பக்கம் எண் :


1236 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

பூதியி னீடும் பல்கண நாதர் புகழ்வீரர்" (ஏயர்கோன் - புரா - 368) என
மற்றையிடங்களிற் கூறுமாறும் காண்க.

     அசைய எழும் குழல் நாதம் - இசை ஒலியலைகளாகப் புடை
பெயர்ந்து பரம்பரையிற் பரவி மேற்செல்லும் இயல்புடைய குழல்நாதம்
என்பார் அசைய எழும் என்றார். மேல் 952-ல் உரைத்தவை பார்க்க.

     நாதத்தாற் பரவும் என்னாது, நாதத்து அஞ்செழுத்தாற் பரவும்
என்றது, குழலின் இசைநாதத்துக்கன்றி, அவ்விசையின் உள்ளுறையாகக்
கொண்ட ஐந்தெழுத்தாற் பரவியதனாலே சிவபெருமான் வெளிப்பட்டு
வந்தனர் என்றறிவித்தற்கு. அதுகாரணமாகவே இசை விரும்பும் கூத்தனார்
என்றும் கூறினார்.

     எதிர் நின்றார் - "சிவனெனு மோசை யல்ல தறையோ வுலகிற்
றிருநின்ற செம்மை யுளதே", "பவனெனு நாமம் பிடித்துத் திரிந்து பன்னா
ளழைத்தால், இவனெனைப் பன்னா ளழைப்பொழி யானென் றெதிர்ப்படுமே"
என்று அப்பர் சுவாமிகளருளியபடி நாதத் திசையினால் ஐந்தெழுத்தாகிய
சிவநாமத்தினைப் பிடித்துப் பன்னாளழைத்துப் பரவிய ஆனாயர் முன்பு,
சிவபெருமான் எதிர்ப்பட்டு நின்றனர். அவரது நாமமே திருவைந்
தெழுத்தாம் என்பது "ஆலைப் படுகரும்பின் சாறு போல வண்ணிக்கு
மைந்தெழுத்தி னாமத் தான்காண்", "நின்னாமத் திருவெழுத் தஞ்சும்
தோன்ற", "படைக்கல மாகவுன் னாமத் தெழுத்தஞ்சென்னாவிற்கொண்டேன்"
என்பனவாதி திருவாக்குக்களால் அறியப்படும்.

     கூத்தனார் - அருட்கூத் துடையார் - நடராசர். அருள்புரிய
வருகின்றாராதலின் இப்பெயராற் கூறினார். முன்னர்ப் "பொற் பொதுவினடம்
புரியும் ஐயன்" (962) என்றும், பின்னர்ப் "பொற்பொதுவி னிடைப்புக்கார்"
(966) என்றும் கூறிய கருத்துமிது. 401, 437, 488, 648, 897, 923 முதலிய
வற்றானும் இக்கருத்துப் பெறப்படுதல் காண்க. 39

965.



முன்னின்ற மழவிடைமேன் முதல்வனா ரெப்பொழுதுஞ்
செந்நின்ற மனப்பெரியோர் திருக்குழல்வா சனைகேட்க
"இந்நின்ற நிலையேநம் பாலணைவா" யெனவவரும்
அந்நின்ற நிலைபெயர்ப்பா ரையர்திரு மருங்கணைந்தார்.



40

      (இ-ள்.) வெளிப்படை. (அவ்வாறு எதிர்ப்பட்டு) முன்னே நின்ற
இளமையாகிய விடையின்மேல்வந்த முதல்வனார், செம்மைபொருந்திய
மனத்தினையுடைய பெரியோராகிய ஆனாயரது திருக்குழல் வாசனையை
எப்பொழுதும் கேட்டுக்கொண்டிருப்பதற்காக, "இங்குநின்ற இந்நிலைமை
யாகவே நம்மிடத்து நீ அணைவாயாக!" என்றருளிச் செய்ய, ஆனாயரும்
அவ்வாறே அங்குநின்ற அந்நிலையினைப் பெயர்ந்து ஐயரது திருமருங்கில்
அணைந்தனர்.

     (வி-ரை.) : எப்பொழுதும் - வாசனைகேட்க - முதல்வனார் -
"அணைவாய்" என, அவரும் - பெயர்ப்பார் - மருங்கு - அணைந்தார்
என்று கூட்டி உரைத்துக் கொள்க.

     செந்நின்ற மனப்பெரியோர் - செம்மையில் நின்ற மனம். செம்மை -
சிவத்தின் நிறைவாம் தன்மை. "வள்ளலார் தமைத்திசை நோக்கிச், சென்னி
மேற்கரங் குவித்துவீழ்ந் தெழுந்துசெந் நின்று" (திருஞா - புரா - 1052)
என்றும், "கருமென் சுருட்குஞ்சி யுடனலையச் செந்நின்று" (மேன்றபடி 50)
என்றும், "அடிக்கீழ்ச் சேர்ந்து வீழ்ந்து செந்நின்று" (ஏயர்கோன் - புரா -
240) என்றும் உரைத்தவை மேனியின் செம்மைநிலை குறித்தன. இங்கு அது
மனத்தின் செம்மைநிலை குறித்த தென்பார் செந்நின்றமனம் என்றார்.
மனச்செம்மையின் பெருமை கருதியே இவரது குழல் வாசனை கேட்க
இறைவர் விரும்பினார் எனக் காரணங் குறிப்பார் உடம்பொடு புணர்த்தி
யோதினார்.