|
வெண்சுதை மாளிகை....கொடி - மாளிகைகள் மேகமண்டலத்தை அளாவவுயர்ந்தன; அவற்றின் உயர்ந்த சிகரத்தின் முன்பு நீண்ட நாசிகைகள் தோறும் வரிசைபெறக் கொடிகள் கட்டப்பட்டுள்ளன என்றதாம். |
மணி வெண்சுதை மாளிகைக் - கொடி கங்குல் - உடுவெனும் - மலர் அலரப் பகலில் விசும்பு தளிர்ப்பதென - நெருங்கியுள - என்றது வெண்சுதையா லியன்று உயர்குடுமிகளில் மணிகள் பதித்த மாளிகைகளின் நாசிகைதொறும் பலநிறக் கொடிகள் வரிசைபெறக் கட்டப்பட்டுள்ளன; வெண்சுதை மணிமாளிகை நெருக்கம் பகல் செய்தது; மணிகள் சூழ் இரவினிடத்து உடுக்களாகிய மலர்கள் அலர்வன போன்றன; மணிமாளிகைகள் சுதைப்பகலாகிய ஒளியிடத்து இரவில் உடுக்களாகிய மலர்கள் தம்மிடம் அலர்தற்பொருட்டுப் பகலில் கொடிகளால் பல நிறத்தால் விசும்பில் தளிர்ப்பனபோல விளங்கின. இவ்வாறுள்ள வெண்சுதை மணிமாளிகைகளும் அவற்றிற் கொடிகளும் மருங்கெல்லாம் நெருங்கியுள்ள என்பதாம். மறுகின் - வெண்சுதை - மணிமாளிகை - கொடி - நெருங்கியுள - என்று கூட்டுக. தற்குறிப்பேற்றம். |
மறுகின் - முன்பாட்டில் நெருங்கியுள மணிமறுகு என்ற அந்த மறுகு என முன்னறிச் சுட்டு விரித்துக்கொள்க. இவற்றின் தன்மை முன்விரித்தபடியால் அடைமொழியாற் சுருக்கிக் கூறினார். அந்த மறுகின் மாளிகை - கொடி - என்க. |
மாளிகை - மங்குல் - உடு - அலாப் - பகலில் விசும்பு தளிர்ப்பதென நெருங்கியுள - ஓமதூமத்திரவும், நீற்றின் பகலும் ஆற்றுதலால் வேறு இரவும் பகலுமிகையாக அம்மூதூர் விளங்கியதனால், அதன் மறுகுகளின் வெண் சுதை மணிமாடங்களும் கொடிகளும் இரவினும் பகலினும் உள்ள செயல் தம்மிடத்தே தோன்ற விளங்கின என்றதாம். அலர - அலர்தற்கு; காரணப் பொருளில் வந்தது. |
கங்குல் - உடு என்னும் நாண் மலர் அலரப், பகலில் விசும்பு பல நிறத்தால் தளிர்ப்பது என - தாவரங்கள் பகலில் ஞாயிற்றின் உதவியால் தளிர்ப்பன; இரவிற் பல மலர்கள் அலர்வன என்ற தாவரநூற் கருத்தும்பட வருதல் காண்க. பல நிறத்தால் தளிர்ப்பன என்றது தளிர்களின் பல நிறங்களை இவை கொடிகளின் பல நிறங்களுக்கு உவமிக்கப்பட்டன. ஞாயிற்றின் கதிர் ஏழு நிறங்கள் பொருந்திய சேர்க்கை என்றும், அவற்றுள் ஒவ்வொன்றின் செயல் மிகுதியும் குறைவும் பற்றித் தாவரங்களில் தளிர், இலை, மலர் முதலியவை பல நிறம் பெறுவன என்றும் வரும் கலைஞானப் பகுதியும் குறிப்பு. நாண்மலர் - என்றது புதிதின் அலர்தல் குறித்தது. கொடி - பூக்கொடி எனவும் தொனிப்படுமாதலின் அதற்கேற்ப, மலரும் தளிரும் கூறப்பட்ட நயமும் காண்க. |
மணிமாளிகை - கொடி - சூழ்கங்குல் உடுவெனுமலரலரப் - பகலில் - விசும்பு தளிர்ப்பதென - மருங்கெல்லாம் நெருங்கியுள என்று கூட்டி முடித்துக் கொள்க. |
12 |
1911. மடையெங்கு மணிக்குப்பை; வயலெங்குங் கயல்வெள்ளம்; |
புடையெங்கு மலர்ப்பிறங்கல்; புறமெங்கு மகப்பொலிவு; |
கிடையெங்குங் கலைச்சூழல் கிளர்வெங்கு முரலளிகள்; |
இடையெங்கு முனிவர்குழா; மெயிலெங்கும் பயிலெழிலி. |
13 |
(இ-ள்.) வெளிப்படை. (அத்திருநகரில்) மடைகளிலெங்கும் மணிகளின் குவியல்கள் உள்ளன; வயல்களில் எங்கும் நீர் வெள்ளத்துடன் கயல் மீன்களின் கூட்டம். |