பக்கம் எண் :


மானக்கஞ்சாறநாயனார்புராணம்1119

 

     (வி-ரை.) அயல்கள் - கஞ்சாறூரின் புறத்தே - பக்கங்களில் வயல்கள்
நகரங்களை அடுத்து அவற்றின் புறத்தில் உள்ளன. இது மருதப்பணைகளின்
இயல்பு. வயல்களில் நெற்பயிர்கள் இருந்தன. களை களையும் பதத்தில்
அப்பயிரிற் கடைசியர்கள் களை பறித்தனர். கழுநீர், நீலம், தாமரை,
முதலியனவும் அங்கு முளைத்திருந்தமையால் அவற்றையும் கடைசியர்
பறித்தெறிந்தனர். அவற்றுள் ஒரு சில செங்கழுநீர்க் கொடிகள் சாய்ந்து
ஒதுங்கி அவர்களது களைபறிப்புக்குத் தப்பின. அவை பின்னர் நீர் ஏற
நிமிர்ந்து தமது சிவந்த பூக்கள் பூத்தன. இக்காலத்துக்குள் நெல்லும் உயர்ந்து
கதிர் விட்டு முதிர்ந்து காய்த்துச் சாய்ந்தன. அத்தோற்றம் அச்செங்கழுநீர்க்கு,
நெல், தலை வணங்குதல் போன்றிருந்தது என்பது கருத்து.

     இத்திருப்பாட்டில் தன்மைநவிற்சி, தற்குறிப்பேற்றம் முதலிய
பொருளணிகள் பலவும், சொற்பின் வருநிலை இரட்டுறமொழிதல் முதலிய
அமைதி பலவும் குறிப்பாகிய உள்ளுறையணிகள் பலவும் ஒருங்கு விரவிய
பேரழகு கண்டுகளிக்க.

     நீலக்கண் கடைசியர் என மாற்றுக. கடும் - உழவு மரபு வழக்கு.
நீலக்கண் - என்றது அஃது அவர் கண்களுக்குப் பகையாய்
மிளிர்வனவாதலின் களையப்பட்டது என்ற குறிப்பும்பெற நின்றது. இனம்பற்றி
வாய்க்கும் முகத்துக்கும் உவமிக்கப்படும் ஆம்பல் தாமரை முதலியனவும்
உடன்களையப்பட்டன என்பதும் கொள்க.

     பிழைத்து ஒதுங்கி - கைத்தவறுதலினால் தப்பி ஒருபுறம் சாய்ந்து
ஒதுங்கி. பிழைத்து - பிழைத்தலின் - தவறாகக் களையாது விடுதலின் என்க.
இரட்டுறமொழிதலால் உயிர் தப்பிப் பிழைத்து என்றுரைக்கவும் நின்றது.

     ஒதுங்கிப் பிழைத்து - எனமாற்றிப் பெரும்பகை வந்தபோது
ஒருபுறம்ஒதுங்கி உயிர்தப்பிப் பிழைத்தல் ஓர் உலகியல்பாதல் போலச் சில
கழுநீர்க் கொடிகள் உயிர்தப்பிப் பிழைத்தல் ஓர் உலகியல்பாதல் போலச்
சில கழுநீர்க்கொடிகள் ஒதுங்கிப் பிழைத்தன என்று தற்குறிப்பேற்றம்
பெறவும் உரைத்துக் கொள்க.

     உள்நீர்மைப் புணர்ச்சிக்கண் உறைத்து - ஒதுங்கித் தளர்ந்த கொடி
அந்நிலையில் வேரூன்றித் தழைத்து உள்ளே நீர்த்தன்மை கூடியதனால் உறுதி
பெற்று நின்று. ஒதுங்கி நிலைபிறழ்ந்த கொடி மரங்களாயின் பிழைத்
தொதுங்கியவை நீர் மிகுதியும் புணர்ந்தபோது அழுகிச்சாகும். நீரில்லாத
வழியும் சாகும். இக்கழுநீர்க்கொடி நீரினுள் விளைவதாதலின் உள்நீர்ப்
புணர்ச்சியினால் வேரூன்றித் தளர்வு நீங்கி உறைத்ததென்பது.
புணர்ச்சிக்கண் - கண்
- ஏழனுருபு.

     மலர்க்கண் சிவக்கும் - மலரினிடத்துச் சிவப்புநிறம் ஏறுகின்ற. கொடி
இலை முதலியவற்றால் நிறம் வெளிப்படையாக அறியவாராது மலரினிறத்தால்
இனம் அறிய நிற்பது செங்கழுநீர். தண்நீர் மென் கழுநீர் -
குளிர்ச்சியாலாகியதண்மையும் - மென்மையுமுடைய செங்கழுநீர்ப்பூ. தண்நீர்
- நீர்
- நீர்மை - தன்மை.

     தடஞ்சாலி - அதுவரை தாளுரம்பெற்று நிமிர்ந்து நின்ற வலிய
நெல்லின் பயிர். தலை வணங்கும் - கதிருள்ள நுனி வளைந்து காட்டும்.
வணங்குதல் - வளைதல் குறித்தது. நெற்கதிர் விளைந்து சாய்வதனைத்
தற்குறிப்பேற்றம் பெறத் தலைவணங்கும் என்றார். தலைவணங்குதல் - ஒரு
சொல்லாக - வணக்கம் குறித்தது என்க. தலை - நுனி - நுனியிலிருக்கும்
கதிர் என்ற பொருளும், தலையால் வணங்குதல் என்ற பொருளும் பட
நிற்பது காண்க. களைகட்ட பின் இரண்டுமாத அளவில் நெற்கதிர் விளைந்து
சாயத்தொடங்கும். இதற்குள் கழுநீரும் வேரூன்றிப் பூத்தது என்பது.
இதனையே கழுநீர் கண்சிவந்தது எனவும், அதுகண்டு நெல் தலைவணங்கிற்று
எனவும் தற்குறிப்பேற்றமும் நாடகச்சுவையும் படக் கூறினார்.