பக்கம் எண் :


1220 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

குரலும், குரலில் இளியும், இளியுளு துத்தமும், துத்தத்தில் விளரியும்,
விளரியுள் கைக்கிளையும், கைக்கிளையுள் தாரமும் என ஒன்றினின்னொன்று
பிறக்கும் என்னும் படிமுறையும் கொள்ளப்படும்.

     ஆரோசை - அமரோசை - எச்சு - தக்கு என்னும் ஓசை வேறுபாடு.
ஏற்றுதல் - இறக்குதல், ஆரோகணம் அவரோகணம் என்றும் கூறுவர்.

     வக்கானை - படிமுறையால் - அமைத்தார் - என்பனவும் பாடங்கள்.
24

     950. (வி-ரை.) மாறு முதற்பண் - ஐந்திணையினுள் முதலில் வருவது
குறிஞ்சியாதலின் முதற்பண் என்பது குறிஞ்சிப்பண்ணைக் குறித்தது; மாறும்
என்றது அப்பண்ணிற்குரிய சுரங்கள் மாறிவருவது குறித்தது. பண்ணினபின்
என்று பாடங்கொண்டு முதலில் விஷமமாகப் பாடின பின்பு என்றுரை
கூறுவாரு முண்டு. இப்பொருளில் மாறு - விஷமம். இது பாடுதலின் ஒரு
பேதம் என்பர் இராமநாதச்செட்டியார்.

     வளர்முல்லைப்பண் ஆக்கி - முல்லைக்குரிய பண்ணைச் செய்து.
இத்திணைக்கும் நிலத்துக்குமுரிமை பற்றியும் சிறப்புப்பற்றியும் வளர் என்ற
அடைமொழியும் தந்து சிறப்பித்தார்.

     ஏறியதாரமும் உழையும் கிழமை கொள - "தாரத்து உழை தோன்றப்
பாலையாழ்" என்றபடி பாலையாழ் ஆக்கி என்பதாம். தாரம் - உச்சவிசை.
அது மூக்காலுண்டாவது; உழை - தலையை இடமாக உடைய இசை;
கொடிப்பாலை - நெஞ்சை இடமாக உடைய இசை. இளிஎன்னும் பண்ணே
குரலாக எழும்புவது. பட்டடை - அழுத்தம். இவை இராமநாதச் செட்டியார்
உரைக்குறிப்பு. "பட்டடை - நரம்புகளின் இளிக்குப் பெயர்; என்னை?
எல்லாப் பண்ணிற்கும் அடிமணையாதலின்" - அடியார்க்கு நல்லார்.

     கிழமை - இசைக்கலை மரபுப்பெயர்களுள் ஒன்று. 221-ல்
மிடற்றுப்பாடலுக்கேற்ப எடுத்து உரைத்தவை பார்க்க. கிழமைகொள -
பொருந்த என்றுரை கொள்வாருமுண்டு.

     இசை - இராகம். இடும்தானம் - கொடிப்பாலையினின் - நிறுத்தி
என்று கூட்டுக.

     கொடிப்பாலையினில் நிறுத்தி - கொடிப்பாலை என்பது பாலையாழ்
வகை பலவற்றுள் ஒன்று. அவை குரல் குரலாயது செம்பாலை; துத்தங்
குரலாயது படுமலைப்பாலை; கைக்கிளை குரலாயது செவ்வழிப்பாலை; உழை
குரலாயது அரும்பாலை; இவற்றின் அமைத்துப் பின்னர் இளி குரலாய
கொடிப்பாலையினில் இடுந்தானம் நிறுத்தி என்க. 25

     951. (வி-ரை.) இசைப்புகல் நான்கு - பண், பண்ணியல், திறம்,
திறத்திறம் என்பன. இவற்றைத் திதிப்புகல், பிரக்கிரமப்புகல், சஞ்சாரப்புகல்,
மூர்ச்சனைப்புகல் என்பர் இராமநாதச் செட்டியார் வர்த்தனை நான்கு
என்றலுமாம்.

     அமைந்த புகல்வகை - தாம் பாடும் கொடிப்பாலைக்கு அமைந்த
கூறுபாடாகிய திறம். "நீடும் புகல் வகையால்" (221) என இவ்விசைக்
கூறுபாட்டை முன்னர் மிடற்றுப்பாடலுக் கேற்பக் கூறியதும் காண்க.

     விரல் நிரையில் - பொத்துவனவும் விடுப்பனவுமாகிய விரல் வரிசைத்
தொழில். நிரை - இங்கு வரிசையின் றொழில் குறித்தது.

     சேய ஒளி - விரல்களின் சிவந்த ஒளி குழலினிடத்துச் சஞ்சரிக்கும்படி
என்பாரும் உண்டு.

     திருவாளன் - சிவபெருமான். முத்தித் திருவை ஆள்பவர் -
வழங்குபவர். அவரது திருவினைப் பெற்று உலகுக் குபகரிக்கும்
அடியார்களும் இவ்வாறே திருவாளர்கள் என வழங்கப்படுவர், "தேசமுய்யத்
திருத்தொண்டத் தொகைமுன் பணித்த திருவாளன்" (சண்டீசர் புரா - 60)
என்றது காண்க.