பக்கம் எண் :


மானக்கஞ்சாறநாயனார்புராணம்1121

 
868. புயல்காட்டுங் கூந்தல்சிறு புறங்காட்டப் புனமயிலின்
இயல்காட்டி யிடையொதுங்க வினங்காட்டு முழத்தியர்கள்
முயல்காட்டு மதிதோற்கு முகங்காட்டக் கண்மூரிக்
கயல்காட்டுந் தடங்கள்பல கதிர்காட்டுந் தடம்பணைகள்.
3

     (இ-ள்.) சிறுபுறம் புயல்காட்டும் கூந்தல் காட்ட - பிடரி மேகங்களை
ஒத்த கூந்தலைக்காட்ட; இடை புனமயிலின் இயல்காட்டி ஒதுங்க -
இடையானது புனத்திலுள்ள மயிலினது இனிய சாயலைக் காட்டி (ஓர்புறம்)
அசைய; இனம் காட்டும் உழத்தியர்கள் - கூட்டமாக அங்குப் பயிலும்
பள்ளப்பெண்களுடைய; முயல்காட்டும்......முகம் காட்ட - முயற்கறையைக்
காட்டும் சந்திரனைத் தோல்வியுறச் செய்கின்ற முகங்களைக் காட்ட; கண்..பல
- கொழுத்த கயல்மீன்கள் அவர்களது கண்களைக் காட்டுதற்கிடமாகிய பல
வாவிகள்; கதிர்காட்டும் தடம் பணைகள் - நெற் கதிர்களை மேலே விளங்கக்
காட்டிநிற்கும் பெரிய வயல்களில் உள்ளன.

     (வி-ரை.) புயல் காட்டும் - புயலின் தன்மையைக் காட்டும். சிறுபுறம்
கூந்தல் காட்ட
- கூந்தல் மேகங்களைப்போலக் கறுத்துப் பரவிப்
பிடரியிலே அலைந்தது என்பது கருத்து.

     இடை........ஒதுங்க - இப்பெண்கள் நடக்கும்போது இடை அசைவது
மயில்களது சாயலை ஒத்திருந்தது என்பதாம். இன் - இனிய. பறவையினம்
எல்லாவற்றினும் இனிய சாயல் மயிலுக்கே உளது என்ப. இன் - சாரியை
எனினுமாம்.

     இனம்காட்டும் உழத்தியர்கள் - பள்ளப்பெண்கள் வயலில்
நாற்றுநடுதல், களை கட்டல், அறுத்தல் முதலிய தொழில்கள் செய்யப்போவார்
கூட்டமாகச் செல்லுமியல்பு குறித்தது.

     முயல் காட்டும் - முயல் - சந்திரனிற் காணப்படும் கறை. இதனை முயல் என்பது வழக்கு. காட்டும் - காட்டுதலினால். மதி தோல்வி யுறுதற்குக் காரணம் கூறியவாறு. ஏதுப்பெயர் கொண்ட பெயரெச்சம்.

     மதிதோற்கும் முகம்காட்ட - மதி இவர்களது முகம்
போன்றதென்பர்; ஆயினும் அது முயற்கறையோடுள்ளமையால் ஒப்பாகாமல்
தோல்வியுற்ற தென்றபடி. தோற்கும் - மதியைத் தோல்வியுறுவிக்கும் எனப்
பிறவினைப் பொருளில்வந்தது. காட்ட - முகம் காணுமாறு கண்ணாடியில்
நீட்டுவது போலத் தண்ணீரில் அவர்கள் முகங்களைக் காட்ட. இதனைத்
தமது வெற்றி புலப்படுமாறு முகத்தைத் தடத்தினிடம் காட்டியதாகத்
தற்குறிப்பேற்றம் பெறக் கூறினார். நீரில் முகம் பார்க்கும் வழக்கமும் உண்டு
என்க. "மொய்யொளியி னிழற்காணு மாடியென" (திருநா - புரா - 9) என்ற
கருத்தை இங்கு வைத்துக் காண்க.

     முரிக்கயல்.........தடங்கள் - மூரி - வலிய. கயல் - கெண்டை
மீன்கள். கயல்கள் கண்போல் விளங்கின என்க. வடிவமும், நீரினுட் பிறழுந்
தொழிலும், விளக்கமும் பற்றிக் கயலைக் கண்ணுக்கு ஒப்புக் கூறுவர்.
மெய்யும், தொழிலும், பயனும் பற்றி வந்த உவமை. உழத்தியர்
முகங்காட்டுதலைத் தற்குறிப்பேற்றம் பெறக் கூறிய ஆசிரியர் தடங்களும்,
உழத்தியரை நோக்கிப், "புயல் மயில் மதி முதலியவற்றை நீவிர் இனங்காட்டி
வென்றீர் என நினையற்க! உமது கண்ணுக்கு இனமாகிய கயல்
எம்மிடத்துள்ளன" என்று தடம் கயற்கண்காட்டும் எனத் தற்குறிப்பேற்ற
அணியும் நாடகச் சுவையும்பெறக் கூறிய அழகு காண்க.

     புயல்காட்டும், இயல்காட்டி, கயல்காட்டும் என்பவற்றில் காட்டுதல்
என்பது உவம உருபுப்பொருள் காட்டி நின்றது.

     தடங்கள் - தடாகங்கள் - வாவிகள். பணைகளிற் பல தடங்கள்
உள்ளன என்க. பல தடங்களும் பண்ணைகளும் உள்ளன என
எண்ணும்மைகள் தொக்கனவாகக்