பக்கம் எண் :

திருத்தொண்டர் புராணமும் - உரையும்15

குறித்தன. இவை இயற்கையிற்காணும் தன்மையணிப்பாற்படுவன என்க. அந்திமாலையில் மலர்கள் மலரும் இயல்பும் காண்க.
     செவ்வொளிய மதியம்போல் - மாலை எழுந்தபின் நெடுநேரம் கழியவும் எழுந்தபோது உள்ளபடியே விளங்கச் செய்யவல்லது இந்நகரத்தின் தொடர்பு என்றதனால் காலத்தால் கழிந்துபடாது நிலைபேறு பெறுவிக்கும் சிவத்தன்மை பெற்றது இந்நகரம் என்றது குறிப்பு. வெண்மதியம் - மூப்பால் வரும் நரைத்தன்மையினையும், செவ்வொளி - மாறாநிலையாகிய செம்மை என்னும் சிவத்தன்மையினையும் குறிப்பாலுணர்த்தின. முன் 1903 - 1904 பாட்டுக்களில் ஞாயிறுபற்றி இத்தன்மை குறிப்பித்தபடி இங்குத் திங்கள்பற்றியும் அதனைக் குறிப்பித்த நயமும் கண்டுகொள்க.
     சோலை - இந்நகரில் இந்திரன் நந்தவனம் வைத்து வழிபட்ட கந்தபுராண வரலாற்றுக் குறிப்பும் காண்க.
     சேயொளிய - என்பதும் பாடம்.
8
1907.காமர்திருப் பதியதன்கண் வேதியர்போற் கடிகமழுந்
தாமரையும் புல்லிதழுந் தயங்கியநூ லுந்தாங்கித்
தூமருநுண் டுகளணைந்து துளிவருகண் ணீர்ததும்பித்
தேமருமென் சுரும்பிசையாற் செழுஞ்சாமம் பாடுமால்.
9
     (இ-ள்.) காமர் திருப்பதி அதன்கண் - அழகிய அத்திருநகரிடத்து; கடிகமழும் தாமரையும் - மணங்கமழும் தாமரையும்; வேதியர்போல - வேதியர்களைப் போல; புல்லிதழும் ..... தாங்கி - புறவிதழ்களையும் விளங்கும் நூலையும் தாங்கிக் கொண்டு; தூமரு நுண்துகள் அணிந்து - தூய்மை பொருந்திய நுண்ணிய துகள்களை அணிந்து; துளிவரு கண்ணீர் ததும்பி - துளித்துவரும் கண்ணீர் ததும்பி; தேமரு.....பாடும் - தேம் பொருந்தவரும் வண்டினிசையால் இனிய சாமகீதத்தைப் பாடும்.
     (வி-ரை.) இத்திருப்பாட்டினால் சிலேடை வகையினால் தாமரையும் வேதியர் போன்றன என்று கூறியபடி. சொற் சிலேடையை உள்ளுறுத்த தொழிலும் மெய்யும்பற்றி வந்த உவமையணி.
     வேதியர்போல் - தாமரையும் - தாமரை வேதியர்க்குரிய அடையாள மாலை. இவ்வித் தன்மையால் ஒப்புமைபற்றி அத்தகுதிபெற்ற தென்ற உள்ளுரையும் காண்க.
     புல்லிதழும் நூலும் தாங்குதல் - நுண்துகள் - அணிதல் - கண்ணீர் ததும்புதல் - இசையாற் சாமம் பாடுதல் என்ற இவை ஒப்புமைப் பண்புகள்.
     தாமரை பற்றிக் கொள்ளும்போது, புல்லிதழ் - புறவிதழ்; தயங்கிய நூல் - தண்டின் உள்ள நூல்; நுண்துகள் - பூந்தாது; கண்ணீர் - தேனாகிய நீர் (கள் - தேன்); பாடுதல் - வண்டினிசையால் சாமம் இசைத்தல் - சாமம் இசைப்பொது எனவும்;
     வேதியர்பற்றிக் கொள்ளும்போது. புல்லிதழ் - (புல் - தருப்பை) தருப்பை இதழ்களாலாகிய பவித்திரம்; நூல் - பூணூல்; நுண்துகள் - திருநீறு; கண்ணீர் - அன்பு மிகுதியினால் துளித்துவரும் ஆனந்தக் கண்ணீர்; சுரும்பிசையால் சாமம் பாடுதல் - வண்டின் இசைச் சுரம்போலப் பல சுரங்களும் பொருந்தச் சாம வேத கீதம் பாடுதல்; எனவும் கொள்க. புல்லிதழ் - முஞ்சி நாண் என்றும், புல் ஆடை என்று முரைப்பாருமுண்டு.
     தூமரு நுண்துகள் - தேமரு (மென்) கரும்பிசை - வேதியர்பாற் கொள்ளும் போது தூய்மை செய்வது திருநீறு என்றதும், (தே - தெய்வத்தன்மை) தெய்வத் தன்மைபற்றி எழுவது வேத நாத இசை என்றதும் குறிப்பு.