|
ஓம தூமத்து இரவு - வேத வேள்விகளின் புகையாற் செய்யப்பட்ட இருள் சூழ்ந்தமையால் காட்டப்பட்ட இரவுப்பொழுது. தூமம் - புகை. தூமத்து - தூமத்தினால் உளதாகும். |
கிளர்ந்த திருநீற்று ஒளியிற் கெழுமிய நண்பகல் - திருநீற்றின் வெள்ளிய ஒளியினாற் காட்டப்பட்ட நண்பகற்பொழுது. "கடும்பகலின் வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு" (அற். அந். 65). கிளர்ந்த - கிளர்ச்சி பெற்ற. நீற்றின் கிளர்ந்த ஒளி என்று கூட்டுக. கிளர்ந்த - நீறு என்று கூட்டி கிளர நின்ற என்று கொண்டு இப்பதியில் அவதரித்த பிள்ளையாரால் மீளக் கிளர்ச்சி பெற நின்ற நீறு என்ற குறிப்புப்படக் கூறலுமாம். "பூதிசாதன விளக்கம் போற்றல் பொறாதொழியக்கண்டு" (1916), "பரசமய நிராகரித்து நீறு ஆக்கும்" (1917), "தூய திருநீற்று நெறி யெண்டிசையுந் தனிநடப்ப" (1921), "சராசரங்க ளெல்லாம் சிவம் பெருக்கும்" (1924); "வெண்ணீற்றின் சோதி மாதிரந் தூய்மை செய்ய" (2756=திருஞான. புரா. 858), "திருநெறி நடந்த தன்றே" (2758= மேற்படி 859.) முதலியவை காண்க. |
மலர்ந்து - மலர்தல் ஈண்டு உண்டாதல் என்னும் பொருளில் வந்தது. இரவும் பகலுமாக மலர்ந்து, இவ்வாறு பல வூழிகளிலும் ஆற்றுதலால் என்க. |
பல் ஊழி - இவ்வூர் மிதந்து அழியாதிருக்கும் பலவாகிய பன்னிரண்டு ஊழிகளிலும். அளந்தறியா - என்றது அவ்வூழிகளிற் சென்ற காலத்தின் அளவினை. |
அகல் இடத்து விளங்கிய - அகலிடம் - விரிந்த உலகம். அகல் - அழிந்த என்று கொண்டு ஏனை உலகம் அழிந்த அவ்விடத்து அப்போது - அழியாது விளங்கிய என்றலுமாம். |
வேறு இரவும் பகலும் மிகை - வேறு - தூம இரவும் நீற்றொளிப் பகலுமன்றி இவற்றின் வேறாகிய அஃதாவது சூரியனாற் செய்யப்பட்ட பக லிரவு என்ற நாட்கூறுகள், மிகை என்றது. சூரியனும் அவன் செய்யும் காலக்கூறுபாடும் இருந்தும் அதுபற்றி நாட கழியாமலும் அழியாமலு மிருத்தலாலும், ஊழிதோறும் வரும் பல சூரியர்களைக் கண்டும் வேறுபடாது ஒன்றுபோல விளங்கும் பகல் இரவுகளைக் கொண்டுள்ளமையாலும் மிகை என்றார். பகலில் தூமந்திரவும் இரவில் நீற்றொளிப் பகலும் விளங்குதலால் ஒரு பகல் இரவுகள் மிகையாக - அதிகமாக - உள்ளன என்றலுமாம். |
இரவும் பகலும் மிகை - முன் பாட்டிற் பரிதி பல என்றும், ஒரு பரிதி என்றும் கூறிய கருத்தைத் தொடர்ந்து அப்பரிதிகள் வரினும் அவற்றால் வரும் நாட்கூறு இதனைத் தாக்காது செல்லுதலின் மிகையாம் என்று கூறிய உள்ளுறையும் காண்க. இரவும் பகலும் என்பது அவற்றைச் செய்யும் காலக் கடவுளை உணர்த்தி அக்கடவுளின் தொழிற்பாடு வேண்டப்படுவதின்று, ஈண்டு மாயையைக் கடந்த சிவச் செயலே செயலாக நிகழ்தலான் என்றலுமாம். |
வேத வேள்வியும் நீற்றொளியும் - இந்நகருக்கும் அதுபோலவே உயிர்களுக்கும் அழிவில்லாத தன்மையைச் செய்வன என்ற சாத்திர உண்மை விளக்கமும் காண்க. ஒளிப்பெருக்கால் திருக்காளத்தியில் இரவொன்றில்லை (780) என்றும், திருநீற்றொளியால் இரவு களக்கமின்றி விளங்கும் (1018) என்றும் வந்த கருத்துக்களும் இங்கு நினைவு கூர்தற்பாலன. |
6 |
1905.பரந்தவிளை வயற்செய்ய பங்கயமாம் பொங்கெரியில் |
வரம்பில்வளர் தேமாவின் கனிகிழிந்த மதுநறுநெய் |