பக்கம் எண் :


அரிவாட்டாயநாயனார்புராணம்1175

 

     915. (இ-ள்.) வெளிப்படை. வீட்டின் பக்கத்தில் இருந்த இலைக்கறிகள்
அற்றுப்போகவும், அருந்ததியே போன்ற கற்பினையுடைய மனைவியார்,
தண்ணீரை வார்க்க அதனையே அமுதுசெய்து, அன்பனாரும், தமது
திருத்தொழிலையும் அருஞ்செயலையும் முடித்துச் செல்வாராக, இவ்வாறு
பொருந்துகின்ற நாட்களிலே ஒருநாள், முதல்வனாரது பெருந்தொண்டருக்கு
அங்கு நிகழ்ந்ததனை, இனி எடுத்துச்சொல்லும் பேறு பெற்றேன். 13

     இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

     914. (வி-ரை.) வைகலும் உணவு இலாமை - தமது கூலி முழுவதும்
செந்நெல்லேயாக, அதனை முற்றும் இறைவரை அமுது செய்வித்தாராதலின்
தமது உணவுக்கு நெல் இல்லையாகலான் என்க. இதனால் அவர் இறைவரை
ஊட்டிய அமுதத்தினைச் சிவநின்மாலியம் உட்கொள்ளலாகாது என்ற
விதியினால் தாம் உட்கொள்ளவில்லை என்பதும் போந்ததாம். வைகலும் -
உம்மை இவ்வாறு பல நாட்களும் நிகழ்ந்தமை குறித்தது. உணவு -
நெல்லரிசி யமுதம் குறித்தது. இலாமை - இல்லாமையால்.

     மனைப்படப்பை - வீட்டுக் கொல்லைத் தோட்டம்.

     புக்கு - கொய்து - "தொக்க மாநிதித்தொன்மையில் ஓங்கிய மிக்க
செல்வ"த்திலிருந்தவராதலின் இவ்வம்மையார் தாமே கொல்லையுட் புகுந்து
இலைக்கறிவகை தேடிப் பழகாதவர் என்பது குறிப்பு. "அல்லல் நல்குர
வாயிட" (911) என்றமையால் முன்னே மிக்க செல்வத்திலிருந்த இவர்க்கு
இப்போது இடம் பொருள் ஏவல் முதலிய ஒன்றும் இல்லையாயின
என்பதாயிற்று.

     நைகரம் - குறைவு. நல்குரவு வந்தபோது அன்பு குறைவுபட் டறுவது
உலகியல்பு. அவ்வாறன்றி இவ்வம்மையார் நல்குரவினும் குறைவுபடாத
அன்புடன் விளங்கினர் என்பது. நைகரமில்லா நங்கை என்று கூட்டி, நைகரம்
- வருத்தம் - துன்பம் - என்று கொண்டு இந்நிலைமை வந்ததனுக்கு
அம்மையார் சிறிதும் வருந்தினாரலர் என்றுரைப்பாருமுண்டு.

     சிவபெருமானது திருத்தொண்டில் இவ்விருவரும் கருத்து ஒருமித்து
ஆதரவு செய்தனர் என்றும், தமக்குவந்த இந்நிலைமையினாற்
சிறிதுங்கவலையின்றித் திருப்பணியில் ஈடுபட்டனர் என்றும் காட்ட இவ்வாறு
விதந்து கூறினார். மேற்பாட்டிற் கூறியவாறு, தாயனார் "இஃதடியேன் செய்த
புண்ணியம்" என்று கொண்ட கருத்தினையே அம்மையாரும்
கொண்டிருந்தனர் என்க. இறைவரை ஊட்டிய சிறப்பின் மகிழ்ந்தாரல்லது
இவ்விரு பெருமக்களும் தங்களுக்கு உணவிலாமையை நினைத்தாரலர்
என்பதாம். அன்பு - சிவன்பாலன்பும் தமது கணவனார்பாலன்பும் குறித்தது.

     கை அடகு - கையினாற் பறிக்கப்படும் கீரை. அடகு - இலைக்கறி,
கீரை வகை. இவை பெரும்பாலும் மனிதராற் பயிர் செய்யப்படாது தாமாக
முளைத்தவை.

     பெய்கலம் - உணவு பெய்யும் பாத்திரம் - உண்கலம். இலை - சருகு
முதலியன. கொய்து அமைத்துப் பெய்கலத்து வைக்க எனக் கூட்டுக.
அமைத்து - சமைத்து.

     பெருந்தகை - தமது பசித்துன்பத்தை யெண்ணாது அடகும் நீரும்
உண்டு கொண்டு, இறைவருக்கு அமுதூட்டுவதனையே கருதி மகிழ்ந்த
பெருமையின் தகுதி குறித்தது.

     தங்கள் செய்கடன் - இருவரும் சேர்ந்து செய்த என்பது குறிக்கத்
தங்கள் என்றார். இருவரும் கூடிச்செய்த விவரம் 915 - 916 பாட்டுகளிற்
காண்க. செய் கடன் - கடமைப்பாடாக மேற்கொண்டு செய்தது.

     திருப்பணி - அமுதூட்டுதலும், அதற்காவன செய்தலுமாம். அவை
கூலி வேலை செய்து செந்நெல்லும் - கீரையும் - மாவடுவும் தேடுதல், ஆன்
ஐந்து