|
பருவங்களும் வரும். (அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் பார்க்க.) இப்புராணத்தில் 51, 52-வது பாடல்களும் பார்க்க. சிறு தேர்ப் பருவம் 20, 21-வது மாதங்களில் நிகழ்வது. |
அவ்விரதப் பொடி ஆடும் - தாம் ஊர்ந்த - அந்தச் சிறு தேரின் உருளையினால் கிளம்பிய மண் புழுதி படிய விளையாடுகின்ற. அகரம் - தாம் ஊர்ந்த அந்த என முன்னறிச் சுட்டு. இரதப் பொடி - இரத மூர்ந்ததனால் உளதாகும் பொடி. |
வாழிவளர் மறைச்சிறார் - சிறார்களைப் பற்றிச் சிறப்புக் கூறியது, முன்னர்க் கூறிய இல்வாழ்க்கையினை மங்கலமாவது நன் மக்கட் பேறே என்று திருவள்ளுவர் இல்வாழ்க்கையினை அடுத்த மக்கட்பேறு என்ற அதிகாரத்தினை வகுத்த குறிப்புத் தருவதாம். |
வாழிவளர் மறைச்சிறார் - இச்சிறார் கூட்டத்தினுள் இனி ஆளுடைய பிள்ளையாரும் கூடி விளையாடி வருவாராதலின் அதன் பொருட்டு வாழிவளர் என்று வாழ்த்திய குறிப்புமாம். வேத வேள்வியை நிந்தனை செய்துழலும் அமண்டோர்தனை வாதில் வென்றழித்து மறைவழக்க மெடுக்க இங்கு மறையவர்குலத்து வந்து அவதரிப்பவர் பிள்ளையாராதலான், இந்நகரச் சிறப்புக்களையெல்லாம், அக்குலநலமுடைய வேள்விச் சிறப்புப்பற்றியே கூறுகின்றார். (1904 - 1905 -1907 -1908 - 1909); பிள்ளையார் சிறார்களுடன் விளையாடும் சிறப்பு "குறுவியர்ப்த் துளியரும்பக் கொழும்பொடியாடியகோல மறுகிடைப்பே ரொளிபரப்ப வந்துவளர்ந்தருளு நாள்" (1950) என்பது முதலியவற்றாற் காண்க. |
சிறுதேர் ஊர்ந்து - யாக முடிவில் பெரியோர் "அவபிருதஸ்நானம்" செய்து, சிறுபூசித், தேர்ஊர்ந்து, நகர்வலம் வந்து, வீடு புகுவதுபோலச், சிறாரும் இரதப் பொடியாடிச் சிறுதேர் ஊர்ந்து மனை செல்வர் என, முற்றுவமக் குறிப்பும் காண்க. |
11 |
1910.விடுசுடர்நீண் மணிமறுகின் வெண்சுதைமா ளிகைமேகந் |
தொடுகுடுமி நாசிதொறும் தொடுத்தகொடி சூழ்கங்குல் |
உடுவெனுநாண் மலரலர வுறுபகலிற் பலநிறத்தால் |
நெடுவிசும்பு தளிர்ப்பதென நெருங்கியுள மருங்கெல்லாம். |
12 |
(இ-ள்.) விடுசுடர் நீள்மணி மறுகின் மாளிகை - சுடர்விடுகின்ற நீண்ட மணிகள் அழுத்திய வீதிகளின் வெள்ளிய சுண்ணச் சாந்தினால் இயன்ற மாளிகைகள்; மேகம்....தொடுத்த கொடி - மேக மண்டலத்தைத் தொடுவது போல நீண்ட சிகரஉச்சிகள் தோறும் கட்டப்பட்ட கொடிகளால்; சூழ்கங்குல் - இருள்பரவிய இராப்போதிலே; உடுவெனும் நாள் மலர் அலர - விண் மீன்கள் என்னும் புதிய பூக்கள் அலர்தற்கு; உறுபகலில் - உற்றபகற் போதிலே; பல நிறத்தால் நெடுவிசும்பு தளிர்ப்தென - பல நிறங்களுடன் நீண்ட வானத்தில் தளிர்ப்பது போன்று; மருங்கெல்லாம் நெருங்கியுள - பக்கங்களிலெல்லாம் நெருங்கியுள்ளன. |
(வி-ரை.) மாளிகைக் குடுமி மணி நாசிதொறும் என்க. மாளிகைகளின் சிகரங்களின் மணிகள் இழைத்த வாய்தல்கள்தோறும். நாசி - முன்புறம் நீண்ட வாயில்கள். "காமர் மணி நாசிகையின் மருங்கு (1172) என்பதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. மாளிகைகள் பளிங்கு முதலிய மணிகளைக் கொண்டு வானத்தில் ஓங்கி விளங்குந் தன்மை பற்றி 1167 முதல் 1174 வரை பாட்டுக்களும் "பாங்குமணிப் பலவெயிலுஞ் சுலவெயிலுமுள மாடம்" (870) என்றதும், பிறவும் பார்க்க. நாசி - மாளிகைகளிற் கொடி நடுவதற்குற்ற ஓர் உறுப்பு; நாடி என்றும் கூறப்படும். |