பக்கம் எண் :


அரிவாட்டாயநாயனார்புராணம்1187

 

      923. (வி-ரை.) என்று அவர் போற்றி செய்ய - அவர் -
வெருக்கொடு - நீங்க - நீங்கி - நீட நோக்கி - கூப்பி - நின்று - போற்றி -
போற்றி - போற்றி என்று போற்றி செய்ய என்க.

     அவர் - "மாசறு சிந்தை அன்பர்" என மேற்பாட்டிற் கூறிய அவர்.

     நின்று போற்றி செய்ய - ஐயர் - தோன்றி - "வாழ்வாய்" என்று -
அவர் உடனே நண்ண - சென்றார் - என இம்மூன்று பாட்டுக்களையும்
தொடர்ந்து முடித்துக்கொள்க.

     "நன்று......வாழ்வாய்" - இது இறைவர் தாயனாரை நோக்கி அருளிய
திருவாக்கு. நன்று நீபுரிந்த செய்கை - தாயனாரது செயற்கருஞ்செய்கையைப்
பாராட்டிய அருமைப்பாடு குறித்தது. "நாம் சொல்லிய அற நுல்களில்
தற்கொலை தீது என்று விதித்த நாமே, எம்மிடத்து அன்பின்றிறத்தால் செய்த
இதனை நன்று என கொள்ளற்காயது இச்செயல்" என்றுரைக்கவும் நின்றது
காண்க.

     நன்னுதல் - நல்லநுதலினை யுடைய உன் மனைவி. உடனே கூட -
"நைகரமில்லா அன்பின் நங்கை கையடகு கொய்து, பெய்கலத் தமைத்து
வைக்க" (914) எனவும், "வடநெடு வான மீனே யனையவர் தண்ணீர் வார்க்க"
(915) எனவும் கூறிய வாற்றால் அடியார்பணியும், "பின்புபோம்
மனைவியார்ஆன் பெற்றஅஞ் சேந்திச் சென்றார்" (916) என்றும், "மாதரார் -
மட்கல மூடு கையால் காதலாலணைத்தும்" (917) என்றும் கூறியவாற்றால்
அரன்பணியும் உடனிருந்து புரிந்தனராதலின் தமது நாயகருடனே கூடச்
சிவலோக வாழ்வு பெற்றனர். திரு நீலகண்ட நாயனாரது மனைவியார்க்கும்
(402), இயற்பகைநாயனாரது மனைவியார்க்கும் (437),
இளையான்குடிமாறநாயனாரது மனைவியார்க்கும் (465) இன்னும் இவர்கள்
போன்றுள்ள தேவியர்க்கும் இவ்வாறே இறைவர் அருளியது இங்கு நினைவு
கூர்க.

     நம் உலகில் என்றும் வாழ்வாய் என்க. மீளாத நிலையில் சிவலோக
வாழ்வு பெற்றிருப்பாய். என்று - என்று அருளிச்செய்து. அவர் உடனே
நண்ண
- தாயனாரும் மனைவியாரும் தம்முடனே வர. சென்றார் -
எழுந்தருளிப் போயினார்.

     ஒன்றி நம்முலகில் - என்பதும் பாடம். 21

924. பரிவுறு சிந்தை யன்பர் பரம்பொரு ளாகி யுள்ள
"பெரியவ ரமுது செய்யப் பெற்றிலே" னென்று, மாவின்
வரிவடு விடேலெ னாமுன், வன்கழுத் தரிவாள் பூட்டி
யரிதலா "லரிவாட் டாய" ராயினார் தூய நாமம்.
22

     (இ-ள்.) வெளிப்படை. அன்பு பொருந்தியசிந்தையினையுடைய
அன்பராகிய தாயனார், "பரம்பொருளாகியுள்ள பெரியவராகிய சிவபெருமான்
இங்கு அமுது செய்யும் பேறு பெற்றிலேன்" என்று கொண்டு வரியினையுடைய
மாவடுவினது "விடேல்" என்ற ஓசையினை அவர் கேட்பிக்கு முன்பு, தம்
வன் கழுத்தினை அரிவாளினைப் பூட்டி அரிதலினாலே அரிவாட்டாயர்
என்ற தூய பெயரினை உடையர் ஆயினர்.

     (வி-ரை.) இப்பாட்டுக் கவிக்கூற்று.

     பரிவுறு சிந்தை - பரிவு - அன்பு. மாசறு சிந்தை அன்பர் (920),
அன்புகாட்டிய நெறியின் (919) என உரைத்தவற்றை இங்கு நினைவு கூர்க.

     பரம்பொருள்......பெரியவர் - எல்லாப் பொருள்களுக்கும்
அப்பாற்பட்ட - கடந்த - எல்லையாயுள்ள பொருள். "உலகுய்ய நடமாடும்
எல்லை" (திருநாளை - புரா - 35,), "அலகில் கலையின் பொருட்கெல்லை
யாடுங் கழலே" (சண்டீசர் - புரா - 15) என்பனவாதிய திருவாக்குக்களும்,
"அமுதுசெய் பரனே" (922) என்ற விடத்துரைத்தவையும் காண்க.