பக்கம் எண் :


சண்டேசுரநாயனார்புராணம்1565

 

உடன் தோன்றுவதேயாகும் என்பார் அதனை உணர்வு என்பதனோடு
உடம்பொடு புணர்த்தி ஓதினார். வழி அன்பு - முன்னைப் பிறவியிலிருந்து
தொடர்ந்து பரம்பரையில் இடையறாது வரும் அன்பு. "முந்தை யறிவின்
றொடர்ச்சியினால்.......சிந்தை மலர உடன் மலரும் செவ்வி யுணர்வு" (1218)
என்றது காண்க. ஒழியாது - இடையறாது.

     அன்பின் கடனே இயல்பாய் முயற்றிவரும் காதல் - அன்பினாற்
கடமையாகச் செய்யும் செயலினால், செயற்கையானன்றி இயல்பினாலே
எழும் முயற்சியாக விளைவிக்கப்படும் காதல். முயற்றுதல் -
ஊக்கப்படுத்துதல்.

     கருத்தின் திடம் நேர்நிற்கும் - காதல் கருத்தில் மேன்மேல் எழப்,
பின்னர் மாறாது அதனில் ஒன்றித்து உறைத்து நிற்கும். நேர் நிற்கும்
செம்மலார்
- கருத்தின் திடத்திலே உறைப்புடன் நிற்கும் பெரியார் - மனம்
இறைவனிடமாகப் பதிந்து கொண்டவர். "மண்டுகாத லருச்சனையின் வைத்தார்
மற்றொன் றறிந்திலரால்" (1254), "வேறுணரார்" (1225) என்று பின்வருவன
இந்த மன நிலையினை வெளிப்படுத்துதல் காண்க. செம்மல் -
பெருமையுடையார். "பெருந்தோன்றலார்", "மேலாம் பெரியோர்" என்பன
இக்கருத்தையே தொடர்ந்து புலப்படுத்துவன.

     திகழுநாளில் - இவ்வாறு கருத்தின் திடம் நேர்நின்று விளங்கும்
நாள்களில்.

    ஆங்கு ஒரு நாள். ஆங்கு என்ற முதனீண்ட சுட்டும், ஒரு என்ற
அடையும் அந்நாளினது சிறப்பை யுணர்த்துவன. அந்நாளின் நிகழ்ச்சிகள்
மேல் 1229 - ம் பாட்டில் உரைக்கப்படுவன. அவற்றின் பயனாக
விசாரசருமனார் ஆனிரை மேய்த்து, மணலால் இலிங்கந் தாபித்துப், பாலால்
திருமஞ்சனமாட்டி, அதனாற் சிவனது திருமகனாராகி, உயிர்களுக்குச்
சிவபூசைப் பயனை கொடுத்தருளியிருக்கப் பெற்றனராதலின் இவ்வாறு
சிறப்பித்தனர் என்பதாம். ஒருநாள் என்ற தொடக்கம் நிரைகாக்க வந்தார்
(1229) என்றதனுடன் முடிவு பெறுகின்றது.

     செம்மலர் - ஒருநாள் (1221) - நிரையினுடன் புக்கபோது - ஆ -
ஓச்ச, - அவன் புடைப்ப, - வெகுண்டு - விலக்கி . உணர்ந்து (1222) -
அறிந்தா (ராய்) - அருள்செய்வார் (1223) - "ஆனினங்கள் - தகைமையன;
- பொருந்துவன - உடைய அல்லவோ? (1224); - ஐந்தும் அளிக்கும் (1225);
மூர்த்தம் (1226); விடைத்தேவர் குலமன்றோ? (1227);" என்று - பலவும்
நினைந்து - "இதன்மேலில்லை கடன்; - இதுவே வழுத்து நெறியாவதும்"
என்று, - ஆயன்றனை நோக்கி - "நிரைமேய்ப்பு ஒழிக நீ" என்பார் (1228) -
"இனியானே மேய்ப்பன்" என்றார்; இடைமகனும் அகன்றான்; இசைவினால் -
நிரை காக்க - மறைச்சிறுவர் - வந்தார் (1229) என்று மேல்வரும்
பாட்டுக்களுடன் கூட்டி இந்த ஒன்பது பாட்டுக்களையும் தொடர்ந்து
முடித்துக்கொள்க. 16

     1222. (வி-ரை.) ஓதுகிடை - வேதமோதும் மாணவர் கூட்டம். 1208
பார்க்க.

     ஊர் ஆன் நிரையின் - உடன்புக்க போது - வேதம்பயிலும்
மடங்களும் வேள்விச் சாலைகளும் ஊர்ப் புறத்தே உள்ளனவாதலின்
ஊரினின்றும் வேதம் பயில்வதற்காக உரிய நேரத்திற் புறப்பட்டுத்
தெருவழியே வேத மாணவர் கூட்டம் செல்வதாம். அந்நேரத்தில் ஊர்
ஆனிரையும் காலையில், மனைகளில் பால் தந்தபின் மேய்வதற்கு
மண்ணியாற்றின் கரைப்புறவுக்குச் செல்வன ஆதலின் உடன்புக்க போது
என்றார்.

     புனிற்று ஆ - ஈன்றணிய பசுவாதலின் கன்றைப்பிரிய மனமின்றி
மேய்க்கக் கொண்டுபோகும் இடையன்மேல் மருப்பு ஓச்சிற்றுப் போலும்.
போற்றும் அவன் - மேய்க்கும் இடைமகன். மருப்பு ஓச்சுதல் -
கொம்பினை அசைத்து முட்டச் செல்லுதல். மருப்பு ஓச்சு என்றதற்கு
கொம்பினால் முட்டி என்றுரைத்தனர் முன் உரைகாரர். "கடிதோச்சி
மெல்ல எறிக", "கைச்சிறிய தொருமாறு கொண்டோச்ச"