உலகங்களிலிருந்து
மேலே நிலவுலகத்துக்கு வரும் வழிகளைப்
பிலத்துவாரங்கள் என்பது வழக்கு. காஞ்சிபுரத்தில் பதுமமாநாகம் உறையும்
பிலத்தினிடைக் காமாட்சியம்மையார் எழுந்தருளியிருந்து சிவபெருமானைப்
பூசித்துத் தவஞ்செய்த சரிதம் "அடிய னேனுறை பிலமத னிடையே, மன்னு
கோயில் கொண் டருளுவாய்" (55) என்ற திருக்குறிப்புத்தொண்டநாயனார்
புராணத்துட் காண்க.
மணி
வரைவாழ் அரமகளிர் - மணி - மணிகளையுடைய
என்றலுமாம். அரமகளிர் - ஓர் தெய்வச்சாதி
மகளிர். மலைகளில் வாழ்பவர்.
688 பார்க்க.
மயங்கினர் - மயங்கினராகி. முற்றெச்சம்.
மலைகளை யிடமாகக்
கொண்டு வாழ்பவர் அங்கு நின்றும் கீழிறங்கி முல்லை உடுத்த இம்மருங்கில்
வருதற்குக் காரணம் கூறியவாறு. மலிதல் -
கூட்டமாக நிறைதல்.
தணிவில்
ஒளி........அமரர் - விஞ்சையர் - வித்தியாதரர். விஞ்சை
- வித்தை. சாரணர் - இயக்கர். பதினெண்வகைத்
தேவகணத்தவர்களுள்
ஒரு சாரார். கின்னரர் - இசைவல்ல தேவகணங்களுள்
ஒருவகையினர்.
அமரர் - தேவகணத்தொரு வகை. இந்த நான்கு
வகையினரும்
தேவகணங்கள். (திவ் - ஒளி. தேவர்
- ஒளியுடைய உடம்புடையவர்கள்).
உடம்பின் இயல்பாகிய ஒளியாதலின் தணிவில் ஒளி என்றார்.
தணிவில்
ஒளிஎன்பதனை இந்நான்கு வகுப்பினருடனும் சேர்த்துக. தேவகணங்களில்
இசைவல்லோரும் ஆனாயர் குழலிசையின் மயங்கித் தம்மை மறந்து
விமானங்களில் வந்து இறங்கினர் என்பது. இசையோர்க்கும் சிறப்புப் பற்றி
நாகரை முன்கூறினர்.
பணி
புவனம் - பாதலம்; மணிவரை -
நிலவுலகம்; அணி விசும்பு -
விண்ணுலகம்; இதனால் கீழ் - நடு - மேல் என்ற மூவுலகத்துள்ள
தேவச்சாதியாரும் இவரது இசையின் மயங்கி யணைந்தமை கூறப்பட்டது.
284-ல் உரைத்தவை பார்க்க. "பாரார் விசும்புள்ளார் பாதாளத்தார் புறத்தார்"
(திருவம்மானை - 2) என்ற திருவாசகமும் காண்க. 32
958.
|
சுரமகளிர்
கற்பகப்பூஞ் சோலைகளின் மருங்கிருந்து
கரமலரி னமுதூட்டுங் கனிவாய்மென் கிள்ளையுடன்
விரவுநறுங் குழலலைய விமானங்கள் விரைந்தேறிப்
பரவியவே ழிசையமுதஞ் செவிமடுத்துப் பருகினார். |
33 |
(இ-ள்.)
வெளிப்படை. தேவமகளிர்கள் கற்பகப் பூஞ்சோலைகளின்
பக்கத்திலிருந்து மலர்போன்ற தமது கைகளால் அமுதூட்டும் கனி
பொருந்திய வாயினையுடைய மெல்லிய கிளிகளுடனே தமது கூந்தல்
அலையும்படி தத்தம் விமானங்களில் விரைவாக ஏறிவந்து பரவிய ஏழிசை
யமுதத்தினைப் பருகினார்கள்.
(வி-ரை.)
சுரமகளிர் - விண்ணுலகத்திலுள்ள தேவ மாதர்கள்.
கற்பகப்பூ.........கிள்ளையுடன்
- நறிய கற்பகப் பூஞ்சோலைகளில்
அமர்ந்து தமது கைமலர்களால் ஊட்டி வளர்க்கின்ற கனிகளை உண்ணும்
வாயினையுடைய கிளிகளுடனே. "சிறையாரு மடக்கிளியே யிங்கேவா
தேனொடுபால், முறையாலே யுணத்தருவன்" என்ற ஆளுடைய பிள்ளையார்
தேவாரம் காண்க. தேனும் பாலும் கனிகளும் முதலியவற்றைத் தாமே தம்
கையில் வைத்து ஊட்டிக், கிளி பூவை முதலியவற்றை வளர்த்தல் மகளிர்
இயல்புகளுள் ஒன்று என்பது பழைய வழக்காலும் நூல்களாலும் அறியப்படும்
உண்மை. "பூவைதந் தாள்பொன்னம் பந்துதந்தா ளென்னைப் புல்லிக்கொண்டு,
பாவைதந் தாள்பைங் கிளியளித்தாளின்றென் பைந்தொடியே" (குறிப்புரைத்தல்
- 200), "என்னனை போயினள் யாண்டைய ளென்னைப் பருந்தடுமென்,
றென்னனை போக்கன்றிக் கிள்ளையென் னுள்ளத்தை யீர்கின்றதே"
(கிளிமொழிக்கிரங்கல் - 231) என்ற திருக்கோவையாரானும்,
|