|
உள்ளன; அவ்வயல்களின் பக்கங்களிலெங்கும் பூக்குவியல்கள் உள்ளன; அவற்றின் புறத்தில் எங்கும் யாகங்களின் பொலிவு நிறைந்துள்ளது; வேதம் ஓதும் கிடைகளில் எங்கும் கலைகளின் சூழல்கள் விளங்கியுள்ளன; கிளர்வாகிய சோலைகளில் எங்கும் முரலுகின்ற வண்டுகளின் கூட்டங்கள் உள்ளன; இச்சோலைகளினிடை எங்கும் மறை முனிவர்களின் கூட்டம் உள்ளன; மதில்களில் எங்கும் தவழ்கின்ற மேகங்கள் உள்ளன. |
(வி-ரை.) எங்கும் எங்கும் - இவையிவை காட்சிப்பட உள்ளன என்று முற்று வினை விரித்துக்கொள்க. வினை - (கன்மம்) விரிவுபடாது மறையும் நகரமாதல் குறிப்பு. முற்று வினை விரித்துக் கூறுதலினும், இவ்வாறு எங்கும் எங்கும் என்று அடுக்கித் தொக வைத்துக் கூறுதல் இசையின்பமும் பொருட் செறிவும் பொருந்துதல் காண்க. இது ஆசிரியரது கவிநலச் சிறப்புக்களுள் ஒன்று. 77 - 83 பாட்டுக்களும், பிறவும் பார்க்க. |
மடை - வயல்களில் நீர் பாயும் மடைகள், குப்பை - பயன் படாது, விலக்கப்படுவது என்பது குறிப்பு. "அலகிடுங் குப்பை யாக்கும்" (திருவிளை - புரா - பாயி). |
மணி - மடைகளின் வழி நீர்ச் செலவிற்குத் தடையிராமல் ஒதுக்கப்படுவனவும், நீரால் ஒதுக்கப்படுவனவுமாகிய முத்து முதலிய மணிகள். இவை காவிரி நீருடன் வருவன. |
வெள்ளக் கயல் என்க - நீர்ப் பெருக்குடன் கயல்கள் நிறைவன என்பது. கயலுடன் கூடிய வெள்ளம். வெள்ளம் - கூட்டம். "மடையில் வாளைபாய" (பிள் - தேவா - திருக்கோலக்கா.) |
புடை எங்கும் மலர்ப்பிறங்கல் - வயல் வரம்பிலும் ஓரங்களிலும் உழத்தியர்கள் களைகட்டலாலும் உழவர் அரிந்து குவித்தலாலும் உளவாகிய தாமரை நீலம் ஆம்பல் முதலிய நீர்ப்பூக்களின் குவியல். பிறங்கல், மலை; மிகுதி பற்றிக் கூறியது. "முத்தின் சுடர்ப்பெரும் பொருப்பு", "மலர்க் கற்றை வேரி பொழிந்திழிவெற்பு" என்றதும், (73) பிறவும் பார்க்க. |
புறம் - அவ்வயல்களின் புறமாகிய புறம்பணை. "பெரும் பெயர்ச்சாலை" (77). மகம் - சிவ வேள்வி; மக - சிறார் என்று கொண்டு அங்கு விளையாடும் மகவுகளின் கூட்டம் என்றுரைத்தலுமாம். |
கிடை - சிறுவர்க்கு வேத மோதுவிக்கும் பள்ளிகள். 1208 - 1222 பார்க்க. |
கலைச்சூழல் - வேதம் வேதாங்க முதலிய கலைகள் கற்பிக்கப்படுகின்ற முழக்கம் இடையறாது கிடைகளின் பல பக்கமும் அலைபோல முழங்கிச் சூழ்வதனால் சூழல் என்றார். சூழல் - கலைகள் தம்முட்பட்டாரைச் சூழ்ந்து புறம் போகவிடாது பிணிக்கும் தன்மையும் குறிப்பு. "இசைச் சூழல் புக்கோ" (திருக்கோவை). |
கிளர்வு எங்கும் முரல் அளிகள் - கிளர்வு - சிறார் வேதம் ஓதிப் பயிலும் ஒலிக் கிளர்ச்சி. அஃது ஆகு பெயராய் அஃது உளதாகும் இடத்தைக் குறித்தது. கிளர்வு - சோலை என்றலுமாம். இவை வண்டுகள் முரலும் ஓசை போல்வன ஆதலின் கிடைகளின் பக்கமுள்ள சோலைகளின் வண்டுகள் முரலும் ஓசை இவற்றின் எதிரொலி போல்வன என்பது குறிப்பு. "சுரும்பிசையாற் செழுஞ்சாமம் பாடுமால்" (1907) என்றதனைத் தொடர்ந்து கொள்க. |
இடை - வண்டுகள் முரலும் சோலைகளினிடையே. முனிவர் குழாம் - மறைமுனிவர் கூட்டம். "போகமும் புண்ணிய முனிவ ரெங்கும்" (81). |
எயில் - மதில். முன் கூறிய இடங்கள் புற நகர்; அதனை அடுத்து உண்ணகரைச் சூழ்ந்துள்ளது எயில். |