|
பயில் எழிலி - மகச் சாலைகளின் பயனாய் வருவன மேகங்களாதலின் அக்குறிப்புப்பட மகப் பொலிவு என்றதனை அடுத்து எழிலி பயில்வதனைக் கூறினார். மதிலின் உயர்ச்சி கூறியபடியுமாம். "மேகமும் களிறு மெங்கும் வேதமுங் கிடையு மெங்கும், யாகமுஞ் சடங்குமெங்கும்" (81), "மங்குறோய் மாடச்சாலை மருங்கிறை யொதுங்கு மஞ்சம்" (386) என்று காரிய காரணக் குறிப்புப்பட முன் கூறியனவும், பிறவும் காண்க. |
மடைகளின் புறம் வயலும், அவற்றின் புறத்துப் புறம்பணையும், அதனையடுத்துக் கிடையும் சோலையும், அவை கழிய உண்ணகர் மதிலும் என்றிவ்வாறு மறையே புறத்தினின்று உட் செல்லும் ஆறு கண்டு கொள்க. முன் கூறிய பாட்டுக்களின் வைப்பு முறையும் இவ்வாறே அமைதிப் படுத்திக்கொள்ளத் தக்கது. மேல் வரும் பாட்டில் இவ்வாறு கண்ட மதிலின் உள்ளே விளங்கும் திருநகரத்தின் பெயர்களை வரிசைபெறக் கூறும் வகையாற் சிறப்புக் கூறி, மேற் சரிதத்தினுட் புகுகின்ற அமைதியும் காண்க. |
கலை ஒலிகள் - என்பதும் பாடம். |
13 |
1912.பிரமபுரம் வேணுபுரம் புகலிபெரு வேங்குருநீர்ப் |
பொருவிறிருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரமுன் |
வருபுறவஞ் சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம் |
பரவுதிருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப்பெயர்த்தால். |
14 |
(இ-ள்.) வெளிப்படை. (அத்திருநகரம்) பிரமபுரம் என்றும், வேணுபுரம் என்றும், புகலி என்றும், பெரிய வெங்குரு என்றும், நீரினுள் ஒப்பில்லாது விளங்கும் திருத்தோணிபுரம் என்றும், பூந்தராய் என்றும், சிரபுரம் என்றும், முன் வரும் புறவம் என்றும், சண்பைநகர் என்றும், வளரும் காழி என்றும், கொச்சைவயம் என்றும், போற்றும் திருக்கழுமலம் என்றும் இவ்வாறு ஆகி வருகின்ற பன்னிரண்டு திருப் பெயர்களை யுடையது. |
(வி-ரை.) இத்திருப் பாட்டினாற் சீகாழி நகரச் சிறப்பினை அதன் பன்னிரண்டு பெயர்களாலும் போற்றி அறிவித்தபடி; என்னை? இவை ஒவ்வோர் ஊழிகளிலும் ஒவ்வோர் காரணம்பற்றிப் போந்தபடியால் இதன் பழஞ்சரிதமும், ஊழியிலும் அழியாத நிலையும் அறிவிக்கப் பட்டவாறு; இவ்வரிசை காலக் கிரமத்திற் போந்த வரிசைப்படி அமைந்துள்ளது; ஆதலின் இவ்வரிசையிற் போற்றுதல் வேண்டுமென்று ஆரிரியர் அறிவித்தபடியும் காண்க. |
இதுபற்றி முன் 257-ம் திருப்பாட்டின் கீழ் உரைத்தவையும், பிறவும் பார்க்க. "கமழ்காழி யென்று கருதப் படுபொரு ளாறு நாலு முளதாக வைத்த பதி" (பிள் - தேவா, பியந்தைக் காந், நனிபள்ளி. 11) என்றதில் காழி என்பது 10-வது பெயராக வைக்கத் தக்கதென்றும், "ஒன்றி ரண்டொரு மூன்றொடு சேர்பதி - பூந்தராய்" (காந்தார பஞ் - 2. பூந்தராய்.) என்றதில் பூந்தராய் என்பது 6-வது பெயராக வைக்கத் தக்கதென்றும், வகுத்தருளியவாற்றால் ஆளுடைய பிள்ளையார் இவ்வரிசைப்பாடு அவ்வாறே வைத்து ஓதத்தகுவது என்று காட்டியருளியது காண்க. |
(1) பிரமபுரம் - பிரமன் பூசித்த காரணத்தாற் போந்த பெயர். "எடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த வருள்செய்த....... பிரமாபுரம்" (நட்டபாடை - 1); "நாவியலு மங்கையொடு நான்முகன்றான் வழிபட்ட நலங்கொள் கோயில்" (கழுமலம் மேகரா - குறி - 1); "சுருதி சிரவுரையினாற், பிரமனுய ரரனெழில்கொள் சரணவினை பரவ வளர் பிரமபுரமே" (பிரமபுரம் - சாதாரி - 1) முதலியவை பார்க்க. |