பக்கம் எண் :


முருகநாயனார்புராணம்1321

 

     அண்டர்.....அரும்புமால் - திருப்பாட்டின்அமுதம் - தேவாரத்
திருப்பதிகங்களின் பண்ணிசையாகிய அமுதம். பெருக - பலமுறையும்
பாடக்கேட்டு உள்ளே அன்பு பெருகும்படியாக. பெருகுதலினாலே
என்றலுமாம்.

     வதன பங்கயம் - வதனம் - முகம் வதனமாகிய தாமரை. உருவகம்.

     துளித்த கண்ணீர்- அன்பின் பெருக்கினால் துளிதுளிகளாகக்
கண்களினின்றும் நீர் அரும்புவன. "தடமூன் றுடையான் றனையுன்னிக்,
கண்முத் தரும்பக் கழற்சே வடிகை தொழுவார்கள், உண்முத் தரும்ப வுவகை
தருவான்" (காந்தாரம் - திருவெண்காடு - 3), "காத லாகிக் கசிந்துகண்
ணீர்மல்கி, ஓதுவார்" (கௌசிகம் - பொது - 1) முதலிய ஆளுடைய
பிள்ளையார் திருவாக்குக்கள் காண்க.

     திருப்பாட்டின் அமுதம் பெருகச் செவிமடுக்கும் - மடுத்தல் -
உண்ணுதல். செவி வாயாக உண்ணுதலாவது நுகர்தல் - (அனுபவித்தல்)
-குறிக்கும். மேற்பாட்டில் பூவைகள் பாடுவனவாகக் கூறிய தேவாரப் பதிக
இசையமுதத்தினைத் தொண்டர் கேட்டநிலை குறித்தது. இவ்வாறு இறைவனது
திருப்புகழ்களைப் பாடக்கேட்டபோது அதன் வசப்பட்டு மனமுருகிக்
கண்ணீர் பெருக நிற்பது அன்பின் இலக்கணங்களுள் ஒன்று. "வெள்ளந்தாழ்
விரிசடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே யெனக்கேட்டு வேட்ட
நெஞ்சாய்ப், பள்ளந்தாமுறு புனலிற் கீழ்மே லாகப் பதைத்துருகுமவர்" (சதகம்
- 21) என்ற திருவாசகமும் பிறவும் காண்க.

     இச் சரிதமுடைய முருக நாயனார் செய்த திருப்பணியின் நியமமாகிய
சரிதக் குறிப்புக்களை நகரத்தின் இயற்கையமைப்பில் கண்டு, இம்மூன்று
பாட்டுக்களிலும் தொடர்பாய்க் காட்டுகின்ற ஆசிரியரது திறம் காண்க.

     1018-ல் யாம இருளும் வெளியாகு மிரவில் மலர்மேல் வண்டு
களங்கமின்றி விளங்கும் என்றது புலர்வதன்முன் எழுந்து குளித்து நீறு
அணிந்து பூப்பறிக்கச் செல்லும் முருகருக்குப் புலரி இருளில் பூக்கள்
விளங்கித் தோன்றும் காரணத்தையும் காட்சியினையும் குறிப்பால்
உணர்த்திற்று.

     1019-ல் அவ்வாறு விளங்கும் சோலையில் மலர்கள் வண்டு
மருங்கலைய வாயவிழ்ந்து தேன்பொழிய நிற்பதும், பூவைகள் பதிகத்தேன்
பொழிய உள்ளதும் முருகனார் சோலையினுள் புக்குக் கோட்டுப்பூ, கொடிப்பூ,
நிலப்பூ என்ற மூன்றினையும் அலரும் பருவத்தில் எடுக்கும் காலத்து
நிகழ்ச்சிகளைக் குறிப்பாலுணர்த்தின.

     1020-ல் வண்டுபாடத் தாமரைகள் அலர்ந்து தேன் அரும்புதலும்
திருப்பாட்டி னமுதம் செவிமடுக்கும் தொண்டர் முகமலர்ந்து கண்ணீர்
அரும்புதலும் முருகனார் நீர்ப்பூக்களைக் கொய்யும்காலத்து அவரது
உள்ளத்தே அன்பு ததும்பவும், பதிகஇசை கேட்டபோது கண்ணீர் ததும்பவும்
கூடிய நிகழ்ச்சிகளைக் குறிப்பா லறிவிப்பன. இவ்வாறு தொடர்ந்து
கண்டுகொள்க.

     பூவை பதிகம் பாடக் கேட்டதொண்டர் என்றதனால் தொண்டர் பூப்
பறிக்கும்போது பாடுதல் முதலாகிய வாக்கின் றிருத்தொண்டு செய்யலாகாத
நிலையும் குறிக்கப்பட்டது.

     இவ்வாறு இயற்கைத் தோற்றத்தை அவ்வச் சரிதமயமாகநின்று
அந்தந்த உள்ளுறைக் கண்கொண்டு காணும் சிவகாட்சியாகிய உண்மைப்
பொருளமைதியும், அதனைத் தொடர்ந்துகொண்ட உள்ளுறை உணர்த்தும்
தன்மைநவிற்சியணிச் சிறப்புப்பெறக்கூறும் சொல்லமைதியும் ஆசிரியர்க்
குரிய தெய்வமணக்கும் கவித்திறமாம். 4