|
கருதி - இலஞ்சி பலவும் தாம் கடல்போல்வனவாதற்குத் தம்மிடம் பரிதிமலர்தல் வேண்டும்; அவ்வாறு மலரினும் ஒன்று மலர்தல் ஏனைக் கடல்களுக்கும் ஒத்தலால் சிறப்பின்று; பரிதி பல மலர்தற் கிடமாயின் தனிச் சிறப்புக்காட்டும் என்பது கருதி, இலஞ்சி, பல மலரால் மலர்த்திக் காட்டின என்பது. ஒரு கடலுக்குப் பல கடல்கள் என்ற சிறப்பும் குறிப்பது., |
மலர்வது - மலர்ந்தால் - மலர்தல் - தோன்றுதல் என்ற பொருளிலும். மலர்ந்தால் - மலர்வித்தால் எனப் பிறவினைப் பொருளிலும் உரைக்க நின்றது. |
களம் பயில் நீர்க்கடல் - என்றதனால் உவர் நீர்க்கடல் என்றும், இலஞ்சி அது போலன்றி நன்னீர் உடையன என்றும் குறிப்பித்தபடி. |
இளம் பரிதி - கடலில் வந்தெழும்போது உள்ள ஞாயிற்றின் தோற்றம், "இளஞாயிறின் சோதி யன்னான்" (பிள். தேவா. நட்டபாடை - ஆலந்துறை 6). பின்னர், இந்நகரில் வந்தவதரித்து இளஞாயிறுபோல மலரும் பிள்ளையாரது குறிப்பினை இலஞ்சிகள் காட்டின என்பதும் உட்கோள். "சேம வுதயப் பரிதியிற் றிகழ்பிரானை" (1939) என்பது காண்க. |
இலஞ்சி பலவும் - கடல்போலப் பெருமையுடையன என்பது உவம உள்ளுறை. முன்னிரண்டு பாட்டுக்களினும் தோணிபுரம் ஊழியிற் கடலுள் மிதந்த தன்மை பற்றிக் கூறியதனையே தொடர்ந்து கூறிய தொடர்நிலை உவமக் குறிப்பும் காண்க. 1901-ம் திருப்பாட்டில் நகர், மேலே மிதக்கும்படி கடல் சூழ்ந்த தன்மையாலும், 1902-ம் பாட்டில் அவ்வாறு பலமுறை மிதந்து அடங்கிய வரைகளாகிய அடையாளங்களைப் பற்றிய தன்மையாலும், இப்பாட்டில் அவ்வாறு வற்றியடங்கிய பின் முன் ஒரு கடல் சூழ்ந்தது போலன்றி அதனினும் சிறந்த பல கடல்கள் சூழ்ந்துள்ளன என்ற தன்மைபற்றியும் கூறிய நயம் காண்க. ஊழிக் காலத்தில் உலக மழியும்போது நாம் கண்டு பயன்பெற இயலாமையால் நாம் இன்றும் இந்நகரின் நிலைபேறாகிய அத்தெய்வத் தன்மையைக் கண்டு பயன்பெறும்படி விளங்குவதாம் என்று காட்டிய நயமும் கண்டுகொள்க. |
இளம் பரிதி பல - கடலில் மலரும் பரிதிகள் ஊழியில் அழிவனவாக, அவற்றை அழியாத நிலைமையில் தம்பாற் காட்டுவன என்ற குறிப்பும் காண்க. |
மலரக் களம்பயில் - என்பதும் பாடம். |
5 |
1904.உளங்கொண்மறை வேதியர்த மோமதூ மத்திரவும் |
கிளர்ந்ததிரு நீற்றொளியிற் கெழுமியநண் பகலுமலர்ந் |
தளந்தறியாப் பல்லூழி யாற்றுதலா லகலிடத்து |
விளங்கியவம் மூதூர்க் வேறிரவும் பகலுமிகை. |
6 |
(இ-ள்.) உளம்.....இரவும் - உள்ளத்தில் கொண்ட மறையின் ஒழுக்கத்தினையுடைய வேதியர்கள் செய்யும் ஓமங்களின் புகைப் படலங்களாலாகிய இரவும், கிளர்ந்த....பகலும் - கிளர்ச்சி பெற்ற திருநீற்றொளியினாற் பொருந்திய நண்பகலுமாக; மலர்ந்து - எப்போதும் மிக்கு விளங்கி; அளந்தறியாப் பல் ஊழி ஆற்றுதலால் எல்லை கண்டறியப்படாத பல ஊழிகளிலும் செய்வதனால்; அகலிடத்து விளங்கிய அம்மூதூர்க்கு - அகன்ற உலகத்தில் விளங்கிய அந்தப் பழைய ஊரினுக்கு; வேறு இரவும் பகலும் மிகை - வேறே இரவும் பகலும் வேண்டப்படா. |
(வி-ரை.) உளங் கொள் மறை - வேதியர் - எழுதப்படாமல் மனப்பாடமாக வழிவழி வரும் மறையாகிய வேதம். உளங்கொள் - கிரியைக் குரிய பாவனையை மனங்கொள்ளும் என்பாருமுண்டு. |