பக்கம் எண் :


சண்டேசுரநாயனார்புராணம்1559

 

     மறைகள் உட்பட முன் தலைவர் மொழிந்த ஆகமங்கள் -
உட்பட
என்றதனால் ஆகமங்கள் சிறப்பு நூலாகவும், வேதம் பொது
நூலாகவும் உள்ளன என்பதும், வேதங்கள் உலகர்க்கும் ஆகமங்கள்
சத்திநிபாதர்க்கும் உரைக்கப்பட்டன என்பதும் தெரிக்கப்பட்டன; ஆகமங்கள்
பயில்வோர் வேதங்களையும் அவற்றின் அங்கங்களையும் முன்னர்ப்
பயில வேண்டுமென்பதும் குறிப்பால் உணர்த்தப்பட்டது. மறைகள்
ஆகமங்களினுட்பட்டன என்பதும், மறைப்பொருளை உள்ளடக்கி அதன்மேல்
உள்ள முடிந்த பொருள்களை ஆகமங்கள் வெளிப்படுப்பன என்ற குறிப்பும்
உட்பட என்றதனாற் பெற வைத்தனர். "வேதமோ டாகம மெய்யா
மிறைவனூல், ஓதும் பொதுவுஞ் சிறப்புமென் றுன்னுக" என்பது திருமந்திரம்.
தலைவர் மொழிந்த என்றதனை இடைநிலைத் தீபகமாகக்கொண்டு
மறைகளுக்கும் ஆகமங்களுக்கும் கூட்டுக.

     முந்தை அறிவின் தொடர்ச்சியினால் - முன்பிறப்பின் அறிவு
இப்பிறப்பில் ஆன்மாவினுடன் தொடர்ந்து வருகின்ற முறைமையினால்.
"ஒருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவற், கெழுமையு மேமாப் புடைத்து"
(குறள்). உடல் அழிந்த போதிலும் அறிவுப் பொருளாகிய உயிர்க்கு
அழிவில்லை; உயிருடன் அறிவு பல பிறவிகளிலும் தொடர்ந்தே வரும்
என்பது உண்மை. அதுவே மக்களுள் அறியின் ஏற்றத் தாழ்வுகளுக்குக்
காரணமாகும். ஆகமங்கள் முந்தையறிவின் றொடர்ச்சியினால் மலர்தல்
என்றது முன் வாசனையினால் ஆகம அறிவு வளர்ந்து வெளிப்பட்டு
விளங்குதல் குறித்ததது. "வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு
வைகல் மறவாது வாழ்த்தி யேத்திக் காதன்மையாற் றொழுமடியார்"
(கன்றாப்பூர் - 1) என்ற திருத்தாண்டகமும் காண்க.

     முகைத்த மலரின் வாசம்போல் - மலரில் வரும் மணம் முன்பு
தோன்றாவிடினும் அரும்பினுள்ளே சூக்குமமாயுள்ளதென்க. அரும்பில்
வெளித் தோன்றாத மணம் மலரிலே தோன்றுதற்கு, முன் அங்கு அது
இருந்ததுவே காரணமாகும். "இல்லது வாராது" என்பது உண்மையன்றோ?
அரும்பினில் மறைந்து நின்ற மணமும் நிறமும் மென்மையும், அரும்பு முற்றி
மலர மலர நிறைவுற்று வெளிப்படத் தொடங்குவதுபோல அறிவின் முன்னைத்
தொடர்ச்சியும் வந்தது என்றபடி.

     சிந்தைமலர உடன்மலரும் செவ்வி உணர்வு - சிந்தை - உட்கரண
நான்கனுள் ஒன்று. சிந்தைமலா உடன்மலர்தல் - சிந்தை விரிய அதனைச்
சார்ந்து நின்ற அறிவும் நுண்ணிதாய் ஒடுங்கியிருந்த முன்னைநிலையினின்றும்
விரிவடைதல். "சிந்தை மலர்ந் தெழுமுணர்விற் செழுங்கலையின்
றிறங்களெல்லா, முந்தைமுறை மையிற் பயின்று" (திருநா - புரா-21) என்றது
காண்க. செவ்வி - பக்குவம் - ஏற்ற காலம். மலரும் செவ்வி" - (முருகர் -
புரா- 7). பக்குவமாவது "கொளுத்துவதன்" முன் கொண்டமைந்து,
அலகில்கலையின் பொருட்கெல்லை யாடுங் கழலே எனத் தெளி"யும்
தகுதியுடைமை. இவ்வுணர்வு சிவஞானம் என்ப. மறைகள் உட்பட
ஆகமங்களின் உணர்வுநிறைந்த அறிவு மலர்தலால் சிவத்துவ விளக்கத்துக்குச்
சாதனமாகிய சிவஞானம் வெளிப்படலாயிற்று என்பது கருத்து. "பூவினிற்
கந்தம் பொருந்திய வாறுபோற், சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது" என்ற
திருமந்திரக் கருத்து இப்பாட்டில் விளக்க முறுதல் காண்க. சிறந்தது -
வெளிப்பட்டு விளங்கிற்று. ஆல் - அசை.

     முகைக்கு மலரின் - என்பதும் பாடம். 13

1219.
நிகழு முறைமை யாண்டேழு நிரம்பும் பருவம் வந்தெய்தப்
புகழும் பெருமை யுபநயனப் பொருவில் சடங்கு முடித்தறிவி
னிகழு நெறிய வல்லாத வெல்லா மியைந்த வெனினுந்தந்
திகழு மரபி னோதுவிக்குஞ் செய்கை பயந்தார் செய்வித்தார்.14