பக்கம் எண் :

திருத்தொண்டர் புராணமும் - உரையும்23

புறாவாகிய தீக்கடவுள் பூசித்தமையாற் போந்த பெயர். "குறைவின்மிக நிறைதையுழி மறை யமரர் நிறையருள முறையொடுவரும், புறவனெதிர் நிறைநிலவு பொறையனுடல் பெறவருளு புறவமதுவே" (மேற்படி 8).
     கோதம முனிவனது சாபத்தால் புறா வடிவம் பெற்ற பிரசாபதி முனிவன் புறாவாயிருந்து பூசித்துச் சாபநீக்கம் பெற்றதனாலும் போந்த பெயர் என்பதும் வரலாறு.
      (9) சண்பை - கபில முனிவர் சாபத்தால் தமது குலத்தினன் வயிற்றுதித்த பிள்ளையாகிய இருப்புலக்கையைப் பொடியாக்கிக் கொட்டிய தூள், சண்பைப் புல்லாக முளைக்க, அவற்றையே ஆயுதமாகக் கொண்டு போர்செய்து யாதவ குமரர் மடிய, அப்பழி போகும்படி கண்ணனும் அம்முனிவனும் பூசித்த காரணத்தால் இப்பெயர் போந்தது. முனிவர் துருவாச முனிவர் என்ற வரலாறு முண்டு. "மண்பரியு மொண்பொழிய நுண்புசகர் புண்பயில விண்படரவச், சண்பைமொழி பண்பமுனி கண்பழிசெய் பண்புகளை சண்பை நகரே" (மேற்படி9).
      (10) வளர் காழி - காளிதன் என்னும் பாம்பும், நடனத்தில் தோல்வியுற்ற காளியும் பூசித்ததனால் இப்பெயர் பெற்றது. "கீழிசைகொள் மேலுலகில் வாழரசு சூழரசு வாழவரனுக், காழியசில் காழிசெய வேழுலகி லூழிவளர் காழி நகரே" (மேற்படி 10); "அழலா யுலகங் கவ்வை தீர வைந்தலை நீண்முடிய, கடனா கரையன் காவலாகக் காழி யமர்ந்தவனே" (தக் - மேற்படி 10); வரத்தால் இப்பெயரே - மலிந்து வழங்குதலால் வளர் காழி என்றார்.
      (11) கொச்சைவயம் - பராசரர் ஆற்றிடையில் மச்சகந்தியைப் புணர்ந்ததனால் உண்டாகிய கெட்ட நாற்றமும் பழியும் ஏனைய முனிவர்களது இகழ்வும் நீங்கும்படி பூசித்து வரம் பெற்றமையால் இப்பெயர் போந்தது. "மச்சமத நச்சிமத மச்சிறுமியைச் செய்தவ வச்சவிரகக், கொச்சைமுர வச்சர்பணி யச்சுரர்கள் நச்சிமிடை கொச்சை நகரே" (மேற்படி 11) கொச்சை - தீ நாற்றம். வயம் - சயம்; போக்குதல் குறித்தது.
      (12) கழுமலம் - உரோமச முனிவர் அடைந்து பூசித்ததனால் ஞானோபதேசம் பெற்று உலகில் உயிர்களது மலங்கழுவும் வரம் பெற்றனர். பெயர் அதனாற் போந்தது. "ஒழுகலரி தழிகலியி லுழியுலகு பழிபெருகு வழியை நினையா, முழுதுடலி லெழுமயிர்க டழுவுழனி குழவினொடு கெழுவுசிவனைத், தொழுதுலகி லிழுகு மல மழியும்வகை கழுவுமுரை கழுமல நகர்" (மேற்படி 12).
     திருப் பெயர்த்து - இப்பெயர்கள் ஒவ்வொன்றும் சிவனருள் விளைவைக் காட்டி நிற்றலால் திருப்பெயர் என்றார். இப்பெயர்களை மந்திரங்களாகச் சொல்லிப் போற்றுதல் சிவனருள் பெறுதற்குச் சாதனமாம் என்பது.
     பரவு திருக்கழுமலம் - பரவு - திரு - என்ற இரண்டு அடைமொழிகள், இப்பெயர் கால வரிசையிற் கடைசியாய்ப் போந்ததென்றும், அதனால் அதுவே மேல்வரும் ஊழி வரையில் உயிர்கள் போற்ற நின்றதென்றும், மலம் கழுவப் பெற்றுச் சிவத்தை யடைவதே உயிர்கள் பெறும் பேறாதலின் அதனைச்செய்யும் கருத்துடன் பரவ நின்ற சிறப்புடைய தென்றும் குறிக்கின்றன.
     பெரும்புகலி வெங்குரு - என்பதும் பாடம்.
14
குடி - கோத்திரம் - பிதா
1913.அப்பதியி னந்தணர்தங் குடிமுதல்வ; ராசின்மறை
கைப்படுத்த சீலத்துக் கவுணியர்கோத் திரம்விளங்கச்
செப்புநெறி வழிவந்தார்; சிவபாத விருதயரென்
றிப்புவிவா ழத்தவஞ்செ யியல்பினா; ருளரானார்.
15