பக்கம் எண் :


1218 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     இன்இசை வங்கியம் - இனிய இசையைப் பெருக்கும் குழல்.
வங்கியம்
- குழலின் மரபுப்பெயர். வங்கியம் - வங்கிசம் - வம்மிசம்
என்பன வம்சியம் என்னும் ஒரு சொல்லின் திரிபு வழக்குக்கள். கிழங்காகிய
ஒரே வம்மிசத்திலிருந்து புடைத்துக் கிளைத்துத் தோன்றுவதனால் மூங்கிலுக்கு
வம்சம் எனப்பெயர் வழங்குவதாயிற்று. வம்சத்தினின்றும் ஆயது வம்சியம்.
அது தமிழில் வங்கியம் என்று திரிந்து நின்று, "எண்ணெய்"என்பது போல,
ஏனையவற்றிற்றோன்றும் கருவிகட்கும் பெயராயது என்ப. இது நிகண்டினும்
எடுக்கப்பட்ட பெயர். குழலுக்கு மூங்கில் உத்தமம் என்பர். "குழல் -
வங்கியம்.
அதற்கு மூங்கில், சந்தனம், வெண்கலம், செங்காலி, கருங்காலி
என ஐந்துமாம்.....இவற்றுள் மூங்கிலிற் செய்வது உத்தமம்" என்பது
அடியார்க்கு நல்லார் உரையிற் காணப்படும். இதுவே உத்தமமாதலின்
மூங்கிலின் பெயராகிய வங்கியம் என்பதே குழலுக்கு மரபுப் பெயராய்
வழங்கலாயிற்று.

     புல்லாங்குழல் என்ற பெயரும் இப்பொருளினையே குறிக்கும். புல்
என்ற வகுப்பிற்பட்ட தாவரப் பொருளால் ஆகிய குழல் என்பது பொருள்.
(புள்ளாங்குழல் என வழங்குவது தவறாகிய மரூஉவழக்கு). தாவரங்களில்
காழ்த்த பாகம் வெளியே யிருப்பதால் மூங்கில்வகை புல் என்ற இனத்தைச்
சேர்ந்தது என்பர். "புறக்கா ழனவே புல்லென மொழிப" என்பது
தொல்காப்பியம் (மரபியல்).

     வங்கியம் - "இதன் பிண்டியிலக்கணம் - நீளம் இருபது விரல்;
சுற்றளவு நாலரை விரல். இது துளையிடுமிடத்து நெல்லரிசியில் ஓர் பாதி
மரனிறுத்திக்கடைந்து வெண்கலத்தாலே அணைசுபண்ணி இடமுகத்தை
யடைத்து வலமுகம் வெளியாக விடப்படும்........இனித் துளை யளவிலக்கணம்
- அளவு இருபது விரல். இதிலே தூப முகத்தின் இரண்டு நீக்கி முதல் -
வாய்விட்டு, இம் முதல்வாய்க்கு ஏழங்குலம் விட்டு வளைவாயினுமிரண்டு
நீக்கி நடுவினின்ற ஒன்பது விரலினும் எட்டுத் துளையிடப்படும். இவற்றுள்
ஒன்று முத்திரை என்று நீக்கி, நின்ற ஏழினும் ஏழு விரல் வைத்து
ஊதப்படும். துளைகளின் இடைப்பரப்பு ஒரு விரலகலம் கொள்ளப்படும்."
(அடியார்க்கு நல்லாருரை - சிலப் - அரங் - ஆய்ச்.)

     ஏழுவிரல்.....வங்கியம் - மேலே கூறியபடி ஒன்பது விரலினும்
ஒவ்வோர் விரலிடையிட்டு எட்டுத் துளைக ளிடப்படுவனவாயினும் ஏழு
துளைகளிற் செய்யும் தொழிற்பாட்டின் ஏழிசையும் பிறக்குமாதலானும், இது
குழலின் சிறப்பியல்பாதலானும் ஏழு விரலிடையிட்ட - வங்கியம் என்றார்.
ஏழு விரலாவன - இடக்கைப் பெருவிரலும் சிறுவிரலும் நீக்கி மற்றை
மூன்றும் விரலும், வலக்கையிற் பெருவிரலொழிந்த நான்கு விரலுமாம்.
துளைகள் ஏழிலும் ஏழுவிரலும் வைத்து வாசிக்க இவற்றுள்ளே ஏழிசையும்
பிறக்கும். ஏழு துளையினும் ஏழிசையும் எழுத்தாற் பிறக்கும்.
அவ்வொழுத்தாவன : ச - ரி - க - ம - ப - த - நி என்பனவாம் எனவும்,
இவ்வேழெழுத்தினையும் மாத்திரைப்படுத்தித் தொழில்செய்ய இவற்றுள்ளே
எழிசையும் பிறக்கும் எனவும், இவ்வேழிசையாவன: சட்சம், இடபம், காந்தாரம்,
மத்திமம், பஞ்சமம், தைவதம், நிடாதம் என்பனவாம் எனவும், இவற்றுள்ளே
தமிழ்ப் பண்கள் பிறக்கும் எனவும் கூறுப.1 வீணையில் நரம்பு
தெறித்தலினாலுளதாதல்


     1இக் குறிப்புக்களும், மேல்வருவனவும் பெரும்பாலும் அடியார்க்கு
நல்லார் உரை (சிலப். அரங். ஆய்ச்.) யினைத் தழுவி எழுதப்பட்டன.
விரிவுகள் ஆண்டும் , இன்னும் விரிந்த இசை நூல்களுள்ளும் கண்டுகொள்க.
இவ்வாராய்ச்சியில் வல்லுநராகிய இமயமால்வரை ஸ்ரீ மத் விபுலானந்தஅடிகள்
அவ்வுரைக் குறிப்புக்களிற் சில பகுதிகள் விசாரிப்பிற் றிருத்தி யமைத்துக்
காணப்பட வேண்டுமென் றறிவித்ததனோடு, தமது ஆராய்ச்சியிற்பட்ட
குறிப்புக்களை எழுதியனுப்புவதாகவும் அன்புடன் வாக்களித்
தருளியுள்ளார்கள், அவை கிடைப்பின், பின்னர்ச் சேர்க்கையாகப்
பதிப்பிக்கப்படும்.