பக்கம் எண் :


ஆனாயநாயனார்புராணம்1215

 

     மடைதிறத்தலாவது சிறைப்பட்ட நீரினை மடை திறந்து அதன்
வழியே வெளியில் விடும்போது அது பெருகியும் மிக விரைந்தும்
வருவதுபோல, உள்ளிருந்து வேகமாய் வெளிவருதல் உடையவர், அன்பருளம்
புகுதற்கும் இங்ஙனமே "சிறைபெறா நீர்போற் சிந்தைவாய்ப் பாயுந்
திருப்பெருந்துறையுறை சிவனே" (திருவாசகம்) என்று உவமை கூறுவதும்
காண்க. அஃதாவது அன்பின் பெருக்கு உள்ளே யடங்கியிருக்க மாட்டாது
வெளிப்படுதல்.

     ஒன்றிய சிந்தை - வேறு பிரித்துணரமாட்டாது ஒன்றாந் தன்மையிற்
பட்ட மனது. "ஒன்றி யிருந்து நினைமின்கள்" முதலிய திருவாக்குக்கள்
காண்க. இது பற்றி முன்னுரைத்தவையும் பார்க்க.

     இப்பாட்டினுள் விரைத்தாமம் - மன்றன் மலர் என இரண்டு மணம்
வைத்தார். இவற்றுள் முதலில் விரை என்றது ஐம்புலன்களில் நாற்றம் என்ற
வாயிற்காட்சி யுணர்ச்சியினையும், பின் மன்றல் என்றது அதனை உண்ணின்ற
சிவக்காட்சியுடன் இணைத்துக் கண்ட தன் வேதனைக்காட்சி
யுணர்ச்சியினையும்குறித்தன.

     கார்க்கொன்றை பொதுவாக எல்லார் நெஞ்சையும் கவரும் ஆற்றல்
வாய்ந்தது என்றும், சீவகரணங்கள் சிவகரணங்களாக மாறப்பெற்றவராயும்,
எல்லாவற்றையும் சிவமாகப் பார்க்கும் நிலை யெய்தியவராயும் உள்ள
ஆனாயருக்குக் கொன்றை சிவமாகவே தோன்றலாயிற்று என்றும்,
பக்குவப்பட்ட உயிர்களுக்கு இயற்கை சிவமாகத்தோன்றுவது இயல்பு என்றும்
இங்கு விசேட உரை காண்பாருமுண்டு. கார்காலத்து நிறைய மலர்ந்த
கொன்றை பொதுவாக யாவர் நெஞ்சையும் கவர்வதென்பது உண்மை. அஃது
ஐம்பொறிகளிற், கண்ணாகிய, இந்திரியத்தின் வாயிற்காட்சி மட்டுமாய்
ஒழிவது. அது வேறு. ஆனாயர் இங்குக் கொன்றையைச் சடையாராகக் கண்ட
காட்சி வேறு. இது வெறும் இந்திரியக் காட்சியாய்க் கழியாது. அன்றியும்
சீவகரணங்கள் சிவகரணங்களாக மாறப் பெற்றதனாலோ அன்றி
எல்லாவற்றையும் சிவமாகப் பார்க்கும் நிலை யெய்தியதனாலோ உண்டாயதும்
அன்று என்க. இயற்கைத்தோற்றம் என்பதும் அதுவே சிவத்தோற்றம் ஆம்
என்பதும் உணரின் ஒரு தோற்றமேயாம். உண்மையால் நோக்குங்கால்
சிவனது ஆணையால் இயற்கைப்பொருளாகிய மாயையினின்றும் தோற்றிய
ஆக்கப்பொருளே உலகம். அதினின்றும் தோன்றும் விகாரங்களை நோக்கி
அது விகாரமின்றி நின்றழிதல்பற்றி, உபசாரமாக இயற்கை எனப்படும்.
இயற்கை என்ற தனிப்பொருள் இல்லை. சிவனது ஆணையே உலக
இயற்கைப் பொருள் என்பது சாத்திரம். ஆனாயர் முக்கரணங்களாலும்
சிவனடியல்லது வேறு பேணாதார் (934); அவ்வாறு பேணும் செயலினைத்
திருவடியன்புறு கானத்தின் குழல் வாசனையேயாக மேற்கொண்டார் (937);
அதன்படி ஐந்தெழுத்தினைச் சுருதி பெற வாசித்துச் சராசரங்களுக்குத் தம்
கருணை தங்கும் இசையமுது அளித்து வருவாராயினர் (939);
இவ்வொழுக்கத்தின் முதிர்ச்சியினாலே மலர்ந்த கொன்றையின் காட்சியும்
தாம் எப்போதும் உள்ளே வைத்துக் கண்ட சிவக்காட்சியும் ஒன்றாயிற்று;
அதுமுதிர்ந்து உள்ளடங்கமாட்டாது இசை வெள்ளமாகப் பரந்தது
என்பதாம்.21

947.



அன்பூறி மிசைப்பொங்கு மமுதவிசைக் குழலொலியால்
வன்பூதப் படையாளி யெழுத்தைந்தும் வழுத்தித்தாம்
முன்பூதி வருமளவின் முறைமையே யெவ்வுயிரும்
என்பூடு கரைந்துருக்கு மின்னிசைவேய்ங் கருவிகளில்,



22
 
948.

ஏழுவிர லிடையிட்ட வின்னிசைவங் கியமெடுத்துத்
தாழுமலர் வரிவண்டு தாதுபிடிப் பனபோலச்
சூழுமுரன் றெழநின்று தூயபெருந் தனித்துளையில்
வாழியநந் தோன்றலார் மணியதரம் வைத்தூத,
23