பக்கம் எண் :


714 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

வைத்துப் பரிபாலிக்கும் அதிகாரிகளும் கோயில் அதிகாரிகளும் இவற்றைக்
கவனித்துத் திருத்த உரியராவர். இவ்விதிகளை உலகம் கண்டொழுகும்
பொருட்டு இங்கு அமைத்தது ஆசிரியரின் அருளினைக்காட்டும். வாயும்
- உம்மை இறந்தது தழுவியது.

     மொய்ம்மலர் நெருங்கு வாச நந்தனவனத்து முன்னி -
மொய்ம்மலர் -
அரும்புகள் நெருங்கிய மலர்க் கொத்துக்கள். மொய் -
அரும்புகள். மொய் - மொய்த்தல் என்று கொண்டுரைத்தலுமாம். நெருங்கு
- அவ்வகைப் பூங்கொத்துக்கள் உள்ள பலவகைத் தாவரங்களும் நெருங்கிய.
வாச நந்தனவனம் - மலர்களின் நறுமணங்கமழும் திருநந்தனவனம். மொய்
வாச மலர்
என்று கூட்டி உரைத்தலுமாம். முன்னி - நினைத்து.
இத்திருப்பணி செய்யுங்காற் சிவனடியே சிந்தித்துச் செய்ய வேண்டுமென்பது
விதி. இறைவனுக்காகும் மலர், இலை, வேர் தலியவற்றையும், அவற்றின்
பறித்தற்குரிய பக்குவங்களையும் எண்ணி யாராய்வது என்றுரைத்தலுமாம்.
அலரும் வேலை எனக் கால நியமங் கூறுதல் காண்க.

     கையினில் தெரிந்து - இருளும் ஒளியும் கலந்த விடியற்காலமாகிய
வைகறையின் பகுதியாதலின் பூ முதலியவற்றைக் கண்ணினுதவியாற்றானே
யறிந்து பறித்தல் இயலாது. ஆதலின் கையினது முன்பயின்ற பழக்க
விசேடத்தால் அறிந்து. இதுபற்றியே கண்களுள்ள கைகளை வேண்டிப்
பெற்ற வியாக்கிர பாதர் சரிதம் இங்கு நினைவு கூர்க.

     தெரிந்து என்றது இவை முன்னாள் மலர்ந்த பழமலர்; இவை
நாளை யரும்ப நின்ற முகை; இவை சிறிது போதில் அலரும் காலை மலர்,
என்பனவாதி பக்குவங்களைக் கைப் பழக்கத்தாலறிதல் குறித்தது.

     ஆவனவும் ஆகாதனவும் அறிந்து என்க.

     நல்ல கமழ்முகை - நல்லனவும் நறுமணங் கமழ்வனவுமாகிய அரும்புகள். நல்ல - புகழுக்கடி முதலிய கேடில்லாதவை. கமழ் -
அப்போது புதிதின் அலர்ந்து மலரும் தருணமே அவ்வவற்றிற்குரிய மணம்
வீசும் பருவம். "அரும்பு நன்மலர்கள்" - தேவாரம்.

     அலரும் வேலை சாத்தும் - அலரும் பருவத்தே இறையவன்
திருமுடியிற் சாத்தத் தகுதியுடையனவாய்ப், புதிதின் அலர்ந்து வீசும் மணம்
முழுமையும் இறைவன் றிருமுடியிலே கமழுமாறு சாத்தும் என்க. அலரும்
வேலை கொய்து
என்று கூட்டியுரைத்தலுமாம். காலைப் போதாயின்
மலர்கள் அலர்ந்து வண்டுகள் மொய்க்கும்; அவை அநுசிதமாம்; ஆதலின்
அலர்தற்கு முன்பருவத்தும் முன் காலத்தும் பூக்கொய்தல் மரபு.

     தெய்வ நாயகர் - தேவ தேவன். உயர்திணையின் உயர்ந்து முதலில்
நிற்போர் தேவர்கள். அவர்கட்கும் நாயகன் முழுமுதற் கடவுளாகிய
சிவபெருமான். "யாதோர் தேவ ரெனப்படு வார்க்கெலாம், மாதே வன்னலாற்
றேவர்மற்றில்லையே" என்பது அப்பர் சுவாமிகள் தேவாரம். இந்திரன் -
மால் - பிரமன் முதலிய தேவர்கள் எல்லாரும் பசுக்களே யாவர்.
சிவபெருமான் அவர்களுக்கு நாயகராகிய பசுபதி. இத்தலத்து எழுந்தருளிய
இறைவர் பசுபதீசர் என்ற பெயர் பெறுவதும் இப்புராணக் குறிப்பு.

     சாத்தும் திருப்பள்ளித்தர்மம் - சரத்தும் - சாத்தத்தக்க.
இவ்விவை இறைவனுக்குச் சாத்தற் குரியனவும் அவன் பூசைக்குரியனவுமாம்;
இவ்விவை அதற்கு விதிக்கப்படாதன; இவ்விவை இறைவி பூசைக்குகந்தன;
இவ்விவை இறைவி பூசைக்கு விதிக்கப்படாதன; இவையிவை இன்னின்ன
தெய்வங்களுக்குரியன; இவையிவை இன்னின்ன நாட்களில் எடுக்கலாகாதன
என்பனவாதி நியமங்களைச் சிவாகமங்களுள்ளும் புட்பவிதி முதலிய உரிய
நூல்களுள்ளும் காண்க.

     திருப்பள்ளித்தாமம் - இறைவனுக்காகும் பூ - இலை வேர்
முதலியவற்றைத் திருப்பள்ளித்தாமம் என்பது சைவ மரபு. இவற்றைக்
கொய்து என்றதும் காண்க. தாமம் - மாலை. இங்கு மலருக்கு ஆகுபெயர்
என்ற உரைக் குறிப்புக்கள் பொருந்தாமை யறிக.