பக்கம் எண் :

திருத்தொண்டர் புராணமும் - உரையும்3

யணிந்த சிவபெருமானது திருவடிகளை யல்லாது வேறொன்றனையும் பேணாத எம்பிரான திருஞானசம்பந்த நாயனாருடைய அடியவர்க்கும் நான் அடியேனாவேன்.
     வம்பறா........மலரும் என்ற அளவும் கொன்றைக்கு அடைமொழிகள். வம்பறா வரிவண்டு - வம்பு - மணம்; அதனை உட்கொண்டு விரியும் பருவத்துள்ள மலர் மொட்டுக்கு ஆகுபெயர். மலருந் தருணத்து மதுவுண்ணும் ஆசையினால் வண்டுகள் ஊதி மொட்டுக்களை மலர்த்துதற்கு மொய்த்துக்கொண்டிருக்கும். மலரும் - மலர்த்தும். பிறவினை. மணநாற - மணநாற்றம் அறிவித்தலினால் வண்டுகள் மது ஊற்றத்தை அறிந்தன என்பது குறிப்பு.
     மதுமலர் நற் கொன்றை - மது - தேன். தேனை ஊற்றாகத் தரும் கொன்றை மலர். கொன்றையான் - கொன்றை மலர் மாலையைத் தமது திருவடையாள மாலையாகக் கொண்ட சிவபெருமான். அடியலாற்பேணா எம்பிரான் சம்பந்தன் - அடிய லாற்பேணா - எதிர்மறைகள் உறுதிப்பொருள் தந்தன. அடியே பேணுதலால் எமது பரம குருமூர்த்தியாகிய சம்பந்தன் என்று காரணக் குறிப்புடன் நின்றது. திருத்தொண்டத்தொகை உரைக் குறிப்புக்கள் பார்க்க. (முதற் பாகம் பக். 422). இறைவரது அருள் முன்னிடவே, அதனாற் குறிக்கொள்ளும் உயிர்கள் வந்து பற்றிச் சூழ, அருளமுதம் பருக வெளிப்பட்டுத் துய்க்கப்படும் என்ற உள்ளுறை காண்க. "காலமுண்டாகவே" என்ற திருவாசகமும், "இம்மலைப் பெருந்தேன் சூழ்ந்து" (750), "மன்றுளாடு மதுவின்னசை யாலே" (242) என்பனவற்றில் உரைத்தவையும் இங்குக் கருதத் தக்கன. இறைவ ரருளமுதத்தை இடைவிடாது பருகிக்கொண்டிருப்பவர் ஆளுடைய பிள்ளையார் என்ற உட்குறிப்பும் காண்க. "மறக்குமா றிலாத வென்னை" (தேவா.) "பண்டு திருவடி மறவாப் பான்மையோர்" (புரா. 1952 (1)).
     வகை:- வையம் மகிழ - உலகம் மகிழவும்; யாம் வாழ - யாங்கள் வாழவும்; அமணர்வலி தொலைய - அமணர்களது வன்மைகள் தொலையவும்; ஐயன் பிரமபுரத்து அரற்கு - பிரமபுரத்தில் எழுந்தருளிய தோணியப்பரை; பாட - பாடுதற்கு; அம்மென்......பருவத்து - அழகிய மெல்லிய குதலை மொழியைச் செவ்வாயின் மெல்ல மிழற்றும் அச்சிறிய பருவத்தில்; பருப்பதத்தின்.....என்பர் - பார்வதியம்மையாருடைய அருளமுதத்தைப் பெற்றவர் என்று சொல்லுவர்; ஞானசம்பந்தனையே - திருஞானசம்பந்த நாயனாரையே.
     பந்தார் விரலியார் - பந்து பொருந்திய கையினையுடைய மங்கையர்க்கரசியம்மையார்; வேள் - குலச்சிறையார்; செங்கட் சோழன் - கோச் செங்கட் சோழர்; முருகன் - முருகநாயனார்; நல்ல சந்து ஆர் அகலத்து நீலநக்கன் - நல்ல சந்தனம் பொருந்திய மார்பினையுடைய திருநீலநக்க நாயனார்; பெயர் தான் மொழிந்து கொந்து ஆர் சடையர் பதிகத்தில் இட்டு - இவர்களது பெயர்களை மணமுடைய சடையாரைப் பாடிய திருப்பதிகங்களில் மொழிந்து வைத்து; அடியேன் கொடுத்த அந்தாதி கொண்ட பிரான் - அடியேன் விண்ணப்பித்துக் கொண்ட திருவந்தாதியை ஏற்றுக்கொண்ட பெருமான்; அருட்காழியார் கொற்றவனே - அருளுடைய சீகாழித் தலைவராகிய பிள்ளையாரே யாவர்.
     வையம் மகிழ யாம் வாழ அமணர் வலி தொலைய - பாட என்க. இதன் பொருளை "வேத நெறி தழைத் தோங்க" என்ற பாட்டில் விரித்தனர் ஆசிரியர். பிள்ளையார் பாடலினால் இவைகள் பயனாயிற்று என்பதாம். அமணர் வலி தொலைய வேதநெறி தழைத்தோங்கிற்று; யாம் வாழ என்றது சைவத்துறை விளங்கிய பயன்; வையம் மகிழ என்றது பூதபரம்பரை பொலிவுறுதல் குறித்தது. பாட - பாட்டினால் இப்பயன்கள் போந்தன என்பதாம். இவை பாசநீக்கமும் சிவப்பேறும்