேட்டையாடி இம்மலையில் வந்தோம். அப்போது
ஒரு பார்ப்பான் இவரைக் குளிர்ந்த நீராலாட்டி, இலையும் பூவும் சூட்டி,
உணவு ஊட்டி முன்னே ஏதோ சொல்லிப் போயினான். இன்றும் அவனே
செய்தானாகும்" என்று சொன்னான். அதுகேட்ட திண்ணனார், திருக்காளத்தி
நாயனாருக்கு இனிய செய்கைகள் இவையே என்று இதனையே
கடைப்பிடித்துக் கொண்டனர். "இவர் தனியராயிருக்கின்றார்; இவரைப்
பிரியவும் ஒண்ணாது. இவர் உண்ண இறைச்சியுமிடு வாரில்லை; அதனாற்
பிரிந்துபோய் இறைச்சிகொண்டு வரவும் வேண்டும்" என்று
எண்ணமிட்டவராய்ச் சிறிது போவர்; மீண்டு வருவர் தழுவிக்கொள்வர்;
மீளவும் போவர்; ஆசையொடும் பார்த்து நிற்பர்; "நானேபோய் நல்ல
இறைச்சியைக் குற்றமறத் தெரிந்துகொண்டு வருவேன்" என்பர். "யாவர்
உமக்குத் துணையாவர்?" என்று போகத்துணியேன்; நீர் பசித்திருக்கப்
பார்த்துக்கொண்டு இங்கு நிற்கவும் மாட்டேன்" என்று கண்ணீர் பெருக,
ஒருவாறு போய்வரத் துணிந்து வில்லும் அம்பும் எடுத்துக்கொண்டு தேவரை
வணங்கிப் போயினர்.
முதல்
நாட் பூசை
இவ்வாறு
அரிதின் நீங்கிய திண்ணனார் உலகில் பிறதுறைகளின்
வேட்கை முற்றும் நீங்கினவராய், அன்பினாற் செலுத்தப்பட்டுப் போய்த்,
திருமுகலியாற்றினைக் கடந்து அக்கரையிற் "சோலையைச் சேர்ந்தனர். காடன்
எதிரில் வந்து தொழுது, "தீக்கடைந்து வைத்தேன்; பன்றியின் உறுப்புக்களை
யெல்லாம் உங்கள் குறிப்படி சரிபார்த்துக் கொள்ளுங்கள்; நாம்
திரும்பிப்போவதற்கு இவ்வளவு நேரம் நீங்கள் தாழ்த்தது என்ன காரணம்?"
என்றான். அதற்கு நாணன், "அங்கு இவன், வங்கினைப் பற்றிப் போகாத
வல்லுடும்பு போல மலையிற் றேவரைப் பற்றிக் கொண்டு விட்டு நீங்கா
தவனானான்; இங்கும் அத்தேவர் தின்பதற்கு இறைச்சிகொண்டு போகவே
போந்தனன்; நமது குலத் தலைமையை விட்டான்; தேவர்க்கே கலப்பட்டான்"
என்றான். காடன் "திண்ணா! என்ன காரியம் செய்தாய்? என்ன
மயக்கங்கொண்டாய்? நீ எமது குலமுதல்வனல்லவா?" என்று சொல்லத்,
திண்ணனார் அவனது முகத்தையும் நோக்காராய்ப் பன்றியைத் தீயில்
வதக்கினார். நல்ல தசைப்பகுதிகளை வேறுவேறாக அம்பினால் அரிந்து
கோலிற் கோத்துக் காய்ச்சிப் பதத்தில் வேவவைத்து நல்ல சுவைப்பகுதியைக்
காணும் பொருட்டு வாயிற்போட்டு அதுக்கிப் பார்த்து நல்லனவற்றை
முன்னர்த்தைத்துக் கொண்ட தேக்கிலைக் கல்லையில் இட்டார். பக்கத்தில்
நின்ற நாணனும் காடனும் "இவன் மயக்கம் முதிர்ந்தனன்; நல்ல இறைச்சியைக்
காய்ச்சி அதுக்கி உமிழ்க்கின்றான்; பசிமிக உடையனாகிலும் பேச்சிலான்;
நமக்கும் பேறுதரும் தன்மையும் உணரவில்லை; இத்திண்ணன் தேவர்
மயக்கம் கொண்டான்; இதனைத் தீர்க்கும் வழியையறியோம்; நாகனைத்
தேவராட்டியுடன் கூட்டிவந்து இதனைத் தீர்க்கவேண்டும்; வேட்டைக்
காட்டுக்குச் சென்று ஏனை ஏவலாட்களையும் கூட்டிச் செல்வோம்" என்று
தமக்குள் எண்ணி முடித்துப் போய்விட்டார்கள். அவர்கள் போனதை இவர்
அறியார். விரைவில் கல்லையில் ஊனமுதம் அமைத்துக்
கொண்டனர்.
திருமஞ்சனத்துக்காகப் பொன்முகலியின்
நல்ல நீரைத் தமது தூய
வாயினில் முகந்து
|