பக்கம் எண் :


அரிவாட்டாயநாயனார்புராணம்1185

 

வெவ்வினையும் விட்டு நீங்கிப், பெருக்கவே மகிழ்ச்சிநீடத் தமது பெருமானார்
தம்மைப் பேணித் தந்த அருட்பெருங் கருணையினை நோக்கிக், கைகளை
அஞ்சலியாகக் குவித்து நின்று, 19

     922. (இ-ள்.) வெளிப்படை. "அடியேனது அறிவில்லாமையைக் கண்டு
வைத்தும் எனது அடிமையை வேண்டிப் பொருட்படுத்தி நிலத்தின்மேற்
கமரிலே வந்து இங்கு அமுதுசெய் பரனே போற்றி! துடிபோன்ற
இடையையுடைய உமை யம்மையாரை ஒரு பாகத்திலுடைய தூய நல்ல
சோதியே போற்றி!; திருநீற்றினை யணிந்த பவளம் போன்ற திருமேனியையும்,
புரிசடையையும் உடைய புராணனே போற்றி!". 20

     923. (இ-ள்.) வெளிப்படை. என்று அவர் துதிக்க, இடபவாகனராக
வெளிப்படக் காட்சிகொடுத்து, "நீ புரிந்த செய்கை நன்று; நன்னுதலையுடைய
உனது மனைவியுடன் என்றும் நீங்காது நமது உலகத்தில் வாழ்வாயக!" என்று
அருளிச்செய்து, அம்பலத்தாடும் ஐயர், அவர் தம்முடனே நண்ணத், தமது
இளைய விடையினை ஊர்ந்து எழுந்தருளிப் போயினர். 21

     இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

     921. (வி.-ரை.) திருக்கை - ஐயரது இடது கை. "வீசிய செய்ய கை"
(920) எனக் கூறிய அந்தக் கை. "எழுந்தது" என மேற்பாட்டில் அதன்
வெளிப்பாட்டைக் கூறினார்; இங்கு, "சென்று" - "பிடித்த" என அதன்
றொழிற்பாட்டைக் கூறினார்; இறைவனது "சென்றடையாத திரு" வினைத்
தருவதாதலால் அதனைத் திருக்கை என்று சிறப்பித்தார்.

     திண்கை - தாயனாரது கை. மனத்தின் திண்மை கையின்மேல்
ஏற்றப்பட்டது. மேற்பாட்டில் கையினதுசெயலின் வண்மைபற்றி வண்கை
என்ற ஆசிரியர், இங்கு அச்செயலின் செய்தற்கரிய திண்மை பற்றித் திண்கை
என்றார். திண்மையாவது நினைத்தது முடிக்கும் ஆற்றல். கலங்கா நிலைமை
என்பர் பரிமேலழகர். "எண்ணிய வெண்ணியாங் கெய்துப வெண்ணியார்,
திண்ணிய ராகப் பெறின்" (குறள்) என்றபடி இங்குத் தாயனார் தமது
செய்கையினால் தாம் ஊட்டிய அமுதினை இறைவர் உண்டதைக் காண
எண்ணிய கருத்தை எண்ணியாங் கெய்தினர் என்பது தோன்ற இங்குத்
திண்மை என்ற அடைமொழி புணர்த்தோதினார்.

     வெருக்கொடு - வெருக்கொள்ளுதல் - தாம் எதிர்பாராதபடி
சடுதியில் தமது கை பிடிக்கப்பட்டதும், அதனால் தமது கழுத்தரியும் செயல்
தடுக்கப்பட்டதும் உணர்ந்ததனால் உளதாகிய அற்புத உணர்ச்சியின்
மெய்ப்பாடு. "வெருக்கோளுற்றதுநீங்க" (260) என்றவிடத் துரைத்தவை பார்க்க.
"வெருக்கொண்டார் போலழுவர் குறிப் பயலாய்" (திருஞான - புரா - 55)
என்றதும் பிறவும் காண்க.

     வெருக்கொண்டது மனத்தின் முதலில் எழுந்த நிகழ்ச்சி; ஊறுநீங்க
உணர்ந்தது இரண்டாவது நிகழ்ச்சி; மகிழ்ச்சி நீடியது மூன்றாவது நிகழ்ச்சி.
இவை நிகழ்ந்த முறை பற்றி அம்முறையிற் கூறினார். ஊறு - அரிவாளினால்
கழுத்தை அரிந்ததனால் உற்ற புண். நீங்க - திருவருளால் புண்மாறி
முன்போலாக.

     வெவ்வினைவிட்டு நீங்கி - வெவ்வினை - கடிய வலிந்த செயலாகிய
கழுத்தரிதல். வெம்மை - விருப்பம் என்று கொண்டு, தாமே விரும்பிச்செய்த
செயல் என்றுரைப்பினுமமையும். வெவ்வினை - பிறவிக்குக் காரணமாகிய
மூலவினையின் பகுதி என்றும், நீங்கி - சத்திமடங்கி மறைந்து என்றும்
போந்த குறிப்பும் காண்க. இறைவரது திருக்கையினாற்
பிடிக்கப்பட்டமையாலும், ஊறுநீங்கியமையினாலும், மாயை யாக்கை நீங்கிச்
சிவயாக்கை பெற்றனர். இவ்வாறு பாசநீக்கம் பெற்ற தாயனார் சிவப்பேறு
பெறுதல் 923-ல் உரைக்கப்பட்டது.