பக்கம் எண் :


சண்டேசுரநாயனார்புராணம்1561

 

     பயந்தார் - இவரது அறிவு விளக்க நிலைக்கு ஏற்ற வேதப்பயிற்சி
எவ்வாறு செய்யத்தகுவது எனவும், எவ்வாறாயினும் மரபுநிலை வழுவாது
செய்வித்தல் வேண்டும் எனவும் எழுந்த அச்சத்துடன் செய்வித்தார் என்ற
குறிப்பும் காண்க. "உலகிறந்த சிவஞான முணரப்பெற்றார், தொல்லைமுறை
விதிச்சடங்கு
மறையோர் செய்ய" (263) என்றும், "ஒருபிறப்பு மெய்தாமை
யுடையார் தம்மை யுலகியல்பி லுபநயந முறைமை யாகும். இருபிறப்பி
னிலைமையினைச் சடங்கு காட்டி யெய்துவிக்கு மறைமுனிவர்" (264) என்றும்
வரும் ஆளுடையபிள்ளையார் புராணங் காண்க.

     சடங்கு முடித்து ஓதுவிக்கும் செய்கை - செய்வித்தார் -
பயந்தார், சடங்கு தாமே முடித்தும், ஓதுவித்தல் பிறராற் செய்வித்தும்
இயற்றினர் என்பது குறிப்பு. தந்தையே குருவாயிருந்து பிரமோபதேசம்
செய்யும் வழக்கும் காண்க. 14

1220.
குலவு மறையும் பலகலையுங்கொளுத்து வதன்முன்
                                 கொண்டமைந்து
நிலவு முணர்வின் றிறங்கண்டு நிறுவு மறையோ
                                    ரதிசயித்தார்;
"அலகில் கலையின் பொருட்கெல்லை யாடுங் கழலே"
                                 யெனக்கொண்ட
செலவு மிகுந்த சிந்தையினிற் றெளிந்தார் சிறிய
                                 பெருந்தகையார்.
 15

     (இ-ள்.) வெளிப்படை. அறிவு விளங்குதற்கு ஏதுவாகிய மறைகளையும்
அவைகளை உள்ளிட்ட பல கலைகளையும் ஆசிரியர்கள் கொளுத்துவதன்
முன்னே தமது உள்ளத்திற் கொண்டு அமைந்து நிலவுகின்ற அறிவின்
திறத்தினைக்கண்டு, போதிக்கின்ற ஆசிரியர்கள் அதிசயித்தனர். அளவில்லாத
கலைகளிற் குறிக்கப்படும் பொருளுக்கொல்லாம் எல்லையாயுள்ளபொருள்
அருட்பெருங் கூத்தியற்றும் திருவடியேயாம் என்று கொண்ட உறுதிமிக்க
தமது சிந்தையினால் அந்தச் சிறிய பெருந்தகையாளர் தெளிந்து கொண்டனர்.

     (வி-ரை.) குலவும் என்ற பெயரெச்சம் மறை என்னும் ஏதுப்பெயர்
கொண்டது. அறிவு எனக் குலவுதற்கு வினைமுதல் வருவித்துரைக்க.
"குலாத்தில்லையாண்டான்" (திருவாசகம்), "கூனுங் குருடுந் தீர்த்தேவல்
கொள்வார் குலவு மலர்ப்பாதம்" (கூற்றுவர் - புராணம் - 9), "குலாவு பாதம்
விளக்கியே" (443) முதலியவை பார்க்க.

     கொளுத்துதல் - கொள்ளச் செய்தல். சொல்லுதல் என்ப.
தீக்கொளுத்து என்ற பொருளில் பெரும்பாலும் வழங்கும் இச்சொல் தீயைக்
கொள்ளச் செய்தல் என்ற பொருளில் வருவதாம். இங்கும் அறிவாகிய
தீயைக்கொளுவி அறியாமையைப் போக்குதல் என்ற குறிப்பும் காணப்படும்.

     கொண்டு அமைந்து அறிவின் நிலவும் திறம் - "முந்தை யறிவின்
தொடர்ச்சி யினான் முகைத்த மலரின் வாசம்போல்" (1218) என்ற தன்மை.

     முன் - முன்னரே. ஏகாரம் தொக்கது. இவ்வாறு முற்பிறப்பிற் கற்ற
கல்வியறிவு, இப்பிறவியில் கலைபயில்வதன் முன்பே சில மக்களிடை
விளங்குதல் இந்நாளிலும் அரிதின் காணப்படுவதறிக.

     நிறுவும் மறையோர் - ஓதுவிக்கும் ஆசிரியராகிய பிராமணர்கள்.
நிறுவுதல் - கலைப்பயிற்சியை உணர்வினுள் நிற்கச்செய்தல்.

     அதிசயித்தார் - அதிசயமாவது காரணம் இன்னதென்றறியுமாறு
கண் கூடாகக் கண்ட பெருமித உணர்ச்சி, "அதிசயம் கண்டாமே"
(திருவாசகம்). இது போதித்த ஆசிரியர்களது மனநிலை.

     தெளிந்தார் - இது போதிக்கப்பெற்ற மாணவராகிய விசாரசருமரின்
மன நிலை. " ஓது கிடைசூழ் சிறுவர்களும் உதவும் பெருமை யாசானும்"
(1208)