பக்கம் எண் :

16திருஞானசம்பந்தநாயனார் புராணம்

     முன்னர், மரங்களும் ஆகுதி வேட்கும் தகைய (1905) என்றதனையே தொடர்ந்து ஆண்டு வேள்விச் சாதனங்களாகிய எரி - நெய் - துடுப்பு முதலியவை பற்றிக் கண்ட காட்சி நிலையிற் கூறிய ஆசிரியர், ஈண்டு வேள்வி வேட்போரது காட்சியையும் தாவரங்களிற் கண்டு காட்டுகின்றார். முன் உரைத்தவை யெல்லாம் ஈண்டும் கொள்க.
     செழும் சாமம் - செழுமை யாவது எல்லாச் சுரங்களும் பொருந்தும் சிறப்பு. வேதியர்பாற் கூறும்போது சுரும்பு இசையால் என்றது சுரும்பின் (இரீங்காரம்) இசையாகிய ஒலியால் என்க. இசையால் - ஆல் - கருவிப் பொருளில் வந்த மூன்றனுருபு.
9
1908.புனைவார்பொற் குழையசையப் பூந்தானை பின்போக்கி
வினைவாய்ந்த தழல்வேதி மெழுக்குறவெண் சுதையொழுக்கும்
கனைவான முகிற்கூந்தற் கதிர்செய்வட மீன்கற்பின்
மனைவாழ்க்கைக் குலமகளிர் வளம்பொலிவ மாடங்கள்.
10
     (இ-ள்.) புனை......அசைய - அணிந்த நீண்ட பொன்னாலாகிய குழைகள் காதில் அசைய; பூந்தானை பின் போக்கி - அழகிய பட்டுடையின் தானையினைப் பின் புறமாகச் செருகி, வினைவாய்ந்த ...... ஒழுக்கும் - செயல் வாய்க்கப் பெற்ற தீ வளர்க்கும் வேதிகையினை மெழுக்குப் பொருந்தச் செய்து வெண் சுண்ணக்கோலம் இடுகின்ற; கனைவான முகில் கூந்தல் - ஒலியினைப் பொருந்திய வானில் எழும் மேகம் போன்ற கூந்தலினையுடைய; கதிர் செய்வடமீன் கற்பின் - ஒளி செய்யும் வடமீன் என்னும் அருந்ததியின் கற்பு வாய்க்கப் பெற்ற; மனை வாழ்க்கை.... மாடங்கள் - இல்வாழ்க்கைத் துணையாய் விளங்கும் குலமகளிர் நிரம்பிய வளங்களால் மாடங்கள் விளக்கம் பெறுவன.
     (வி-ரை.) குழை யசைய - தானை பின் போக்கி - என்பனவற்றால் மகளிரின் அணி நலன், ஆடை நலன்களையும், வேதி மெழுக்குற வெண்சுதை ஒழுக்கும் - என்றதனால் தொழில் நலனையும்; முகிற் கூந்தல் - உடல் அழகு அமைப்பு நலனையும்; வடமீன் கற்பின் - என்றதனால் குண நலனையும்; மனை வாழ்க்கைக் குலமகளிர் - என்றதனால் உலகியலில் மகளிர்பால் வேண்டப்படும் ஏனை இல்லற நலன்களையும் கூறிய நயம் கண்டுகொள்க.
     குலம் - உயர்குடி. வளம் - மேற்கூறிய நலன்களெல்லாவற்றானும் வரும் பயன்களின் தொகுதி. வளம் - வளங்களால் என்க.
     மாடங்கள் வளங்களாற் பொலிவ - என்று கூட்டுக. வளம் மாடங்களிற் பொலிவன என்றலுமாம். வளம் - என்றதனால் வாழ்க்கைத் துணைநலம் என்ற பகுதியிலும், மனைவாழ்க்கை - என்றதனால் இல்வாழ்க்கை என்ற பகுதியிலும், திருவள்ளுவனார் கூறும் நலன்கள் எல்லாவற்றையும் வைத்துக் கண்டுகொள்க.
     வார் பொற் குழை அசைய - குழை - காதணி - அசையும்படி நீண்ட காதுடைமை முன்னாள் அணி நலமாகக் கொள்ளப்பட்டது. இந்நாளில் காது நீளாது அணி குழை மட்டும் நீண்டு தொங்குதல் அணியாகக் கொள்ளப்படும் வழக்குக் காண்க.
     பூந்தானை பின் போக்கி - தானை - அடையின் நுனி. முன் தானை என்பர். அதனைப் பின்புறமாகச் செருகுதல் முன்னாள் வழக்கு. முன்புறம் செருகுதல் பிற்கால வழக்கு. பின் செருகுதல் வினை செய்யும் வசதிக்கும் உதவுவதாம்.
     வேதி மெழுக்குறச் சுதை ஒழுக்குதல் - வேதியர் குலமகளிர் செய்யத்தக்க கடமைகள் பலவற்றுள்ளும் தலைமையாகிய சிறப்புப்பற்றி இதனை எடுத்துக்