|
நிராகரித்தலாவது அவற்றின் பொய்ம்மைகளை வெளிப்படுத்தி அவை பொருளன்றாம் படியினை உலகறியச் செய்தல். சைவம் எல்லாச் சமயங்களையும் ஒவ்வோர் அங்கங்களாகக் கொண்டு எல்லாவற்றையும் தன்னுள் அடக்கித் தான் ஒன்றினு மடங்காது நிற்பது; ஆதலின் நிராகரிப்பது ஏற்றுக்கெனின்?, அவை முழு உண்மையன்றாம்படியைக் காட்டு மாற்றால் உலகம் அவற்றுள் அமைந்து மயங்கி நின்றுவிடாமற் செய்தற்கென்க; அன்றியும் அவை தம்மளவில் நில்லாது மிகுத்துச் சைவத் திறத்தைப் பழித் தழிக்க வரின் அதனைத் தடுத்துச் சைவத்தை விளக்கம் செய்தற்குமாம். |
நீறு ஆக்கும் திருநீற்று நெறியினை ஒளி குன்றாமல் ஓங்கி விளங்கச்செய்யும். நீற்று நெறியே சைவ நெறி; சைவ நெறி நீற்று நெறியே; முன், "பூதி சாதன விளக்கம் அரடினடியார்பாற் போற்றல் பெறாது" (1916) என்றதும், பின், "சைவ முதல் வைதிகமுந் தழைத் தோங்க" (1920), "தொண்டர்மனங் களிசிறப்பத் தூயதிரு நீற்றுநெறி, யெண்டிசையுந் தனிநடப்ப" (1921) என்பதும், பின்னர்ப் பிள்ளையார் திருநீற்றினாற் சைவம் பெருகச் செய்த வரலாறும், பிறவும் காண்க. |
பரசமய நிராகரித்து நீறாக்கும் - இதற்கு இவ்வாறன்றிப், பரசமயங்களை அழித்துப் பாழ்படுத்திப் பொடியாக்கும் என்றுரைத்தனர் முன் உரைகாரர்கள். சைவம் எச்சமயத்துடனும் பிணக்கிலதாய், அவை எல்லாம் தனது ஓரிடத்தே காண நிற்பதொன்றாதலின் எச்சமயத்தையும் அழிவுபடுத்தவும் பொடியாக்கவும் மாட்டாது; உண்மை நிலையை விளக்கஞ்செய்து அவ்வவற்றுக்குரிய நிலைகளைப் படிமுறையால் நிறுவிப், பக்குவத்துக்கு ஏற்றவாறு நிறுத்தியதே சைவ சமய பரமாசாரியர்களாற் செய்தருளப்பட்டது. சைவ நூல்களின் பரபக்கம் விதித்த கருத்துமிஃது. ஆதலின் அவ்வுரைகள் பொருந்தா என்க. பிள்ளையார் திருநீற்றுப் பதிகத்தாற் பரசமய நிராகரிப்பும் சைவ விளக்கமும் செய்தருளிய வரலாறும் ஈண்டுக் குறிக்க. |
புனைமணிப்பூண் காதலனை - மணிப்பூண்புனை - என்றது பின்னர் - மகவுபெற்ற வழி அணி பல புனைந்து பாராட்டும் மகிழ்ச்சிச் செயலை. காதலன் என்றதும் அவ்வாறு அவர் கொண்ட ஆசையினைக் குறித்து நின்றது. இங்குப் பூண்புனைந்தவாறே பிறக்கும் மகவு என்று உரைகொண்டு, முருகப்பெருமானையே தமக்கு மகனாகப் பெறத் தவம் புரிந்தார் என்றுரைத்தாருமுண்டு. அதற்கேற்றவாறே மேல்வரும் பாட்டுக்களிலும் அவர் உரைகொண்டனர். முருகப்பெருமானே ஆளுடைய பிள்ளையாராய் அவதரித்தார் என்ற கொள்கை பொருத்தமன்றாம் படியினையும் அவ்வுரைகள் பொருந்தாமையையும் ஆசிரியர் திருவாக்கானும், பிள்ளையார் திருவாக்கானும், ஞான நூன் முடிபுகளானும் பின்னர்ப் பலவிடத்தும் காட்டப்படும்; கண்டுகொள்க. முன் - நிராகரித்தல் முன்னும், ஆக்குதல் பின்னும் நிகழ என்க; பாச நீக்கமும் சிவப்பேறும்போல ஒருங்கு நிகழுமாயினும் தொடங்குதல் பற்றி முன் என்றார். |
பெற்றெடுக்கும் தவம் - என்பதும் பாடம். |
19 |
பகவதியார் தவமும், பிள்ளைப்பேறும் |
1918.பெருத்தெழுமன் பாற்பெரிய நாச்சியா ருடன்புகலித் |
திருத்தோணி வீற்றிருந்தார் சேவடிக்கீழ் வழிபட்டுக் |
கருத்துமுடிந் திடப்பரவுங் காதலியார் மணிவயிற்றில் |
உருத்தெரிய வரும்பெரும்பே ருலகுய்ய வுளதாக. |
20 |
(இ-ள்.) பெருத்து எழும் அன்பால் - மேன்மேலும் பெருகி எழுகின்ற அன்பினாலே; பெரியநாச்சியாருடன்...வழிபட்டு - பெரியநாயகியம் மையாருடனே புகலியில் திருத்தோணியிலே வீற்றிருந்தாராகிய தோணியப்பருடைய சேவடிகளின் கீழ் வழிபாடு செய்து; கருத்து.....வயிற்றில் - கணவனாரது கருத்து முற்றுப் |