|
(வி-ரை.) அமரர் அடக்க எழும் வெள்ளங்கள் - தேவருலகங்களும் அழிந்து பட மேலோங்கி எழுகின்ற ஊழி நீர்ப் பெருக்குக்கள். இவை பலவாதலின் பன்மையாற் கூறினார். |
பதணம் - மதிலின் மேலிடமாகிய மேடைகள். |
வெள்ளங்கள் - எறிந்த திரை வரைகள் சூழ்வ - வடம்போல வயங்கும் என்று கூட்டி முடிக்க. |
ஒவ்வோர் ஊழி வெள்ளப் பெருக்குக்கள் ஒன்றன்மேல் ஒன்று உயர; அவ்வெல்லாக் காலத்தும் இந்நகர் அழியாது தோணியாகி மிதத்தலால் வெள்ளங்களின் அலைகள் மேலோங்கியும் கீழ் வற்றியும் நகர் மதிலின்மீது மோதியதனால் ஆய வரைகள் - நீர் நின்ற நிலை காட்டும் கீற்றுக்கள் - உளவாக அவை அவ்வாறு மேல் கீழாக வரிசைப்பட நகரைச் சூழ்ந்த மதிலைச் சுற்றிக் காணப்படுகின்றன. அக்காட்சி திருப்பாற்கடலைக் கடைந்த காலத்து மத்தாக நட்ட மந்தரத்தைச் சூழ்ந்து கயிறாகச் சுற்றிய வாசுகி யரவு சூழ்ந்திருப்பதுபோலத் தோன்றிற்று. மெய்பற்றி வந்த உவமம். நகர், சூழ்ந்த மதில் மந்தர மலையினையும், அதனைச் சுற்றிய கீற்றுக்கள், சுற்றிய பாம்பினையும் போன்றன. அக்கீற்றுக்கள் வெள்ளப்பெருக்கின் கணக்கினையும் காட்டுதலால் நகரின் தொன்மையைப் போற்றும் குறிப்புமாம். |
4 |
1903.வளம்பயிலும் புறம்பணைப்பால் வாசப்பா சடைமிடைந்த |
தளம்பொலியும் புனற்செந்தா மரைச்செவ்வித் தடமலராற் |
களம்பயினீர்க் கடன்மலர்வ தொருபரிதி யெனக்கருதி |
யிளம்பரிதி பலமலர்ந்தாற் போல்பவுள விலஞ்சிபல. |
5 |
(இ-ள்.) களம்பயில் நீர்க்கடல் மலர்வது ஒரு பரிதியெனக் கருதி - கருமை மிக்க நீர்நிறைந்த கடலினிடத்தே தோன்றுவது ஒரு ஞாயிறேயாம் என்று கருதி; வளம்பயிலும் புறம்பணைப்பால் - வளமிக்க மணமுடைய மருதநிலத்தின் புறம் பணையினிடத்து; வாசப்பாசடை....தடமலரால் - வாசனையுடைய பசிய இலைகளினிடையே நெருங்கிய இதழ்களுடன் விளங்கும் நீர்ப்பூவாகிய செந்தாமரையின் அன்றலர்ந்த பெரும்பூக்களின் பொலிவினால்; இளம்பரிதி பல மலர்ந்தாற்போல்ப - இளஞாயிறு பலவற்றைத் தோன்றினாற்போலும் காட்சியுடையனவாகிய; பல இலஞ்சி உள - நன்னீர்ப் பொய்கைகள் பல உள்ளன. |
(வி-ரை.) இப்பாட்டுத் தற்குறிப்பேற்ற அணி. |
புறம்பணை - மருதநிலத்தின் வெளிப்பக்கம். பாசடை - பசிய இலைகள்; தளம் பொலியும் - இதழ்கள் விளங்கும். தளம் - இதழ். புனல் - தாமரை - நீர்ப்பூக்கள் பலவற்றுள்ளும் தாமரை என்ற வகை. |
செந்தாமரை - செம்மை - வெண்டாமரை ஈண்டைக் கேலாமையின் பிறிதிளியைபு நீக்கிய விசேடணம்; இளஞாயிற்றினைப் போன்று விளங்குவது செந்தாமரையேயாம். |
செவ்வித் தடமலர் - செவ்வி - சமயம், தருணம். இங்குப் புதிதின் அலரும் பருவம் குறித்தது. தட - பருமை. இலஞ்சி - நன்னீர்ப் பொய்கை. |