பக்கம் எண் :


1174 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     அண்ணலார் - தாயனாரது செயலின் அருமையும் பெருமையும்
விளங்குமிடமாதலின் இங்கு இப்பெயராற் கூறினார். "வள்ளலார்
இளையான்குடி மாறனார்" (456) என்றதும், இவ்வாறு கூறும் பிறவும் காண்க.

     இஃது - இவ்வாறு கூலி எல்லாம் செந்நெல்லேயாகப் பெற்றது.

     அடியேன் செய்த புண்ணியம் - சிவத் தொண்டு செய்ய வாய்ப்பது
முன் செய்த பெரும் புண்ணிய விசேடத்தாலன்றிக் கிட்டாதென்பது
உண்மையாதலின், தம் கூலி முழுவதும் சிவனுக்கே அமுதாகப் பயன்படும்
பேறு முன் செய்த புண்ணியத்தால் கிடைத்த தென்றார். "என்ன புண்ணியஞ்
செய்தனை நெஞ்சமேயிருங்கடல் வையத்து, முன்னை நீபுரி நல்வினைப்
பயனிடை" (திருவலஞ்சுழி - நட்டராகம் - 1) என்ற ஆளுடைய பிள்ளையார்
தேவாரக் கருதினை இங்குச் சித்திக்க.

     போத - நிரம்ப; மிகுதியாக. "பூதிசாதனத்தவர் முன் போற்றப்
போதேன்" (சிறுத் - புரா - 45) என்புழிக்காண்க. போதுதல் - செல்லுதல்
என்று கொண்டு, தமது திருத்தொண்டு முட்டுப்படாது மேற்செல்ல
என்றலுமாம்.

     போத அமுது - போதம் - தற்போதம் - பசுபோதமாகிய அமுது
என்றுரைக்க நின்ற தொனிக்குறிப்பும் காண்க. தாயனார் தமது உணவுக்கு
நெல் இல்லையே என்ற உணர்ச்சி முற்றும் அற்றவராய் இறைவரது
திருவமுதுக்காவதாய் எல்லாம் செஞ்சாலியேயாக விளைந்ததுபற்றிச்
சிந்தைமகிழ்ந்ததுமன்றி, "இஃது அடியேன்செய்த புண்ணியம் " என்றும்
கொண்டாராதலின் செந்நெல்லை அமுது செய்வித்ததனோடு தற்போதத்தையும்
பலியாக்கினர் எனவும், அதனை அவர் விரும்பியவாறே இறைவர் மகிழ்ந்து
அமுதுசெய்தனர் எனவும் கொள்ளக் கிடப்பதும் கருதத் தக்கது. ‘தறுகட்
பாசக், கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு' (பாயிரம்) என்ற
திருவிளையாடற்புராணம் காண்க. "அன்பென்னு மமுது" என்பது வாயிலார்
புராணம்.

     அமுது செய்விப்பார் ஆனார் - ஊட்டுவிப்பாராயினர். ஆனார்
என்றது இவ்வாறு பல நாளும் செய்தனர் என்பது குறித்தது. வைகலும் என
வரும்பாட்டிற் கூறியது காண்க.

     ஆனார் - ஆயினர்; ஆக்கம் பெற்றனர்; இவ்வாறல்லாத பிறர்
எல்லாம் ஆனாராகாது போனார்களேயாவர் என்ற குறிப்பும் காண்க.
"போற்றிலார் ... ஆக்கைக்கே இரைதேடி யலமந்து, காக்கைக் கேயிரை
யாகிக் கழிவரே" என்ற தனித்திருக்குறுந்தொகை முதலியவற்றின்
கருத்துக்களும் காண்க. 11

914. வைகலு முணவி லாமை மனைப்படப் பையினிற் புக்கு
நைகர மில்லா வன்பி னங்கைகை யடகு கொய்து
பெய்கலத் தமைத்து வைக்கப் பெருந்தகை யருந்தித்
                                   தங்கள்
செய்கடன் முட்டா வண்ணந் திருப்பணி செய்யு நானில்,
12
 
915. மனைமருங் கடகு மாள வடநெடு வான மீனே
யனையவர் தண்ணீர் வார்க்க வமுதுசெய் தன்ப னாரும்
வினைசெயன் முடித்துச் செல்ல மேவுநா ளொருநாண்
                                   மிக்க
முனைவனார் தொண்டர்க் கங்கு நிகழ்ந்தது
                              மொழியப்பெற்றேன்.
13

     914. (இ-ள்.) வெளிப்படை. நாள்தோறும் உணவில்லாமையினால்,
குறைவுபடாத அன்பினையுடைய மனைவியார் வீட்டுக் கொல்லையிற்புகுந்து
கையினாற் பறிக்கும் இலைக்கறிகளைப் பறித்துச், சமைத்து, உண்கலத்தில்
இட, அதனையே உண்டு, தாங்கள் நியதியாகச் செய்த திருத்தொண்டின்
கடமை முட்டுப்படாதபடி திருப்பணிவிடை செய்து வருநாளில், 12