பக்கம் எண் :


1604 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     எடுத்து - அணைத்தருளி - தடவி - என்றவை சிவபெருமான்
கையினாற் றீண்டிச் செய்த செயல்கள். எடுத்தல் பாசநீக்கம் செய்தலும்,
அணைத்தல் - தடவுதல் சிவப்பேறு பெறுவித்தலும் குறித்தன. "அன்று
நின்னுரு வாகத் தடவியே யாலவாயர னாகத் தடவியே" (திருவியமகம் -
5) என்ற ஆளுடையபிள்ளையார் தேவாரம் காண்க. "சித்தமல மறுவித்துச்
சிவமாக்கி" (அச்சோ 1) என்ற திருவாசகக் கருத்தும் நினைவு கூர்க.
அணைத்தலால் சிவமாக்கப் பெறுதலும், தடவுதலால் அதனுள் மூழ்கிச் 
சிவவொளியிற் றோன்றுதலுமாம். இக்கருத்துமேல்வரும் திருப்பாட்டில்
"தீண்டப்பெற்ற என்றதனால் விளக்கப்படுதல்காண்க. சிவஞானமாபாடியம்
11 சூத்திர வுரையைத் தழுவி அணைத்தல் - அருள் விளக்கமும், தடவுதல்
- ஆனந்த விளக்கமுமாம் என்று கொள்ளலா மென்பர் வித்வான் திரு. சா.
பெரியசாமிப் பிள்ளை. "தீவகமாமென வுருவாய் வந்து நாதன் றிருநோக்காற்
பரிசத்தாற் றிகழும் வாக்காற், பாவனையால்" (சிவப்பிரகாசம் - 8) என்றபடி
இங்கு நோக்கி - அருள் செய்து - தடவி என்றவற்றால் முறையே
நோக்கால் - வாக்கால் - பரிசத்தால் நிகழும் தீக்கைகளும், இனம்பற்றி
ஏனைய தீக்கைகளும் நிகழ்ந்தன எனக் கொள்ளலாமென்பர்
ஸ்ரீ ந. சிவப்பிரகாசதேசிகர்.

     எடுத்து - "என்னையிப் பவத்திற் சேரா வளையெடுத்து" என்ற
சிவஞான சித்தியார் பார்க்க.

     ஈன்றதாதை- பெற்றெடுத்து வளர்த்துப் பிரமோபதேசமும் செய்த
தந்தையையும். சிறப்பும்மை தொக்கது.

     நம்பொருட்டால் - நமக்குச் செய்யும் திருப்பணிவிடை முட்டின்றி
நிறைவேறும் பொருட்டு. "அர்ச்சனையில் இடையூறகற்றும் படையாக",
"அறிந்த இடையூ றகற்றினராய்" (1257) என்றது காண்க.

     இனி உனக்கு நாம் அடுத்த தாதை என்க. அடுத்த- பின்முறை
யால் என்று கொண்டு ஈன்றதாதை எறிந்து பட்டொழிந்தமையால் அடுத்த
தாதை - அடுத்த படியில் - என்க. அடுத்த - தகுதியான என்று கொண்டு
அவன் உனக்கு அடாததாதை, நாமே அடுத்ததாதை என்ற குறிப்பும் காண்க.
இனி அடுத்த - வழிபட்ட - தாதை என்றலுமாம். இனி உனக்கு அடுத்த
தாதை
என்றது இதன் முன்னர் எல்லா உயிர்களுக்கும் போல உனக்கும்
பொதுவகையால் இறைவராயும் தாதையாயு மிருந்தோம்; இனி அவ்வாறன்றிச்
சிறப்பு வகையால் தாதை முறைமையால் அடுத்து மிகநெருங்கி
விளங்குவோம் என்றதும் ஆம்.

     அணைத்தருளி - தடவி உச்சிமோந்து - மகிழ்ந்தருள - இவை
தாதையர் தம் சிறுவரிடத்து அன்பினாற் செய்யும் செயல்கள். தாதை என்ற
முறைமை அருளினாராதலின் தாதைபோல இவை செய்தருளினர். இதன்
மேல் மகன்மையாகிய உரிமை தந்த விவரம் 1261-ல் உரைப்பார். 54

     1260. (வி-ரை.) திருமலர்க்கை தீண்டப்பெற்ற - தீண்டப் பெற்ற
- தீண்டப் பெற்றதனால் என்க. காரணப் பொருட்டாய் வந்த பெயரெச்சம்.
பெற்றதனால் திருவருளின் மூழ்கி ஒளியில் தோன்றினார் என்றதாம்.

     அம்கண்மாயை யாக்கை - அங்குத் தீண்டப்பெற்ற யாக்கை -
மாயையால் ஆகிய உடம்பு. உயிர்களுக்கு உடம்பு மாயையினின்றும்
தரப்படுகின்ற தென்பது சாத்திரம். தநு என்கின்ற உடம்பும், கரணம்,
புவனம், போகம் என்ற இவையும் எல்லாம் மாயையினின்றும் வருவனவாம்.

     அளவின்று உயர்ந்த சிவமயமாய் என்றது மாயாவுடம்பும்
கரணங்களும் சிவவுடம்பும் சிவகரணங்களும் ஆகி, பசுகரணங்கள்
எல்லாம் பதிகரணங்களாக மாறிஎன்க.