பக்கம் எண் :


உருத்திரபசுபதிநாயனார்புராணம்1347

 

வேண்டுமென்பதும் முதலிய குறிக்கோள். இதனையே முன் அடிமைத்
திறம்புரி
(1033) என்றார்.

     பயிலுதல் இடைவிடாது பலகாலமும் சொல்லுதல். பசுபதியார் செயல்
போலவும், வேதத்துள் உருத்திரமும் அதனுட் சிவமும் போலவும் இந்த
இரண்டு பாட்டுக்களும் ஒரு தொடர்புபெற்று இப்புராணத்து நடுவினுள்
அமைந்து விளங்கும் தெய்வச் சிறப்பும் குறிக்கொள்க. 6

1037.



அரும றைப்பய னாகிய வுருத்திர மதனை
வருமு றைப்பெரும் பகலுமெல் லியும்வழு வாமே
திரும லர்ப்பொகுட் டிருந்தவ னனையவர் சிலநாள்
ஒருமை யுய்த்திட வுமையிட மகிழ்ந்தவர் உவந்தார். 7

     (இ-ள்.) வெளிப்படை. அரிய மறைகளின் பயனாகிய உருத்திரத்தை
வருமுறையில் பெரும்பகலிலும் மாலையிலும் தவிராமல் தாமரையினது
பொகுட்டில் இருக்கும் பிரமதேவனைப்போன்ற பசுபதியார் சிலநாள்
ஒன்றுபட்ட வுணர்வுடன் இவ்வாறு கணித்தபோது, உமையம்மையாரை
இடப்பாகத்தில் மகிழ்ந்து வைத்த சிவபெருமான் உவந்தனர்.

     (வி-ரை.) அருமறைப்பயன் ஆகிய உருத்திரம் - "அருமறை
உருத்திரம்" (1034) என்றவிடத் துரைத்தவை காண்க. உருத்திரனே பரமன்
என்று காட்டும் சிவமந்திரத்தைத் தன் னடுவுட்கொண்டு விளங்குதலால்
மறைப்பயனாகிய உருத்திரம் என்றார். இக் கருத்துப்பற்றியே "வேதப்
பயனாஞ் சைவமும்போல்" (சண்டீசர் புரா - 9) என்பதும் காண்க. அருமறை
என்றது ஞானத்துக்கு முதலாயிருக்கும் தன்மைபற்றி. ஞானத்தின்
முடிந்தநிலை திருவுருத்திரத்திற் பெறப்படுவதனால் அதனை மறைப்பயன்
என்றார். மறைகள், மந்திரம் - பிராமணம் - உபநிடதம் என்று மூன்று
பாகுபாடுபெறும். சாமானிய காமியாதிகளைப் பயக்கும் யாக முதலியவற்றுக்கு
உதவுவன மந்திரம் என்ற பாகம் எனவும், இந்தயாகாதிகளுக்குரிய
சடங்குகளை வகுப்பன பிராமணம் எனவும், இறைவனது இலக்கணங்களை
எடுத்துச்சொல்வன உபநிடதங்கள் எனவும் கூறுவர். உருத்திரமானது
மந்திரமாகியும், வேள்வித்தீயைத் தன்னுளடக்கிக் கொண்டதாயும் உள்ளதோடு,
சிவனே "தனிமுதலாம் பரன்" என்று சிவனது முழுமுதற்றன்மையும்
கூறுவதனால் அது வேதங்களின் மூன்று தன்மைகளையும். தன்னுட்கொண்டு
விளங்குதல்பற்றி அதனை அருமறைப்பயன் என்றார் என்பதுமாம்.
அன்றியும், ஆன்மாக்கள் பக்குவபேதத்திற்கேற்பப் பலபல தெய்வங்களை
வழிபடுவர்; அவ்வாறு வழிபடப்படும் இந்திரன், அக்கினி, யமன், பிரமன்
முதலிய பிற எல்லாத் தேவர்களையும் எடுத்து ஓதி, முகமனால் அவர்களுக்கு
வழிபாடு வேதத்தினுட் கூறப்படும்; ஆயினும், இம்மந்திரத்தினை இதயத்தில்
வைத்துப் போற்று முகத்தால் முழுமுதல்வன் சிவனேயாம் என்ற
உண்மையைத் தேற்றம்பெற வேதம் எடுத்துக் காட்டுவதனாலே இது
மறைப்பயனாயிற்று என்றலும் பொருந்தும்.

     அருமறைப்பயனாகிய உருத்திரம் - 1. ஸ்ரீருத்ரம் அல்லது
திருவுருத்திரம் எனத் தமிழில் வழங்கப்படும். ஸ்ரீருத்ர ப்ரச்னம்,
ஸ்ரீருத்ரசூக்தம், ஸ்ரீருத்ராநுவாகம் என்பன முதலிய பெயர்களால் ஆரிய
மொழியில் இது வழங்கப்படும், ஸ்ரீ அல்லது திரு என்பதற்குப் பார்வதிதேவி,
சம்பத்து, காந்தி என்பன பொருளாம். இம் மூன்றனோடும் என்றும்
கூடியிருத்தலின் சிவபெருமானுக்கு ஸ்ரீருத்ரன் எனப் பெயர் போந்தது.