பக்கம் எண் :


எறிபத்தநாயனார்புராணம்715

 

     இத்திருப்பணியே செய்து சிறப்படைந்த முருகநாயனார்புராணத்துப்
"புலரும் பொழுதின் முன்னெழுந்து" (7) என்ற திருப்பாட்டு முதல் ஐந்து
திருப்பாட்டுக்களையும் ஈண்டுத் தனித்தனி சிந்திக்க.

     மொய்யலர் - கமழ்முகம் - என்பனவும் பாடங்கள். 9

     560. (வி-ரை.) கோலப் பூக்கூடை - பூக்கோலக் கூடை என்று
மாற்றிப் பொருள் கொள்க. கூடைக்குக் கோலமாவது சிவபெருமானுக்குரிய
திருப்பள்ளித் தாமங்களைத் தன்னுட் கொள்ளுதலாம். சிவபெருமானுக்கும்
அடியார்களுக்கும் உரியவாயின பொருள்கள் யாவும் கோலமுடையனவே.
"சேய்ஞலூர்ப் பிள்ளையார்தந் திருக்கையிற் கோல மழு" - (சண்டீசர்
புராணம் 58,) "மங்கலமழு" (592) முதலிய வழக்குக்கள் காண்க.

     நிறைத்தனர் கொண்டு - நிறைத்துக்கொண்டு - முற்றெச்சம்.
கொண்டு
- ஏந்திக்கொண்டு. கொய்து நிறைத்துக் கொண்டு என முன்
பாட்டுடன் தொடர்பு படுத்தி உரைத்துக் கொள்க.

     வாலிய நேசம் - மெய்யன்பு. "வாலறிவன்" என்ற குறளுக்கு ஆசிரியர்
பரிமேலழகர் மெய்யுணர்வினையுடையான் என்றுரைத்தது காண்க. தூய அன்
பெனினுமமையும். வான்மை - வெண்மையும் தூய்மையும் குறிக்கும் என்ப.
அன்புக்குத் தூய்மையாவது மாசற்ற - வேறொன்றும் கலவாத - தன்மை
"பொது நீக்கித் தனைநினைய வல்லார்" என்றபடி முழு அன்பும் இறைவன்
றிருப்பணியிலேசெலுத்திய நெஞ்சு. "தொண்டரஞ்சு களிறும் மடக்கிச்
சுரும்பார் மலர் - இண்டை கட்டி வழிபாடு செய்யுமிடம்." (திருஞா - தேவா
- செவ்வழி - கேதாரம் - 1.)

     தண்டு - பூக்கூடையைத் தொங்கவைத்துத் தாங்கிவரும் தண்டு.
அதற்காக இதன் தலைப்பில் ஒரு வளைவு அமைந்திருக்கும். "வன்றனித்
தண்டிற் றூங்கும் மலர்கொள் பூக்கூடை"(563) என்றது காண்க. இதன்
நுனியில் உள்ள வளைவு பூமரஞ்செடிகளை ஊறு வராதவண்ணம் இலகுவாக
வளைத்து மலர்பறித்தற்கும் மீட்டும் அக்கொம்புகளை முன்னைநிலையில்
விடுவதற்கும் உதவும். "தவமுயல்வோர் மலர் பறிப்பத் தாழவிடு
கொம்புதைப்ப" என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரத்தில் இதனைக்
குறிப்பது காண்க.

     அங்கு - காலமும் இடமுங் குறித்தது. ஆலயம் - திருவானிலை.
அமைத்து - மாலை முதலியனவாகத் தொடுத்து.

     அமைத்துச் சாத்தும் காலை வந்துதவ - மலர்களைத் தொடுத்துப்
பின் சாத்த வேண்டியிருத்தலின் உரிய காலத்தில் உதவுவதற்காக முன்னரே
விரைந்து என்க. கடிதினில் - என்றதுங் காண்க. காலை - மாலை - இரவு
முதலிய அவ்வக் காலங்களுக்குரியனவாய்த் தனித்தனி மலர் முதலியன
விதிக்கப்பட்டுள்ளன. அம்முறையே சாத்துதல் மரபு. இங்கு அந்த ஒருநாளிற்
காலைநேரத்தின் முதற் பூசைக்குதவுதல் குறித்தது. * இப்போதும் இத்தலத்து
மகாநவமி முன்னாளில் நடைபெறும் இந்தத் திருவிழாவும் இம்மரபுபற்றிக்
காலைப்பூசைக்குமுன் நடை பெறுகின்றது.

     கடிதினில் - பூசைமுறைக் காலந்தாழ்க்காது உதவும் பொருட்டு,
அன்புமீ தூர் தலினால், இத்தொண்டர் மூப்புடையராயினும் விரைந்து போந்து
வந்தனர் என்க. அன்பின் செய்கை முட்டுப்படாது நிகழ்தற் பொருட்டு
அன்புடையார் விரைந்து கடிது செல்லுதல் உலக நிலையிலே பல
துறைகளிலும் வைத்துக் கண்டு கொள்க. சேயைப் பிரிந்த தாயானவள்
பானினைந்தூட்ட விரைந்து வருவாள் என்ப. "நனிவிரைந் திறைவர் வெற்பை
நண்ணினார் திண்ண னார்தாம்" (122),


     *இவ்வுற்சவமானது எனது பெரியதாயார் கரூர் - மீனாம்பாள்
அம்மாளவர்களின் தர்ம தானசாசனப்படி வைக்கப்பட்ட மூலதனத்தின் உதவி
கொண்டு உபயக்கட்டளையாக நடைபெற்று வருகின்றது - பதிப்பாசிரியன்.