|
1916.(வி-ரை.) கையர் - கீழ் மக்கள். பொய் மிகுத்தல் - பொய்யாய கட்டுரைகள் வலுப்பட்டு மக்களிடம் மிகுதியாகச் செல்லுதல் மிகுத்தலால் என்க. |
ஆதி அருமறை வழக்கம் - ஆதி - சிவபெருமான் ; ஆதி சொன்ன மறை வழக்கு. ஆதியாகிய என்றலுமாம். |
அருகுதல் - குறைந்து செல்லுதல்; மெலிவடைதல். |
பூதி ..... போற்றல் பெறா தொழிய - திருநீறு போற்றி அணியப்படாமல்; இதனை இக்கால நிலையினாலறியலாம். |
ஏதமில் - குற்றத்தை இல்லையாகச் செய்யும். ஏதமாவது சிவனை மறந்த குற்றம். இதனை இல்லையாகச் செய்தமை பிள்ளையாரது அருட் செய்கைகளுட் கண்டுகொள்க. |
இடருழத்தல் - மனவருத்த மிகுதல், உலகம் சிவநெறியினின்றும் வழுவியது கண்டு மனம் வருந்துதல் உயிர்களின்மேற் கருணைகொள்ளும் உயர்ந்தோர் செயல். |
18 |
சிவபாத விருதயர் தவம் |
1917.மனையறத்தி லின்பமுறு மகப்பெறுவான் விரும்புவார் |
அனையநிலை தலைநின்றே யாடியசே வடிக்கமல |
நினைவுறமுன் பரசமய நிராகரித்து, நீறாக்கும் |
புனைமணிப்பூண் காதலனைப் பெறப்போற்றுந் தவம்புரிந்தார். |
19 |
(இ-ள்.) மனையறத்தின்...விரும்புவார் - மனை வாழ்க்கையில் இன்பம் செய்யும் மகவைப்பெறும் விருப்பத்தைக் கொள்பவர்; அனைய நிலை தலை நின்றே - அந்நிலையிற் சிறந்து நின்றே; ஆடிய சேவடிக்கமலம் நினைவுற - சிவபெருமானது திருக்கூத்தியற்றும் சேவடிக் கமலங்களை நினைத்து; முன் பரசமயம் நிராகரித்து முன்னர்ப் பரசமயங்களின் தீமையைப் போக்கி; நீறு ஆக்கும் - திருநீற்றின் விளக்கத்தினை மிகுதிப்படுத்தும்; புனைமணி...தவம் புரிந்தார் - அழகிய அணிகளைப் புனையும் திருமகனைப்பெறும் பொருட்டுப் போற்றும் தவத்தைச் செய்தனர். |
(வி-ரை.) மனையறத்தில் இன்பமுறும் மகவு - "மனைமாட்சி மற்றதன், நன்கல னன்மக்கட் பேறு", "அமிழ்தினு மாற்ற விளிதே", "மக்கண்மெய் தீண்ட லுடற்கின்ப மற்றவர், சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு" (குறள்) என்பன வாதியாகக் கூறப்பட்ட அறிவறிந்த மக்கட்பேற்றினால் இல்வாழ்க்கையுட் பெறப்படும் இன்பமெல்லாம் கொள்க. |
அனையநிலை தலைநின்றே...பரசமய நிராகரித்து நீறு ஆக்கும் காதலனைப்பெற என்றது, அவ்வாறு இல்வாழ்க்கையில் தனக்கு இன்பஞ் செய்யும் மகப்பேறு வேண்டும்; அம்மகவே பரசமயம் போக்கியும் சைவத்தை ஆக்கியும் உலகுயிர்க்கு இன்பஞ்செய்யும் அறிவறிந்ததா யிருக்கவும் வேண்டும் என்றபடி; அனைய நிலை - அத்தன்மையாவது தமக்கு மகப்பேறு வேண்டுதல். |
ஆடிய சேவடிக்கமலம் நினைவுறப் போற்றும் தவம் - என்க. ஆடிய சேவடி என்றது ஐந்தொழிற் பெருங்கூத்து ஆடிய சிவன் றிருவடி. ஐந்தொழிலினுள் படைப்பு முதலாவதாகக் கணிக்கப்படுதலின் மக்கட்பேற்றினை வேண்டிய அவர் ஆடிய திருவடியை நினைவுறப் போற்றினர் என்க. "தாளுடை படைப்பென்னுந் தொழிற்றன்மை தலைமைபெற" (1923) என்று இக்கருத்தைத் தொடர்ந்து எடுத்துச் சொல்லுதல் காண்க. |
பரசமயம் நிராகரித்து நீறு ஆக்கும்....காதலன் - பரசமயம் - வேத சிவாகம நெறிகளுக்குப் புறமான சமயங்கள். பரம் - அப்பாற்பட்டது - புறமானது. அவற்றை |