பக்கம் எண் :


திருநாளைப்போவார்நாயனார்புராணம்1387

 

     நையும் மனம் - திரு அருளின் வெளிப்பாடு கண்டு, "மிகச் சிறிய
எளியேன், மிகப்பெரிய பேறு பெற்றேன்" என்றெழுகின்ற உணர்ச்சியினால்
"இத்தனையு மெம்பரமோ வைய! ஐயோ! எம்பெருமான் றிருக்கருணை
யிருந்த வாறே" என்று எண்ணி உருகி நைந்த மனம். நைதல் -
உருத்தெரியாதபடி இளகுதல்.

     நான் உய்ந்தேன் - இழிபிறவி போய் நல்லுடம்பு பெற்றுத் தில்லை
மறையோர் சூழத் திருமன்று கும்பிடும் பேறு வாய்க்கும் உறுதிகொண்டு
உய்ந்தேன் என இறந்த காலத்தாற் கூறினார். இறைவன் திருவருளைக்
கனவிற் கண்டபடி அதனை நிறைவேற்ற நனவில் மறையவர் வந்தது கண்டு
உய்ந்தேன் என்றார் என்றலுமாம்.

     தீ அமைத்தபடி மொழிந்தார் - நந்தனாரின் திருவுள்ளத்தின்
இசைவுபெற்ற அந்தணர் சென்று அவ்வாறே அமைத்த செய்தியை
அறிவித்தனர். இறைவனது அருட்டிரு உள்ளத்தையும், அந்த
அருளைப்பெறப் பக்குவப்பட்ட உயிரினையும் கண்டபோது உரிய செயல்
செய்து அவ்வுயிரினைத் திருவடியிற் கூட்டுவிக்கும் ஆசாரியன் போன்று
இங்குத் தில்லை வேதியர்கள் நின்றனர் என்ற உண்மையும் உணர்தற்பாலது.
நடராசர் இவர்களுள் ஒருவரே யாவர் என்றதும் கருதுக. 30

1071.





மறையவர்கண் மொழிந்ததற்பின் றென்றிசையின்
                               மதிற்புறத்துப்
பிறையுரிஞ்சு திருவாயின் முன்னாகப் பிஞ்ஞகர்த
நிறையருளான் மறையவர்க ணெருப்பமைத்த குழியெய்தி
யிறையவர்தாண் மனங்கொண்டே யெரிசூழ
                               வலங்கொண்டார்.  31
 
1072.




கைதொழுது நடமாடுங் கழலுன்னி யழல்புக்கார்;
எய்தியவப் பொழுதின்க ணெரியின்க ணிம்மாயப்
பொய்தகையு முருவொழித்துப் புண்ணியமா முனிவடிவாய்
மெய்திகழ்வெண் ணூல்விளங்க வேணிமுடி
                               கொண்டெழுந்தார். 32

     1071. (இ-ள்.) வெளிப்படை. மறையவர்கள் அவ்வாறு அறிவித்தபின்,
தென்றிசை மதிற்புறத்தில் உள்ள வான மதிதடவ வுயர்ந்த திருவாயிலின் முன்,
சிவபெருமானுடைய நிறைந்த பேரருளினால், மறையவர்கள் நெருப்பினை
அமைத்த தீக்குழியினை அடைந்து, இறைவரது திருவடிகளை மனத்துட்
கொண்டே எரியினைச் சுற்றி வலமாக வந்தவராகி, 31

     1072. (இ-ள்.) வெளிப்படை. கைகளைக் கூப்பித்தொழுது.
ஐந்தொழிற்றிருக்கூத்தியற்றியருளும் திருப்பாதத்தை நினைந்து தீயினுட்
புகுந்தார்; சேர்ந்த அப்பொழுது தீயினிடத்து இந்த மாயா காரியமாகிய
பொய் பொருந்திய உருவினை ஒழித்துப் புண்ணிய உருவமுடைய முனிவர்
வடிவம்கொண்டு, மார்பில் வெண்புரிநூல் விளங்கச் சடைமுடியும் கொண்டு
மேலெழுந்தனர். 32

     இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன.

     1071. (வி-ரை.) தென்றிசையின்......எய்தி- மறையவர்கள் தீயினை
எவ்விடத்து அமைத்தார்கள் என்பது முன் சொல்லாது இங்குக் கூறினார்.
தில்லையந்தணர் தீயமைத்தபோது இதனைக் கூறியிருப்பின் அவ்விடத்து
அவ்வந்தணர்மட்டும் காணப்படுவர். நந்தனாரும் அந்தணரும் தொண்டர்களும்
இறைவன்றிருவருள் வெளிப்பாடும் உடன் காணப்படும் இப்போது
அவ்விடத்தினைக் காட்டுதல் சிறப்பும் தகுதியுமாமாதலின் முன்னர்க்கூறாது
வைத்துப் பின் கூறினாரென்க. இஃது ஆசிரியர்க்கே உரிய தெய்வக் கவிச்
சிறப்பமைதிகளுள் ஒன்று.