|
ளாகிய உண்மை நாயன்மார்களையும் பிறரோடொப்ப எண்ணுவது பாவமாகும். சைவ சித்தாந்தத்திற்காணும் முழு உண்மைத் திறனும், உலக உண்மைகளெல்லாவற்றையும் தன்னகத்தடக்கிக் காட்டும் சோபான முறையும் என்ற இவற்றின் தத்துவங்களை உணராதாரே புறச்சமயங்களைச் சைவத்தோ டொப்பிடுவர். இற்றைநாட் சைவவுலகம் அடைந்து நிறம் இப்பரிதாப நிலை வருந்தத்தக்கது. "வைதிக சைவத்துக்கு வழங்கும் பெயர்கள் பலப்பல; அவற்றின் பொருள் ஒன்றே" என்பனவாதி கூற்றுக்கள் மயக்கத்துக் கேதுவாவன. இலக்கணத்தால் வேற்றுமையில்லாதவழி, இலக்கியம் பலவாதல் செல்லாது என்பது அளவைநூல் காட்டும் உண்மை. பூதம் பொலிய என்னாது பூத பரம்பரை பொலிய என்றது வழிவழி பக்குவத்துக்கேற்ப உயிர்கள் பொலிவுறுதல் வேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கியது. |
புனிதவாய் மலர்ந்து அழுத - புனிதவாய் - அழுது ஞான அமுதம் பெறுதற்கு முன்னும் அத்திருவாய் புனிதமுடையது என்பதாம். திருஞானசம்பந்த நாயனராது அவதாரம் கன்மத்துக்கீடாக வந்ததன்று. முன்னைநிலையில் அவர் சிவனை மறக்குமாறிலாத பெரியார். உலகுக்கு அருள்புரியும் பொருட்டே அவரைச் சிவபெருமான் உலகில் பிறந்தருளவருளினர் என்பது. "புண்ணியக் கங்கைநீரிற் புனிதமாந் திருவாய் நீரில்" (671) என்றாற்போலக் காண்க. அழுத - பிரமதீர்த்தக் கரையில் நின்று மூன்றாண்டில் திருத்தோணிச் சிகரம்பார்த்து "அம்மே யாப்ப" என்றழுத தன் காரணம் 1958 - 1959 பாட்டுக்களிற் காண்க. "அழுதுலகை வாழ்வித்த" (திருப்புகழ் - கதிர்காமம்.) |
சீதவள வயற் புகலி - பிறவி வெப்பந் தணிக்குந் தட்பம் உடைமை குறிப்பு. புகலி - சூரனுக் கஞ்சித் தேவர்கோன் புகலடைந்தமையாற் போந்த பெயர். வழி மொழித் திருவிராகம் முதலியவை பார்க்க. சீகாழிக்கு ஊழிக்கிரமத்திற் போந்த 12 திருப்பெயர்களுள் மூன்றாவது பெயர். அத்திருத்தலம்போலவே திருஞான சம்பந்த நாயனாரது பாதமலர்களும் புகலடைந்தார்க்குப் பிறவி வெப்பந் தீர்க்க வல்லன என்பது குறிப்பு. "பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத், துறவியெனுந் தோற்றோணி கண்டீர்...ஞானத்தமிழ்" (நம்பியாண்டார்நம்பிகள்.) |
திருஞானசம்பந்தர் - இப் பெயர்போந்த வரலாறு (1966-1967) பாட்டுக்களிற் காண்க. |
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம் - அவர்தம் திருவடிகளைத் தலைமேற் சூடி அவரது திருத்தொண்டின் வரலாற்றினைத் துதிக்கப் புகுகின்றேன் என்று ஆசிரியர் இப்புராணத்துக்குத் தோற்றுவாய் செய்தனர். முன் சருக்கத் தொடக்கமும் பிறவும் காண்க. |
தொண்டு - செய்த தொண்டின் வரலாறு. பரவுதல் - துதித்தல். அவ்வரலாறு எம்மால் எல்லை கண்டு சொல்லுந் தரமுடையதன்றாதலின் துதித்தமட்டில் இப்புராணம் அமையும் என்றதாம். இங்குத் தொடங்கிய இக்கருத்தையே பற்றி "அருந்தமிழா கரர்சரிதை யடியேனுக் கவர்பாதந், தரும்பரிசா லறிந்தபடி துதி செய்தேன்" (1254) என்று முடித்துக்காட்டியதும் காண்க. |
இப்பாட்டில் நாயனாரது அவதாரத்தின் உள்ளுறையினையும் பயனையும் திருப்பெயரையும் நகரத்தையும் எடுத்துக் கூறியவகையால் சரித முழுமையும் குறிப்பிற்போந்த திறமும் காண்க. |
1 |
1900.சென்னிவளர் மதியணிந்த சிலம்பணிசே வடியார்தம் |
மன்னியசை வத்துறையின் வழிவந்த குடிவளவர் |