கழுநீர்
உள்நீர்மைப் புணர்ச்சிக்கண் உறைத்த தலைவியாகவும்,
உறைத்து என்றதனைப் புணர்ச்சியை உள் நீர்மையாகக் கொண்டு
அத்தலைவி (புணர்ச்சியின்பத் தன்மையை அகத்துட்கொண்ட) ஊடுதல்
குறித்ததாகவும், கண்சிவக்கும் என்றதனை
அவ்வூடலினாற் கோபக்குறியாகக்
கண்சிவத்தல்குறித்ததாகவும், தடம் சாலி தலைவணங்கும்
என்றதனைச் சாலி
என்ற தலைவன் தான் வலியோனாயினும் தலைவியின் ஊடல் தீர்க்கத்
தலைவியை வணங்கும் செய்கை குறித்ததாகவும், உருவகமும்
தற்குறிப்பேற்றமும் கொண்ட கலவையணியாகவும் கொண்டு
அகப்பொருட்டுறைக் கருத்துப்பட விரித்துரைத்துக் கொள்க. கண் சிவத்தல் -
வணங்குதல் எனும் இவை முறையே இவற்றின் மெய்ப்பாடுகளாம். பயன் -
உவகை. புணர்ச்சியிற் கண்சிவத்தல் உளதாம் என்றதோர் இயல்பும் காண்க.
"உன்நலங் கருதி எங்களைக் களைந்தனர்; அதில் உன் உதவியின்றியே
ஒதுங்கிப்பிழைத்தேன்; இன்று என்னுடன் உனக்கு என்ன உறவு" எனக்
கழுநீர் உரைப்பனபோன்றன என்பது கண் சிவத்தலின் கருத்தாகிய
தற்குறிப்பேற்றம்; பிழையுடன்படுவது போலச் சாலி தலைவணங்கிற்று என்பது
அவ்வணக்கத்தின் கருத்தாகிய தற்குறிப்பேற்றம் என்றலுமொன்று. இவை
உலகநூற் பொருள் தழுவிய கருத்துக்கள்.
இனி,
அறிவனூற் பொருளாகிய மேம்பட்ட பிறிதொரு பொருளும்
இங்குப் புலப்படுதல் குறிக்கத்தக்கது. கழுநீர் என்பது
உயிர்களை
ஆட்கொண்டு உய்விக்கும் ஆசாரியர் அணியும் திருவடையாள
மாலையினையும் அருள் பொதிந்து விளங்கும் அவரது திருநோக்கத்தையும்
உணர்த்துவது எனவும், கழுநீர்க்குச் சாலி தலை வணங்குதல்,
"பத்தியின்பால் முதிர்தலை வணங்கி மற்ற, வித்தகர் தன்மை போல
விளைந்தன சாலி" (72) என்றபடி, இறைவனது அருள் நோக்கம்
பெற்றவுடனே, முன்னர் ஆணவத்தால் தலைநிமிர்ந்து நின்ற உயிர்
அத்தன்மை மடங்கித் தலைவணங்கின தன்மை யுணர்த்துவது எனவும்
வருவதோர் மெய்ஞ்ஞானப் பொருட்குறிப்பும் கண்டுகொள்க.
இனி,
இச்சரிதத்தினை ஒட்டிச் சாலி இங்கு உழவராகிய
நாயனாரையும், கழுநீர் அவர்பால் அருட்கண்
சேர்த்தி ஆட்கொண்டு
அவரது அன்பின்றிறத்தினை உலகமறியச் செய்யவரும் இறைவரையும்
குறிப்பால் உணர்த்தியன எனவும், உள் நீர்மை......சிவக்கும்
என்றது,
"சேலுங் கயலுந் திளைக்கும் கண்ணா ரிளங்கொங்கையிற் செங்குங்குமம்,
போலும் பொடியணி மார்பிலங்கும் என்று "நாயகிநாயகத் தன்மையிற்
புணர்ந்து பேரின்பமளிக்கும் அருட்பார்வை குறித்தது எனவும், கழுநீர்க்குத்
தலைவணங்கும் என்றது அவ்வருட்பார்வையில் வசீகரிக்கப்பட்ட நாயனார்
அவர் திருப்பாதங்களில் வணங்கி அவர் வேண்டியதெல்லாங் கொடுக்க
நிற்பதனைக் குறித்தது எனவும் இச்சரிதப் பொருள் காட்டும் உட்குறிப்புடன்
விளங்குவதும் காணத்தக்கது.
மண்
நீர்மை - மண் - மண்ணுகின்ற - கழுவுகின்ற - மாசு
போக்குகின்ற; நீர்மை - நீரின் தன்மை
எனக்கொண்டு இவ்வயல்களிற்
காணப்படும் இத்தோற்றங்களின் உட்குறிப்பினை உணர்ந்தால்
அவ்வுணர்ச்சிதானே அவ்வாறுணர்வோரின் ஆணவக்கறையை மண்ணும் -
கழுவும் தன்மை என உரைக்கவும் நின்றது. "கடல்பெரிது மண்ணீருமாகாது"
என்ற நீதி நூலும் காண்க.
வளவயல்கள்
- மண்ணும் - நீரும் என்ற இருவளனும் பொருந்தப்
பெற்றமையால் வளத்திற் சிறந்த வயல்கள் என்க. அற்றாகலினன்றே
நென்மணிகளின் பாரந் தாங்கலாற்றாது சாலி தலைவணங்கியது என்றார்
என்ப. இது பற்றியே மண் நீர்மை நலம் -
என்றார்.
வயல்கள்
அயல்களின் உள - என்க. வயல்கள் மருதநிலத்தின்
ஊர்களை அடுத்து வயலிற் காணப்படுமியல்பும் குறிக்க. 2
|