|
(11) பொழில் கொள்ஆலை - சோலைபோல நெருங்கிய கரும்புக்கூட்டம்; ஆலை - கரும்பு; "ஆலையஞ்சிலைவேள்" (கந்தபு - காமதக - 90) ஆலை விளை - ஆலை (கரும்பு) போல விளையும்; "கரும்பல்ல நெல்லென்ன" (65); வளர்செம்பொன் - பொன்போன்று விளையும் நெல்; நெல்லின் விலையாகப் பண்டமாற்றாகக் கொண்ட பொன் என்றலுமாம்; இங்குக் கரும்பும் நெல்லும் என்றுரைத்தலுமாம்; நான்முகனாதியாய பிரமாபுரம் - பிரமன் பூசித்தமையாற் பெற்ற பிரமாபுரம் என்ற பெயரைத் தன் பன்னிரண்டு பெயர்களுள் முதற்பெயராகக் கொண்ட பதி. தானுறு கோளும் உரைசெய் ஆன சொன்மாலை - பதிகக் குறிப்புக் கூறியபடி; ஆன் - ஆக்கச்சொல், ஆக்கம் தருவது குறித்தது. |
குறிப்பு :- இத் திருப்பதிகம் மிக்க சிறப்புடையது. இதனை நியமமாய்ப் பயில்பவர் தீமையெல்லாம் நீக்குதலும், வழிபோகத் தொடங்குவோர் இதனை எண்ணிச் சென்றால் தீமையின்றிச் சென்றுவருதலும் இன்றும் கண் கூடாகக் காணவுள்ள உண்மைகள். இது அகத்தியர் தேவாரத் திரட்டில் எடுக்கப்பட்டது. இதனுள் ஒவ்வொரு பாட்டிலும் அம்மையோடு நீங்காதிருந்து இறைவர் அருளும் நிலையும் பயனும் குறிக்கப்பட்டது காண்க. "வேயுறு தோளிபங்கன்" என்று அம்மையை முன் வைத்துத் தொடங்கிப் போற்றியது ஆலவாயின் குறிப்பு. |
|
2515.சிரபுரத்துப் பிள்ளையா ரருளிச் செய்த |
திருப்பதிகங் கேட்டதற்பின் றிருந்து நாவுக் |
கரசுமதற் குடன்பாடு செய்து, தாமு |
மவர்முன்னே யெழுந்தருள வமைந்த போது |
புரமெரித்தார் திருமகனா "ரப்பர்! இந்தப் |
புனனாட்டி லெழுந்தருளி யிருப்பீர்!" என்று |
கரகமலங் குவித்திறைஞ்சித் தவிர்ப்ப, வாக்கின் |
காவலருந் தொழுதரிதாங் கருத்தி னேர்ந்தார். |
617 |
(இ-ள்.) சிரபுரத்துப் பிள்ளையார்...உடன்பாடு செய்து - சீகாழிப்பிள்ளையார் முன் கூறியவாறு அருளிச்செய்த அந்தத் திருப்பதிகத்தினைக் கேட்டருளிய பின்னர்த், திருந்திய திருவுள்ளமுடைய திருநாவுக்கரசரும் பிள்ளையார் பாண்டிநாடு செல்வதற்கு உடன்பட்டு; தாமும்...போது - முன்னெல்லாம் போந்த நியமத்தின்படி அவர் முன்பதாகத் தாமும் எழுந்தருள அமைவு கொண்டபோது; புரமெரித்தார் திருமகனார்...தவிர்ப்ப-திரிபுரமெரித்த இறைவரது திருமகனாராகிய பிள்ளையார் "அப்பரே! தேவரீர் இந்த நீர் நாடாய சோழநாட்டில்தானே எழுந்தருளியிருப்பீராக!" என்று சொல்லிக் கைம்மலர்களைக்கூப்பி வணங்கி அவரது செயலைத் தவிர்ப்ப; வாக்கின் காவலரும்...நேர்ந்தார் - திருநாவுக்கரசர் தாமும் எதிர்தொழுது அரிதாம் திருவுள்ளத்தோடு இசைந்தருளினார். |
(வி-ரை.) திருப்பதிகங் கேட்டதற்பின் திருந்து நாவுக்கரசும் அதற்குடன்பாடு செய்து - திருப்பதிகங் கேட்பதன்முன் பிள்ளையார் பாண்டிநாடு செல்வதற் கிசையேன் என்ற அரசுகள், அதனைக் கேட்டபின் அச்செயலுக்குடன்பட்டனர்; திருப்பதிகத்தின் ஆணைசிவனதாணையே யாதலின். "புத்தரொ டமனை வாதி லழிவிக்கு மண்ணல் திருநீறு செம்மை திடமே" என்றும், "தானுறு கோளு நாளு மடியாரை வந்து நலியாத வண்ண முரைசெய், ஆனசொன் மாலை" என்றும் ஆணை நிகழ்ந்த |