|
பொங்கி எழுந்ததாகிய
திருவருளிலே மூழ்கித், தாமரைப் பூவில் வீற்றிருக்கும்
பிரமதேவர் முதலாகிய பெருந் தேவர்களும் துதி செய்யத் தம்மைச் சூழ்ந்து
விளங்கிய சிவ வொளியினுள்ளே தோன்றினார். 55
இந்த இரண்டு
பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
1259. (வி-ரை.)
சடையார் - விழுந்த அவரை, எடுத்து - நோக்கி
- என்றருள் செய்தருளி - அணைத்தருளி - தடவி - உச்சிமோந்து -
மகிழ்ந்தருள - (அவ்வாறு) தீண்டப்பெற்ற சிறுவனார் - மாயையாக்கையின்
மேல் - சிவமயமாய்த் - திருவருளின் மூழ்கி - ஒளியில் - தோன்றினார்
என்று இந்த இரண்டு பாட்டுக்களையும் தொடர்ந்து முடித்துக்கொள்க.
தொடுத்தஇதழி
சூழ்சடையார் - இதழி - கொன்றை - இதழியும்
சடையும் சிவபெருமானுக்குச்சிறப்பாயுரியவை. முன்னர்ச் "சடைநீள்
முடியாரும்" (1257) என்றும், பின்னரும் "துண்டமதிசேர் சடைக்கொன்றை
மாலை" (1261) என்றும் இவற்றையே எடுத்துக்கூறுதல் காண்க. தொடுத்த
இதழி - மாலையாகத் தொடுத்ததுபோன்ற சரக்கொன்றை. தொடுக்கப்பட்ட
கொன்றைமாலை என்று உரைத்தலுமாம். விசாரசருமனார் தொடுத்துச்
சூட்டிய இதழிமாலை என்ற குறிப்புப்பட உரைக்கவும்
நின்றது. ஆத்தியின்
கீழ் மணலாற் சிவலிங்கந் தாபித்துக் கோயிலாக்கினாராதலின் அந்தத்
தொடர்புபற்றி "ஆத்திமலரும் செழுந்தளிரும் முதலா" (1238) என்று
ஆத்தியை முன்வைத்துக் கூறினாரேனும், முல்லைப்புறவுக்குரியதும்
சிவபிரானுக்குச் சிறப்பாயுரியதுமாகிய கொன்றையும் உடன்
கொள்ளப்படு மென்பதாம். "பூமலி கொன்றை சூட்ட" (சாய்க்காடு - 6) என்ற
திருநேரிசையும் காண்க. விசாரசருமனார் சிவமூர்த்தியாகிய குறிப்புடன்
திருப்பள்ளித் தாமஞ்சாத்திக் காதல்கூர அருச்சித்தாராதலின் அவர்
நினைத்துக் குறித்து அலங்கரித்த அந்தக் கோலத்துடன் வெளிப்பட்டுநிற்றலும்
இறைவனருளின் இயல்பாமென்க. "ஆரொருவ ருள்குவா ருள்ளத் துள்ளே
யவ்வுருவாய் நிற்கின்ற வருளுந்தோன்றும்" (பூவணம் - 10) என்ற
திருத்தாண்டகமுங் காண்க.
துணைத்தாள்
நிழற்கீழ் - துணைத்தாள் - இரண்டு பாதங்கள்.
அடைந்தவர்க்குத் துணை - பற்றுக்கோடு - ஆகிய திருவடிஎன்றலுமாம்.
"கழற்சேவடி யடைந்தார் களைகணெட்டும்" (தாண்டகம்). தாள் - திருவருள்
நிறைவு. நிழல் - என்றது அவ்வருளின் நிறைவின்
ஒருவர் பொருட்டு
வெளிப்படும் நிலை. அருள்வெளிப்பட்ட பின்னரே அதன் அனுபவம் நிகழக்
கூடியதாதலின் தாளின் கீழ் என்னாது தாள்
நிழற்கீழ் என்றார். தாட்கீழ்
எனவரும் இடங்களிலும் இவ்வாறே வருவித்துரைத்துக் கொள்ளத்தக்கது.
விழுந்தவரை
எடுத்து - கீழ் வீழ்ந்தாராதலின் எடுக்க
வேண்டியதாயிற்று, வீழ்ந்தாலன்றி எடுத்தல் நிகழ்க் கூடாதாதலின்
பெரியோர்கள்பாலும் இறைவர்பாலும் அருள்பெற வேண்டுவோர் அவர்
காலின்கீழ் வீழ்தல் வேண்டும் என்பது இக்கருத்துப்பற்றியதாம். கீழ் வீழ்ந்த
நிலையிலிருந்த பாண்டியநாட்டை மேலெழுவிக்க விரும்பிய குலச்சிறை
நாயனார், ஆளுடையபிள்ளையார் வரும் வழியில் வீழ்ந்துகிடந்து அவரே
வந்து தமது திருக்கைகளாற் றூக்கி எடுக்கும் வரையில் எழாமல் வீழ்ந்த
படியே கிடந்த வரலாறு இங்கு நினைவுகூர்தற்பாலது. (திருஞான - புரா -
656 - 657).
நோக்கி -
அருட்பார்வை யளித்து.
"நம்...நாம்"
என்று அருள் செய்து - இவை இறைவனார்,
விசாரசருமனாருக்கு உரைத்த உபதேசமாகிய உறுதிமொழிகள்.
|