பக்கம் எண் :


சண்டேசுரநாயனார்புராணம்1593

 

வேண்டும்" என்று குறைகொண்டிறைஞ்சுதலும், "இனிப் புகுதில்" என்றதும்
இக்கருத்துப் பற்றியே எழுந்தன.

     இறையும் - ஒரு சிறிதும். முன்பு - நீங்கள் சொல்வதற்கு முன்பு.

     நிறையும் பெருமை அந்தணர்காள்! பொறுக்க வேண்டும் -
பொறுத்தற்குக் காரணங் கூறியவாறு. நிறையும் பெருமையுடையோராதலின்
என்க. இது நீதிச் சபையோரைச் சுட்டிக்கூறும் மரபு வழக்குமாம்.
"அனைத்துநூ லுணர்ந்தீர்" (200) முதலியவையும், ஆண்டுரைத்தவையும்
பார்க்க.

     குறை கொள்ளுதல் - தன்குறையைச் சொல்லி வேண்டிக்
கொள்ளுதல். பிழையுடன் படுதல்.

     இனிப்புகுதில் குற்றம் எனதே ஆம்- என்ற அவன் வாய்
மொழிகள், பிற்றைநாள் விசாரசருமனார் செய்யப்புகும் செயலினை நேரே
கண்டும், அத்திறத்தை அறிந்துகொள்ளாத குற்றமும், சினந்து அவரைப்
புடைத்துக் கொடிதா மொழி கூறியும் பாற்குடத்தைக் காலாற் சிதறியும்
செய்யும் சிவாபராதமாகிய பெருங்குற்றமும் என் மேலதாகவே இருக்குமன்றி
அவர்மேற் குற்றமொன்று மிராது என்றதோ ருண்மைக் குறிப்புப் பெற
நிற்பனவாதலும் காண்க. 43

1249
அந்த ணாளர் தமைவிடைகொண் டந்தி தொழுது மனைபுகுந்து
"வந்த பழியொன்" றெனநினைந்தே மகனார் தமக்கு
                                       வாய்நேரான்
"இந்த நிலைமை யறிவே" னென் றிரவு கழிந்து நிரைமேய்க்க
மைந்த னார்தாம் போயினபின் மறைந்து சென்றான்
                                  மறைமுதியோன்.44

     (இ-ள்.) வெளிப்படை. அந்தணர்களிடம் விடைபெற்றுக் கொண்டு,
மாலைச் சந்திக்கடன் முடித்து, வீடடினுட் புகுந்து இந்த மகனால் தனக்கு
வந்த பழி இது ஒன்றாகும் என்று நினைந்து கொண்டு, மகனாரிடம் இதனைச்
சொல்லாதவனாய், "இந்த நிலைமையினை யானே நாளை நேரிற்
கண்டறிவேன்" என்று எண்ணி, அன்றிரவு கழிந்தபின், மைந்தனார் தாம்
ஆனிரைகளை மேய்க்கப்போன பின்பு, மறை முதியோனாகிய எச்சதத்தன்
மறைந்து சென்றனன்.

     (வி-ரை.) விடைகொண்டு - பிழை யுடன்பட்டு மன்னிப்புக்கேட்டும்,
இனிவரில் என்குற்றமே என்று ஒப்பியும் அவையோரிடம் விடைபெற்றுக்
கொண்டு. அவையோர் அவனது வேண்டுகோளுக்கு இணங்கி விடைதந்தனர்
என்பது.

     அந்தி தொழுது - மறையோர் அந்தியிற் செய்யவேண்டிய சந்தியா
தியானம் என்னும் கடமையைச் செலுத்தி. அந்தி என்பது ஆகு பெயராய்
அந்நேரத்தில் வழிபடற்குரிய தேவிக்காயிற்று.

     வந்த பழி ஒன்று - ஒன்று - பெயர்ப்பயனிலை. மகனார் -
மைந்தனார்
- என விசாரசருமரைப் பன்மையிற்கூறிய ஆசிரியர் தந்தையை
ஒருமையாற்கூறிய தன்மை காண்க. இவ்வாறே மேல்வரும் பாட்டுக்களில்
வருவனவும் கண்டு அவ்வவற்றின் அமைதியையுங் கண்டுகொள்க.

     வாய் நேர்தல் - சொல்லுதல். மகனாரிடம் சொல்லாதிருந்ததற்குக்
காரணமாவது பழி ஒன்று வந்ததென்று கவலை கொண்டதும், தானே நேரில்
அறிவேன் என்று துணிந்ததும் ஆம் என்பது குறிக்க, வாய் நேரான்
என்பதனை அந்த இரண்டற்குமிடையில் வைத்தோதினார்.

     இரவு கழிந்து - கழிய என்பது கழிந்து என வந்தது.
வினையெச்சத்திரிபு. எச்சதத்தன் கவலையினால் தூக்கம் பிடியாமல் இரவுக்
காலம் கழித்தான் என்று