பக்கம் எண் :

திருத்தொண்டர் புராணமும் - உரையும்761

முடிபாதலின் அவை அழிந்துபோகா நல்லனவாய் மாறும்; அவை நல்லநல்ல மிகவே - அவை தீங்கு நீங்கித்தாம் நல்லவாதலேயன்றி ஏனையோர்க்குப்போலல்லாது அடியார்க்கு உயிர்த்திறத்துப்பற்றிய மிக்க நன்மைகளைப் பயக்கும்; இப்பயன்களைப் பிற்சரித விளைவுகளில் வைத்து, ஆசறுதல் - சமணர்கள் மாட்டிய தீப் பயன்படாது ஒழிந்தமையாலும், நல்லவாதல் - வாதங்கள் மூன்றிலும் அவர்கள் தோற்கச் சைவத்திற்கு வெற்றியாயினமையாலும், மிகவே நல்லவாதல் - சமணீங்கிச் சைவத் திருநெறிகடந்து வேந்தனும்நாட்டவரும் திருநீறணிந்தமையாலும் சைவம், அம்மை - அமைச்சர் அரசன் என்ற மூன்று பேரடியார்களைப் பெற்றமையாலும் கண்டு கொள்க; அடியார் அவர்க்கு - அடியார்களுக்கும் அடிமைத்திறத்தில் வந்த அவர்க்கும்; - (2) என்பு - வீந்தாரிருவர் களேபரம்; கொம்பு - பன்றியின் கொம்பு; ஆமை - ஆமையின் முதுகோடு; ஏழை - உமையம்மை; ஒன்பதோடும்...நாள்கள் - நாண் மீன்களின் உற்பத்தி கிருத்திகை, முதலாக வருமென்றும், இங்குக் கூறிய 9-1-7-18 என்பவை கிருத்திகை முதலான எண்ணப்படுதலின் முறையே பூரம், கிருத்திகை, ஆயிலியம், பூராடம் என்றும், ஆறும் உடனாய நாள்கள் என்றது முன்கூறிய நான்கல்லாத எட்டு நட்சத்திரங்களாகிய பூராட்டாதி, மகம், கேட்டை, பரணி, சுவாதி, விசாகம், ஆதிரை, சித்திரை என்றும் கூறுவர். ஆக இப்பன்னிரண்டும் வழிநடைக்காகா நாள்கள் என்பர், "ஆதிரை பரணி கார்த்திகை யாயில்ய முப்பூரங் கேட்டை, தீதுறு விசாகஞ் சோதி சித்திரை மகமீ ராறும், மாதனங் கொண்டார் தாரார் வழிநடைப் பட்டார் மீளார், பாய்தனிற் படுத்தார் தேறார்" என்றதொரு (சோதிட கிரக சிந்தாமணி - கூடாநாள்) சோதிடநூல் வழக்கும் உண்டு; இவ்வாறன்றி வேறு முறையாகவைத்து எண்ணுவதுமுண்டு. நாள்கள் - நாண் மீன்கள்; - (3) திருமகள் - இலக்குமி; கலையதூர்தி - துர்க்கை; செயமாது - செயமகள்; பூமி - திசை தெய்வமான பல - எட்டுத் திக்கும் மேலும் கீழுமாகிய பத்தின் அதிதெய்வங்கள்; நெதி - நியதி என்பதன் மரூஉ; இவை ஆசற்று நல்லவாதல் தீமை கலவாத நன்மை பயத்தலும் சைவத்துக்குக் கேடு சூழ்வார்க்கு நன்மை பயவா திருத்தலுமாம்; இவை நன்மை செய்யவேண்டியவை செய்யாதிருத்தல் கூறியது; - (4) வடவால் - வடஆலமரம்; மறை ஓதும் - மறையின் பொருளை முனிவர்க்கு உணர்த்திய; "ஏரியலும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கி நின்று, நேரியனான் மறைப்பொருளை யுரைத்தொளிசேர் நெறியளித்தோன்" (தேவா). வடபால் என்ற பாடமும் உண்டு; காலனங்கி...நோய்கள் - இவை தீமை செய்வன தீமை செய்யாதிருத்தல் கூறியது - நோய்கள் - நோய் செய்யும் கொடிய சிறு தெய்வங்கள்; - (5) அவுணர் - இடி மின் மிகையான பூதம் - அவுணரும் பூதச்செயல்களும் தீய சத்தியுடையவை; மிகையான - தத்தம் அளவில் நில்லாது மிகைப்பட்ட; - (6) கோளரி ஆளரி - இவை கொடிய விலங்கின் சாதியால் வரும் ஏதங்கள் குறித்தன; - (7) வெப்பொடு வினையான - வெப்பு முதலிய நோய்களும் அவற்றுக்குக் காரணமான வினைகளும்; முன் நோய்கள் (4) என்றது நோய் செய்யும் கெடிய கால சத்திகள்; - (8) இலங்கை யரையன் தனோடும் இடரான - அரக்கர் முதலாயினரால் வரும் துன்பங்கள்; - (9) தேவர் வருகாலமான பலவும் - தேவராலும் காலக்கோட்பாட்டினாலும் வரும் ஏதங்கள்; அலைகடல் மேரு - கடலாலும் மலையாலும் வருவன; - (10) திருநீறு புத்தரொ டமணை வாதில் அழிவிக்கும் - புறச்சமயத்தாரால் வரும் தீமைகள்; இவற்றைப் போக்குவது திருநீறு; இது திடம் - உறுதி; இது பிற்சரித விளைவைக் கூறுமாறு பிள்ளையார் திருவாக்கினில் வெளிப்பட்ட திருவருளின் முற்குறிப்பு; திருநீற்றுப் பதிகமே சமணை வாதில் முதலில் தோற்கச்செய்து பின்னர் முறைப்படி அவர்களைக் கழுவேறி யழியவும் செய்தது; -