பக்கம் எண் :

திருத்தொண்டர் புராணமும் - உரையும்5

முடைய வயல்களாற் சூழப்பட்ட புகலி என்னும் சீகாழித் திருத்தலத்தில் அவதரித்த திருஞானசம்பந்த நாயனாருடைய; பாதமலர்.....பரவுவாம் - இரண்டு திருவடிகளாகிய மலர்களையும் தலையிலே சூட்டிக்கொண்டு அத்துணையாலே, அவர் செய்த திருத்தொண்டினது திறங்களைப் போற்றப் புகுவோம்.
      (வி-ரை.) வேதநெறி - வேத விதிதமாகிய வழி. வேதம் -இறைவன் றிருவாக்கு. அறிதற்குக் கருவியானது என்பது சொற்பொருள். வேதம் - காண்டல் கருதல்களால் அறியப்படாத பொருளை அறிதற்குக் கருவியாயுள்ள பொருள். நெறி வழி. நெறி தழைத்தோங்க - தழைத்தல் -வழிச்செல்வோரை வருத்தமுறுத்துகின்ற முள்ளும் கல்லும் குழியும் பிறவும் இல்லாமலிருத்தல்; ஓங்குதல் - அந்நிலை நிலைபெற்றிருத்தலும், வழிச் செல்வோருக்கு உதவிபுரியும் நிழலும் நீரும் முதலியன மிக்கிருத்தலும் குறித்தன. வேதநெறி தழைத்தோங்குதலாவது - வேதங்காட்டும் வழிகளின் பொருள் தூர்வையாகாது பிறழ்வுணர்வுகளால் மயங்கவைக்காது நிற்றலும், நற்பொருள் பெறுதற்கு உதவும் சாதனங்கள் மிகுதலுமாம். நெறி - உவமை யாகுபெயர்.
     மிகுசைவத் துறை விளங்க - வேதம் நெறி என்றும், சைவம் துறை என்றும் கூறப்பட்டன. சைவம் - ஆகமம். "சிவாகமங்கள் சித்தாந்தம்" (சித்தி); சேரும் இடம் ஒன்றாக, அதற்குப் பல வழிகள் உளவாம். "ஒன்றது பேரூர் வழியா றதற்குள" (திருமந்). அதுபோல் வேதங்கள் கூறும் வழிகள் பற்பல. அவை பலதிறப்படும். வழியினாற் சென்று குறியிடம் சேரினும் அவ்விடத்துப் புகும் துறைகளும் பல உளவாம். பெரும்பான்மை நீர்நிலைகளிலும், சிறுபான்மை தரையிலும் வானிலும் துறைகள் அறியப்படும். நெறிகள்போலத் துறைகளும் பலதிறப்படும். வழுக்கல்துறை, அழுக்குத்துறை, குளிக்குந்துறை, முதலையுள்ள துறை என்றிவ்வாறு நீர்த்துறைகளில் வேற்றுமை காணுமாறு, வேதநெறி காட்டக் கண்டு சென்றடையும் சமயத்துறைகளும் பலப்பல. அவற்றுள்ளே சைவத்துறையே எத்தகைய குறைபாடுமின்றி மிக்கது என்பார் மிகு சைவத்துறை என்றார். உயிர்களின் பக்குவபேதம் நோக்கி பலப்பல துறைகளும் வேண்டப்படுவன; அவை அவ்வாறு தத்தம் அளவில் அமையாது அதிகரித்து உயிர்களை மயக்கிக் கேடு செய்யுங் காலத்தில் அவற்றை நிராகரித்து அளவுபடுத்தி நெறிகளையும் துறைகளையும் கேடுறுத்தாது செய்தல் இறைவராணையால் வருவது. ஈண்டுத் திருஞானசம்பந்தர் அவ்வாறு நெறியையும் துறையையும் புன்னெறித் துன்மார்க்கங்களாற் றீமையுறாது தூய்மைசெய்து உயிர்களைப் பொலிவுற வருளினர். அதற்காகவே அவதரித்தனர். அவ்வருட் செயல் அவர் அழுததன் காரணமாக ஞானப்பால் உண்டருள உளதாயிற்று என்று காணும்படி ஓங்க - விளங்க - பொலிய - அழுத என்று காரணகாரியமுறை தோன்றவைத்தார்.
     வேதநெறி - வேதவிதிப்படி நிகழும் வைதிக ஒழுக்கம்.
     சைவத்துறை - சிவாகம விதிப்படி நிகழும் சரியை முதலிய சிவதருமங்கள்.
     வேத சிவாகமங்களிரண்டும் சிவன் திருவாக்குக்கள். வேதம் உலகர்க்கும். சிவாகமங்கள் சத்திநிபாதர்க்கும் அருளப்பட்டன; வேதம் பொது; ஆகமம் சிறப்பு. "வேதமொ டாகமம் மெய்யா மிறைவனூல், ஓதும் பொதுவுஞ் சிறப்புமென் றுன்னுக" (திருமந்திரம்). "வேதம் பசு, வதன்பால் மெய்யாகமம்" முதலியவை காண்க. வேதம் முடிந்த இடத்தில் சிவாகமம் தொடங்குகிறது. இன்னதென்று காணமுடியாதது என்று சந்திமொழியுடன் வேதம் இளைத்துநிற்கின்ற இடத்தில் அப் பதிப்பொருள் இன்ன தன்மையுடையது என்று சுட்டிக்காட்டித் தொடங்குகிறது சிவாகமம். இக்குறிப்புக்களை உள்ளீடாகக் கொண்டு வேதநெறி தழைத்தோங்க என்றும், மிகுசைவத்துறை விளங்க என்றும் கூறினார்.